சீசீ இந்தப் பழம் புளிக்கும்
இளம் பெண் ஒருவருக்கு வரன்பார்த்துக் கொண்டிருந்தனர். பல வரன்கள் வந்தும் வரதட்சணையால் திருமணம் தள்ளிக் கொண்டே போனது. உறவினரின் வீட்டுத் திருமணவைபவத்திற்குச் சென்ற போது இந்த இளம்பெண் ஒரு பணக்காரவீட்டாருக்கு முன் தென்பட்டார். இரண்டே நாளில் வீடு தேடிவரன் வந்தது. நகை, ரொக்கம் எதுபற்றியும் கவலைப்பட வேண்டாம். பெண்ணைத் தந்தாலே போதும் என்றனர் அந்த பணக்காரவீட்டார். கைகால் புரியாமல் பெண் வீட்டார் இருந்தார்கள். சொத்து, சுகம், கார், பங்களா என்று ஏகப்பட்ட வசதிகள். மகள் பெரிய பணக்காரியாக வாழப்போகிறாள் என்று ஊர் முழுவதும் தம்பட்டம் அடித்தனர் பெற்றோர். திருமணம் மிகச் சிறப்பாக மாப்பிள்ளை வீட்டாரின் செலவிலேயே நடைபெற்றது.
நாட்கள் சில ஓடின, பெற்றோர் தங்கள் மகளைப்பார்க்க ஒரு நாள் போயிருந்தனர். அங்கே அவர்களை மதிப்பாக நடத்தவில்லை. மருவீட்டிற்கு மருமகனை அழைத்ததற்கு நல்ல மெத்தை இல்லை வீட்டில் ஏ.சி. இல்லை என்று கூறி, வர மறுத்துவிட்டார். மருமகனை மருமகனாகப் பார்க்க முடியவில்லை கலெக்டரிடம் பழகினதுபோல் பழக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த பெண்ணுக்கு உதவிச்செய்யவோ, அவளுக்காகப் பரிந்து பேசவோ அங்கு யாரும் இல்லை. வீட்டில் அவளது கருத்துக்கு முக்கியத்துவம் கிடையாது. அழகுபதுமையாக மட்டுமே பார்க்கப்பட்டாள். தன் மனைவிக்குச் சீட்டு விளையாடாத தெரியாததால் குடிகார நண்பர்கள் மத்தியில் அந்நியப்படுத்தப்பட்டு கேவலமாகப் பார்க்கப்பட்டாள். பலவித அவமானத்தையும் சகித்து வாழவேண்டிய சூழல் ஏற்பட்டது. தன் வீட்டை விட்டுச் சென்று தனித்து தன் மனைவியுடன் வாழ இயலாது என்று தெரிந்ததும் அடிமையாக நடத்தப்பட்டாள் மனைவி.
இன்றும் இதைப்போன்று சுயமாக சம்பாதிக்கும் சக்தியும் கல்வியறிவும் பெண்களுக்கு இல்லாதிருந்தால் அப்படிப்பட்ட பெண்கள் மனிதப் பிணங்களாகவே மதிக்கப்படுகிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் பலர் தாழ்வு மனப்பான்மையினால் தவிக்கிறார்கள்.
அதே வேளையில் சில ஆண்கள் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து படித்து வாழ்க்கையில் உயர்ந்து, நல்ல சம்பளம் வாங்கினால் பணக்கார குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளுக்காக அந்த ஆண்களை பிடித்துபபோட விரும்புகின்றனர். இந்த வகையான ஆண்கள் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறியதால் பணம் ஒவ்வொன்றையும் எண்ணி எண்ணி செலவளிப்பர். இப்படிப்பட்ட ஆண்களுடன் வாழ்க்கைப்பட்ட வரும் பணக்கார பெண்கள், கஷ்டம் என்பது என்னவென்று தெரியாதவர்களாக இருப்பார்கள். பசிதெரியாமல் விலை உயர்ந்த உணவை வாங்கி உண்டு மகிழ்ந்திருப்பர் கண்களில் பார்த்த பொருட்களையெல்லாம் அவசியம் இல்லாமல் வாங்கி குவித்திருப்பர் வேறு இடங்களுக்குச் செல்லும் போதெல்லாம் புதுப் புது உடைகளை வாங்கிவருவர். இவர்களுக்கு கஷ்டம் என்பது என்னவென்றே தெரியாமல் இருக்கும்.
