திருமணம் அவசியமா?


அன்று பாலிய திருமணம் நடைபெற்றது. இன்று காலம் தாழ்த்திய திருமணம் நடைபெறுகிறது.        

ஒரு வீட்டிற்கு ஜெபிக்கச் சென்றிருந்தேன். ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார்.  அனைவரும் 30 வயதிலிருந்து 40 வயது உடைய பெண் மற்றும் ஆண் பிள்ளைகள்.  யாருக்கெல்லாம் திருமணமாகி விட்டது என்று கேட்டேன்.  அதற்கு ஒருவருக்கும் திருமணமாகவில்லை.  ஜெபியுங்கள்.  கர்த்தர் காட்டுவார் என்றனர்.  எனக்கு ஒரு பெரிய கேள்வி, நன்கு படித்த பிள்ளைகள், ஆனால் அந்தப் பெற்றோர் தங்களுக்கு ஆண்டவர் சிறந்த மருமக்களைத் தருவார் என்று காத்திருப்பது ஆச்சரியமாக இருந்தது. படிப்பிற்காக வருடங்களை செலவழித்து விட்டனர் என்பதை உரையாடல் மூலம் தெரிந்துக் கொண்டேன்.  

திருமணம் என்பது வாழ்விற்கு அவசியம்தானா என்ற கேள்வியை இளைஞர்கள், இளம் பெண்கள் பலர் எழுப்புகின்றனர்.  கலாச்சார மாற்றத்தினால்,  கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதினால் அதிவேகமாக காலங்கள் சென்றுவிடுகின்றன.  வேலைக்கேற்ற கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கும், திருப்தியடைவதற்குமே நாட்கள் சென்று விடுகின்றன.  இதனால் திருமணத்தைப் பற்றி யோசிப்பதற்கே வயது 27-யைத் தாண்டிவிடுகிறது.  இது ஆண்களுக்குப் பிரச்சனையில்லை என்று அல்ல.  ஆனால் பெண்களுக்கு வரன்பார்ப்பதில் சிக்கல்களை அதிகம் உருவாக்குகின்றது.  கல்விமோகம் என்பது அவசியம்தான் ஆனால் அது திருமணவாழ்விற்குத் தடையாக அமையக்கூடாது.

முப்பத்தொன்பது வயதிற்கு மேற்பட்ட வாலிபனைப் பார்த்தேன். வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.  ஆனால் திருமணம் செய்யவில்லை.  ஏன் என்று கேட்டேன்.  அதற்கு நன்கு பணம் சம்பாதித்து, தொழில் விருத்தியான பின்புதான் என்றார்.  அப்படி என்றால் உங்கள் லட்சியம் என்ன என்றேன்.  பெரிய பணம் படைத்த வியாபாரி ஆக வேண்டும் பின்புதான் திருமணம் செய்ய வேண்டும் என்றான்.  

இப்படித்தான் சிலர் நல்ல வேலைவாய்ப்பு கிடைத்த பின்னர்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று அதற்கான முயற்சியிலே தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.  அதிலும் குறிப்பாக அரசுபணி கிடைத்தால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று அதற்காக தேர்வு எழுதிக் கொண்டேயிருப்பார்கள். வயது 40-யைக் கடந்தாலும் அதற்கான தேடல் மட்டும் ஒழியாது.  இறுதியில் திருமணம் செய்ய வேண்டிய காலம் கடந்து போய்க்கொண்டேயிருக்கும். மற்றோருபுறம் தனக்குத்தான் அரசு உத்தியோகம் இல்லையே அடலீஸ்ட் நமக்கு வரப்போகும் கணவனாவது அரசுப் பணியில் இருந்தால் நலமாக இருக்கும் என்ற ஏக்கத்தோடு அடுத்தத் தேடலுக்கு வருவர்.  காலம்தான் வீணாகிப்போகுமே ஒழிய அரசுப் பணியில் உள்ளவர்கள் எல்லாம் அரசுப் பணியில் இருப்பவர்களையே திருமணம் செய்யவேண்டும் என்று இவர்களைத் தள்ளிவிடுவர்.  எனவே காத்திருந்து காத்திருந்து வந்த நல்ல வாய்ப்பையெல்லாம் போய்விடும் இறுதியில் தனிமரமாகத் தவிப்பர்.  

