குணசாலியான மாமியாராய் இருப்பது எப்படி?
குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்? என்று திருமண வீடுகளில் புதிதாகத் திருமணமாகப் போகும் பெண்ணைக் குறித்துப் பேசுவர். ஆனால் ஏற்கனவே திருமணமான மாமியார் குணசாலியான பெண்ணா? இல்லையா? என்பதைக் குறித்துப் பேசுவதில்லை. மாமியார் குணசாலியான பெண்ணாக இருந்தால் அவர்கள் பெற்ற மகனும் குணமுள்ளவனாக இருக்கக் கூடும். ஏனெனில் ஒரு தாயின் செயல்பாடுகள் பிள்ளைகளை மிகவும் கவருகின்றது.
ஒரு குடும்பத்தில் ஒரு தாய் இளம் வயதிலேயே கணவனின் அன்பை இழக்க நேரிட்டது. கணவர் ஊதாரியாகச் சுற்றிவிட்டு வீட்டிற்கு வருவார். சில மாதங்கள் வீட்டில் இருப்பார். திடீரென்று வெளியே வேலைக்குச் செல்கிறேன் என்று போய் விடுவார். ஆனால் சம்பளத்தை வீட்டிற்கு அனுப்பமாட்டார். அந்த பெண், தன்னுடைய மகனையும் மகளையும் மட்டுமே சொத்தாக நினைத்து வாழ்ந்து வந்தாள். மகன் வளர்ந்து வரவர, உன் அப்பா தான் சரியில்லை. நீதான் என்னைக் காப்பாற்றணும் என்று பேசிபேசியே வளர்த்தாள் "தாயில் சிறந்த கோவில் இல்லை" என்று தன் அம்மாவே தெய்வம் என்று வாழ்ந்தான். தாயும் தன் கணவன் மீது வைக்கிற அன்பை மகன் மீது பொழிந்தாள். மகனும் அம்மாவை யாரும் சிறிய வார்தைக் கூடச் சொல்ல முடியாத அளவிற்கு உயர்வாக மதித்தான்.
திருமணமானதும் புதிதான குடும்ப வாழ்விற்குள் நுழைந்தான். அவன் ஏற்கனவே தெய்வமாக நினைத்து வாழ்ந்து வரும் தாய், தன் மகன், தன் மீது அன்பு செலுத்துவதை விட்டு விடுவானோ என்ற பயம் உள்ளுக்குள்ளே இழையோடிக் கொண்டிருந்தது. மகனை எப்பொழுதும் போல் உபசரிக்க முற்பட்டால் தாய். சில நாட்களாக மனைவி செய்ய வேண்டிய கடமைகளை, தாய் செய்வதைப் பார்த்து புதிதாக வந்த மருமகள் பொறுத்துக் கொண்டாள். நாளடைவில் சகிக்கும் மனதை இழந்த மனைவி, அவன் தாய் மீது கோபத்தைக் காட்ட ஆரம்பித்தாள். கோபத்தில் உன் மகனுக்கு யார் மனைவி நீயா? அல்லது நானா? என்று எரிந்து விழுந்தாள்.
புழுவாய் துடித்தான் மகன்.என் தாயை எதிர்த்துப் பேசினால் இந்த வீட்டில் உனக்கு இடம் இல்லை என்று பொரிந்து தள்ளினான். அப்போது அவன் தாயின் உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கினது. தன் மகன் தன் பக்கம் இருக்கிறான் என்கிற உறுதி தாய்க்கு மேலோங்கியது.
மாமியார், மருமகளைப் பார்த்து, இங்கே பாரு நான் உயிரோடு இருக்கும் வரை நான்தான் குடும்பத்தை நடத்துவேன். ஒழுங்கு மரியாதையா அடக்கி வாசி. இல்லைனா என் மகனுக்கு வேறே பெண்ணைத் திருமணம் பண்ணி வைத்து விடுவேன் என்று தனியாக மிரட்டினாள் மாமியார். செய்வதறியாமல் திகைத்தாள் மருமகள்.
அனைத்து குடும்பப் பொறுப்புகளையும் தன் மகனே செய்து வருவதால், புதிதாக வரும் பெண் தன் இடத்தை (நிர்வகிக்கும் பொறுப்பை) பெற்று விடக்கூடாது என்ற மனஓட்டமே, மருமகளுக்கு ஏற்படுத்தும் இடையூறாக மாறிவிட்டது. அறிந்தோ, அறியாமலோ இந்தத் தாக்கம் இளம் வயதில் கணவனை இழந்த அல்லது கைவிடைபட்டப் பெண்களுக்கு ஏற்படுவது இயல்பு.
இதனை வாசிக்கும் போதே மாமியாராகிய நீங்கள் தவறு செய்யாத அளவிற்குப் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் உங்கள் வீட்டிற்கே வரும் மருமகள் சீக்கிரத்தில் உங்கள் வீட்டை விட்டு போய் விட நேரிடும். தன்னுடைய மகன் மீது உங்களுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், அவன் எதிர்காலம் அதாவது உங்கள் மகன் உங்கள் வாழ்க்கைக்குப் பின்னும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து உங்கள் மனதைச் சரிபடுத்திக் கொள்ளுங்கள். இனி வாழப்போவது உங்கள் மகனும், மருமகளும் தானே. எனவே உங்கள் மகன் மீது உள்ள அக்கறையை சற்று குறைத்து, மருமகள் உங்கள் மகன் மீது அக்கறை செலுத்த இடம் கொடுக்க முடிவெடுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
Comments
Post a Comment