வசதி படைத்த இந்தப் பெண்கள் திருமணமான பின்னர் ஏழையாய்இருந்து வளர்ந்த ஆண்களோடு காலத்தைத் தள்ளுவதற்குக் கஷ்டப்படுகின்றனர். சிறுவேலைகளையும் வேலைக்காரியே செய்வதால் சோம்பேறியாக மாறிவிடுகின்றனர். என்மகளுக்கு காபி கூட போடத்தெரியாது என்று பெருமைப்பட்டுக் கொள்ளுவர் பெற்றோர். இவர்கள் புகுந்த வீட்டில் உள்ளவர்கள் செய்யும் வேலையைப் பார்த்து ஏளனம் செய்வதும், மதிப்புக் கொடுக்கவும் மறந்து விடுவர். பணக்கார சூழலை தக்கவைத்துக்கொள்ளும் மனப்பான்மையோடு பெற்றோரின் வீட்டைத் தஞ்சமாகக் கொண்டு அடிக்கடி சென்று தங்க ஆரம்பிக்கின்றனர். காலபோக்கில் மாதக்கணக்காகத் தங்கவும் செய்கின்றனர். தன் கணவர் தன்னுடைய பெற்றோரோடு தங்குவதற்கு வரும்படியாக நச்சரிப்பர். தன்னையே நம்பியிருக்கும் குடும்பத்தை விட்டு விட்டுச் செல்ல முடியாமல் ஆண்கள் தவியாய் தவிப்பர். சிலர் வழியில்லாமல் மனைவியிடம் சண்டையிட்டு அசிங்கப்படக் கூடாது என்று கூடவே செல்லுகின்றனர். சிலர் மறுப்பதால், பிரச்சனைகள் பூதாகரமாக மாறி குடும்பமே மகிழ்ச்சியை இழந்து நிற்கும். இப்படிப்பட்ட ஆண்கள் தவறான முடிவு எடுத்து விட்டதாக வருந்துகின்றனர். தாழ்வு மனப்பான்மையும் அவர்கள் வாழ்க்கையை இரணமாக மாற்றுகிறது.
இப்படிப்பட்ட பணக்கார பெற்றோரிடம் அனைத்துப் பொருட்களையும் பெண்கள் வங்கிக்கொள்ளுவதால் கணவரின் சம்பளமும் அலட்சியப்படுத்தப்படுகிறது. பிச்சைக்கார காசாக சம்பளம் மதிக்கப்படுகிறது. மனைவிக்குப் பிடித்த சுடிதார் வாங்கிக்கொடுத்தால் இதை யார் உடுப்பார்கள் என்று பெட்டியின் மூலையில் போட்டு விட்டு எங்க அம்மா வாங்கிக் கொடுத்தது எவ்வளவு அழகான விலை உயர்ந்த சுடிதார் என்று உடுத்திச் செல்லும் போது அவன் இருதயத்தைப் பிழிந்து இரத்தத்தை எடுப்பது போல் துடிப்பான். கஷ்டப்பட்டு உழைக்கும் கணவரின் சம்பளத்தை இப்படிப்பட்ட பெண்கள் அவசியமில்லாத காரியங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். அதனை கணவன் கண்டித்தால் அவள் கூறும் மதிப்பற்ற இழிவான வார்த்தைகளைக் கேட்க நேரிடுகிறது. பெண்ணின் பெற்றோரும் மக்களுக்குச் செல்லம் கொடுத்து அவள் பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
எனவே குடும்ப வாழ்க்கையில் நரக வாழ்க்கையைத் தவிர்க்க வேண்டுமானால் கல்வி, சொத்து, அந்தஸ்து போன்றவற்றில் ஓரளவிற்குச் சமமான குடும்பங்களைத் தேர்ந்த்தெடுப்பதுதான் காலச் சிறந்தது. நம் குடும்பத்தின் தகுதிக்கு மிஞ்சிய இடங்களில் சம்பந்தம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