    நமது கிறிஸ்தவத்  திருமணத்தகவல் மையத்திற்கு ஒரு இளம்பெண் வந்திருந்தாள்.  வெளிஊரில் பணியாற்றியவர்.  வயது 34 ஆகிவிட்டது.  திருமணம் ஒழுங்காகவில்லை. அதற்காகத்தான் வரன் பார்க்கவந்தேன் என்று கூறி நம்மிடம் பதிவு செய்ய வந்திருந்தார்.  பதிவு செய்தபின் ஏறக்குறைய 50 போட்டோவை எடுத்துப்பார்த்தாள்.  ஒன்றும் பிடிக்கவில்லை என்று கூலாகக் கூறிவிட்டு ஒன்றும் நமக்கு செட்டாக மாட்டேங்குது என்றார்.  எனக்கு வயது 34 ஆகி விட்டது.  ஆனால் என்னைப் பார்க்கும் போது 21 வயதுபோல் தான் தோற்றமளிப்பேன் என்று கூறிக்கொண்டு சிங்கிளாகச் சுற்றி வருகிறார்கள்.  சிலருக்கு இதில் தனிசுகம்.  குறிப்பாகச் சென்னை, மும்பை போன்ற நகரங்களுக்கு வேலைவாய்ப்பைத் தேடிச்செல்லும் இளைஞர்கள் யாருடைய கட்டுப்பாடும் இன்றி தனியாக ஜாலியாக சுற்றிக் கொண்டிருப்பதை விரும்புவார்.  விரும்பிய நபருடன் ஊர் சுற்றலாம், விரும்பியபடியே பணத்தைச் செலவு செய்யலாம் என்ற உணர்வை உடையவர்கள் இவர்கள்.  திருமணம் செய்தால் சுதந்திரம் போய்விடும்.  வீட்டிற்கு நேரத்திற்கு வர வேண்டும்.  கூடாத நட்பைத் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருமணத்தைத்  தள்ளிக்கொண்டே போவது இவர்களின் மனநிலை.  

திருமணம் செய்யாமலே கூடிவாலும் பழக்கம் நகரங்களில் காணப்படுகிறது.  திருமணம் வேன்டாம் ஆனால் ஆணும், பெண்ணும், ஒரே வீட்டில் வசித்துவரும் கலாச்சாரம் பெருகி வருகிறது.  எப்பொழுது பிடிக்கவில்லையோ அன்று பிரிந்து விடலாம்.  நோப்ராப்ளேம் என்ற மனநிலைபோல் திருமணம்என்பது அவசியம் இல்லை என்ற எண்ணம் அவர்களுக்குள் வலுப்பெற்று வருகிறது.  அடுத்த ஒருநிலை அழகு அந்தஸ்தை மையமாகக் கொண்டு வாழ நினைப்பவர்கள்.  வாழ்ந்தால் அழகு தேவதையுடன் தான் வாழ்க்கை என்ற நிலைப்பாடு.  இவர்கள் தனது நிலையை உணராதவர்கள்.  தன்னுடைய நிறம், அழகு, குடும்ப அந்தஸ்து இவைகளைக் கருத்தில் கொண்டு அளவிற்கு அதிகமாக எதிர்பார்ப்பது, எனவே எத்தனை நல்ல இடங்கள் வந்தாலும் வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளுவது.  இறுதியில் தன்னை ஒருவருக்கும் பிடிக்கவில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மையில் போய் நிற்கின்றனர்.  சிலர் தகுதிக்கு அதிக படிப்பை எதிர்பார்க்கும் போது, அவர்களுக்கும் திருமண வாய்ப்புகள் குறைந்து போய்விடுகின்றன. திருமணம் பண்ணினால் டாக்டர்யைத்தான் திருமணம் செய்வேன் என மிகக்குறைந்த கல்வி கற்றவர்களும் விரும்புகின்றனர்.  நல்ல உயர்வான விருப்பம்தான்.  ஆனால் அந்த அளவிற்கு டாக்டருக்குப் படித்தவர்கள் இல்லையே ! 

சிலர் தங்களுக்குக் கடவுள் காட்டின நபர்தான் வேண்டும் என்று அடம்பிடிக்கின்றனர்.  அவர்/அவள் எப்படியிருப்பார்/ள் என்று கேட்டால் அதைக்கூற முடியவில்லை.  தங்களுக்குள்ளே ஒரு நபரின் தோற்றத்தை வைத்துக் கொண்டு இப்படித்தான் இருப்பார்கள் என்று கூறினால் பெற்றோர் எப்படிக் கண்டுபிடிக்க இயலும்.  வருடங்கள் பல கழிந்தாலும் கடவுள் காட்டினது கிடைக்காமல் போய் விடுகிறது.  கடவுள் காட்டினார், கனவில் கண்டேன் என்றும் கூறுவது சற்று சிந்திக்கத்தக்கது.  பெற்றோர் இதில் என்ன முடிவு எடுக்க இயலும்.  மனநலமருத்துவரிடம் தான் தங்கள் பிள்ளையை அழைத்துச் செல்ல வேண்டும்.      