அழகைப் பார்த்து படிக்காத பெண்களையும், ஏழையான பெண்களையும், திருமணம் முடிக்கும் ஆண்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் திருமணம் முடிந்த பின்னர், தான்செல்லும் இடங்களுக்கு அழைத்துச் சென்றால் சரியாக உட்காரத்தெரியவில்லை, நடந்து கொள்ளத் தெரியவில்லை என்று பணக்கார ஆண்கள் பேசிவிடுகின்றனர். உன்னைப்போய் திருமணம் செய்து அவமானப்படுகிறேன் என்று இகழுகின்றனர், இதனால் பெண்கள் தாழ்வுமனப்பான்மையில் தவிக்கின்றனர். நம்முடைய மதிப்பு, பொருளாதாரம் கல்வி இவையெல்லாவற்றையும் யோசித்துதான் திருமணம் செய்ய வேண்டும் இதனை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்.
திறமையுள்ள பெண்கள் பலர் திறமையில், கல்வியில் தன்னைவிட குறைந்த அணைகளைத் திருமணம் செய்து கொள்ளும் போதும் சிக்கல் ஏற்படுகிறது. மனைவியின் திறமைகள் பற்றி புகழ் பாடுவதை சில ஆண்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. பெண்களை மேடைகளில் அமரவைத்து புகழ் பாடிவிட்டு, கணவனை யாரும் கண்டு கொள்ளாமல் புறக்கணிக்கப்படும் போது தாழ்வுமனப்பான்மையால் ஆண்கள் தவிக்கின்றனர்.
பல லட்சங்களை சம்பாதிக்கும் பெண்களுக்கு சில ஆயிரம் சம்பாதிக்கும் கணவனைப் பார்க்கும் போது இழிவாகவும், ஏளனமாகவும் தெரிகிறது. கணவனுக்கு உரிய மரியாதையை கொடுப்பது இல்லை. பிறருக்கு முன்பாக உதாசீனமாக எடுத்தெறிந்து பேசி விடுகின்றனர். குடும்பத்தில் அதிகம் சம்பாதிப்பவர் தான் குடும்பத்தில் பெரியவர் மற்றவர் தாழ்ந்தவர் என்ற எண்ணம் மேலோங்கி விடுகிறது ஆபத்தானது. குடும்பத்தை யார் ஆட்டிப் படைப்பது என்பது முக்கியம் அல்ல மகிழ்ச்சியோடு சம்பாதிப்பதை வைத்து குடும்பமாக அனுபவித்துத்தான் முக்கியம். மற்றவரை ஏளனமாய்ப் பார்ப்பதை விட்டு விட்டு ஒவ்வொருவரின் தனித்திறமையையும், அறிவையும் ஊதியத்தையும் முழுக்க குடும்ப மேன்மைக்காகப் பயன்படுத்தி மகிழ்ச்சியடையவ வேண்டும். கணவன் மனைவியில் யாரிடம் அதிக திறமை அல்லது பணம் சம்பாதிக்கும் தகுதியிருக்கிறதோ அவர்கள் மற்றவரின் திறமையின்மையைச் சொல்லி குறை கூறுவதை விட்டு, மற்றவர்க்கு தாழ்வுமனப்பான்மை ஏற்பட இடங்கொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தன்னலமற்ற அன்பை குடும்பவாழ்விற்க்கு மையமாக்கி குடும்பத்தைக்கட்டி எழுப்ப முற்பட வேண்டும்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
மேலும் பல செய்திகளை படிக்க click: blog.TdtaChristianMatrimony.com
Comments
Post a Comment