சில குடும்பங்களில் மூத்த சகோதரி, அல்லது சகோதரனின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டால் அந்தப் பாதிப்புகள் நமக்கும் வருமோ என்று பயப்படுகின்றனர். கசப்பான அனுபவங்களைப் பார்த்ததும் அதை எதிர்கொள்ள இயலாதோ என்று திருமணத்தைத் தள்ளிக்கொண்டே செல்கின்றனர்.  எனவே பிரச்சனைகளை எதிர்கொண்டு வாழ, மனதைத் திடப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.  

பாலியல் சம்பந்தமான பிரச்சனைகள் இருப்பின் அவைகளை மறைப்பதற்காகவும் திருமணத்தைத் தள்ளிப் போடுகின்றனர்.  அவைகளைப் பெற்றோர் புரிந்து கொள்வதும், உரிய மருத்துவ உதவிகளைப் பெற்று பிள்ளைகளுக்கு நல்வழிகாட்டுவதும் அவசியமானதாகும்.  அதேவேளையில் பிள்ளைகளின் விருப்பு வெறுப்புகளைப் புரியாமல் பெற்றோர் திருமண ஒழுங்கு செய்ய முற்படுவதாலும், பிள்ளைகள் வெறுத்து ஒதுக்குகின்றனர்.  

பிள்ளைகள் கவனத்திற்கு 

     இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டும்.  வாழ்க்கையின் பருவ நிலைகளை உணர்ந்து, அந்தந்தக்காலத்தில் தம் தேவைகளைப் பூர்த்தி செய்ய முற்படவேண்டும்.  படித்து வேலைபார்க்க வேண்டிய காலத்தில் ஊரைச் சுற்றிவிட்டுப் பின் வாழ்க்கையைத் தொலைக்கக்கூடாது. அதிகமாகப் படித்து, அரசு வேலை கிடைத்த பின்தான் திருமணம் என்ற எண்ணத்தை விட்டுவிடவேண்டும்.  திருமணத்திற்குப் பின்னர் மேற்படிப்பு அவசியமானால் படிக்கலாம்.  சிறந்த வேலை வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும்.  அளவிற்கு மிஞ்சி அழகு, பணம், வருவாயை எதிர்பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.  கடவுள் காட்ட வேண்டும், சொப்பனத்தில் பார்த்த மாப்பிள்ளைதான் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உடையவர்கள் இது சரிதானா என்பதை நல்ல ஆரோக்கியமான மனநிலையுடைய போதகரிடம் அல்லது மனநல மருத்துவரிடம் ஆலோசித்து தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள்.  இல்லையெனில் வாழ்க்கையே வீணாகிப் போய்விடும்.

பெற்றோரின் கவனத்திற்கு 

திருமண வரன் என்பது முன்பு வீடு தேடிவரும்.  இன்று நாம்தான் தேடிச்செல்ல வேண்டும்.  திருமணத்தக்காவல் நிலையங்களில் பதிய வேண்டும்.  உறவினர் வழியாகத் தேடிச்செல்ல வேண்டும்.  பழைய காலத்தைப் போல நினைத்தால் அத்தனை பிள்ளைகளுக்கும் திருமணம் என்பது சிம்மசொப்பனம்தான்.  பெற்றோர் தங்கள் சுயநலத்திற்காகத் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தைத் தள்ளிப்போடக்கூடாது.  உங்கள் பிள்ளைகள் வாழ்க்கையை நீங்களே கெடுக்கிறீர்கள் என்று உலகம் உங்களை இழிவாகப்பேசும்.  வயதுவந்த பிள்ளைகளுக்கு ஏற்ற காலத்தில் திருமணம் முடிக்க வேண்டும் என்ற உணர்வு பெற்றோருக்கு இருக்க வேண்டும்.  அவர்கள் எதிர்காலத்திற்கு என்று சேர்த்து வைக்கவேண்டும். இல்லையெனில் குறிப்பிட்ட வயதில் திருமணம் செய்து வைக்க மனம் இல்லாமல் தள்ளிக் கொண்டே போகும்.  

பெண்பிள்ளைகள் படித்தஉடன் வெளிநாடு செல்வதற்கும், பட்டணத்தில் சென்று பணம் சம்பாதித்துவரட்டும் என்று கூறி அனுப்பி வைப்பதும் ஒன்றும் தவறல்ல.  ஆனால் பணம் சம்பாதிப்பதைப் குறிக்கோளாகக் கொண்டு, வயது அதிகமானபின்பு மணமகனைத் தேடினால் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.  எனவே பெற்றோர் பிள்ளைகளின் பணம் முக்கியமா என்பதை சரியான நேரத்தில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.      

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோசமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

மேலும் பல செய்திகளை படிக்க click: blog.TdtaChristianMatrimony.com


Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி