குணசாலியான பெண்ணும், அவர் பிள்ளைகளும்

 

என் மகள் என்னையே சுற்றி சுற்றி வருவாள், நான் செல்லாத இடத்திற்கு அவள் செல்லவே மாட்டாள்.  ஒரு நாள் கூட என்னை விட்டுப் பிரிந்து இருந்த பழக்கம் இல்லை.  அவள் விரும்பினபடியெல்லாம் விதவிதமான உணவைச் சமைத்துக் கொடுப்பேன்.  100 ரூபாய் கேட்டால்  200 ரூபாய் கொடுத்து பள்ளிக்கு அனுப்புவேன். நம்மையே சுற்றி வரும் இவள் எப்படித்தான் வாழப் போகிறாளோ என்று கவலைப்பட்டேன்.  ஆனால் சில நாட்களாகவே அவள் போக்கில் மாற்றம் இருக்கிறது.  

     என் அரவணைப்பை அவள் விரும்ப வில்லை.  என்னைக் காட்டிலும் நண்பர்களுடன் செல்போனில் அரட்டை அடிப்பதையே  விரும்புகிறாள்.  அவள் படிக்கும் அறைக்குள் போனால் வேண்டா வெறுப்பாகப் பார்க்கிறாள்.  வீட்டில் இருப்பதைக் காட்டிலும் வெளியே தங்கினால் ஜாலியாக இருக்கலாமே என்று எங்களைப் புறக்கணிக்கிறாள்.  எங்கள் மனம் கஷ்டப்படுகிறது.  எங்கள்  மகளா இப்படிப் பேசுகிறாள். நடந்து கொள்கிறாள் என்று எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது என்றார் திருமதி. ஷாலினி. 

     இளம் வயதில் இருந்து டீன் ஏஜ்க்குள் நுழையும் போது பிள்ளைகளுக்குள் ஏற்படும் மாற்றங்கள் என்பது வித்தியாசமானது.  அதனை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.  இல்லையெனில் அதிர்ச்சியாகத் தான் அமையும்.  டாக்டர். உ. கௌதமதாஸ் அவர்கள் இந்த வளர்ச்சி நிலையை விவரிக்க பட்டாம் பூச்சியின் வளர்ச்சி நிலையை ஒப்பிட்டுக் கூறுகிறார்.  பட்டாம் பூச்சியானது முதலில் முட்டையாக இருந்து பின் புழுவாக மாறுகிறது.  பின்னர் கூட்டுப் புழுவாக மாறுகிறது.  அதுவரையிலும் கூட்டில் இருப்பது தான் அதற்க்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.  அதன்பின் சிறகு முளைக்கத் தொடங்குகிறது.  மெதுவாகப் பறக்க ஆரம்பித்து, பறந்து போய் விடுகிறது.  மீண்டும் தான் வளர்ந்த கூட்டிற்கு வருவதில்லை.  சுதந்தரமாகப் பறப்பது தான் அதற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.  ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொன்றை சார்ந்து அதன் மகிழ்ச்சியைப் பெற்றுக் கொள்கிறது.  கூட்டில் இருக்கக் கூடிய பருவத்தில் கொடுத்தான் அதற்கு பாதுகாப்பாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கிறது.  சிறகு முளைத்த பின் கூடு பாதுகாப்பானதும் அல்ல, மகிழ்ச்சியைக் கொடுப்பதும் அல்ல. 

     இதை, போலத் தான் பெற்றோர் கையைப் பிடித்து நடக்கும் பருவத்தில் பெற்றோர் மகிழ்ச்சியடைகின்றனர்.  பிள்ளையும் மகிழ்கிறது.  தானாக நடக்க, ஓட ஆரம்பித்தபின் பெற்றோர் கையைப் பிடித்தால் அது இடையூறாக மாறுகிறது.  ஆனால் பெற்றோர் நினைப்பது, 25 வயதானாலும் தன் பிள்ளை தன்  கூட்டுக்குள் தான் சிறகை ஒடுக்கி வாழ வேண்டும் என்று நினைக்கின்றனர்.  அது பிள்ளைகளுக்குச் சிறையாக மாறி விடுகிறது.  உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு உங்கள் விருப்பப்படி வாழ்வது என்பது சிறு வயதில் நன்றாக இருந்தது.  ஆனால் எனக்குத் தான் சிந்திக்கத் தெரியுமே, என் அடிக்கடி ஆலோசனை சொல்லி என்னைத் துன்புறுத்துகின்றனர்.  சுதந்தரமாக விட்டுவிட வேண்டியது தானே என்று பிள்ளைகள் எண்ணுகின்றனர்.

     ஒவ்வொரு சொல்லுக்கும் எதிர்ச்சொல் சொல்வதை பெற்றோரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  பெற்றோர் வரைந்த கோட்டை, பிள்ளைகள் தாண்டிச் செல்வதைச் சகிக்க முடியவில்லை.       சிறுவயதாக இருக்கும் பொது எங்க அம்மாவுக்கு எல்லாம் தெரியும், எங்க அப்பா எல்லாவற்றையும் சாதிச்சிடுவாங்க என்று பெருமையாகப் பேசின பொண்ணு, இப்போது எங்க அம்மா மூளையே இல்ல. எங்க அப்பாவுக்கு உலகமே தெரியாது என்று புதுக்கதை பேசுகிறது.  காரணம் அவர்கள் டீன் ஏஜ் வந்ததும் அவர்கள் மூளைக்குள் மின்னல் போன்று திடீர் வெளிச்சத்தை உணருகிறார்கள்.  இதை போன்று நாம் ஒரு காலத்தில் உணர்ந்தோம் என்பதை பெற்றோர் உணர்ந்து பார்க்க வேண்டும்.

     நிழல் போன்று ஒட்டி உறவாடிய நாம் இன்று நம் பெற்றோரிடம் இருந்து எப்படி பிரிந்தோமோ அப்படிப்பட்ட வளர்ச்சியை நோக்கி நமது பிள்ளைகளும் நகரத் தொடங்கி விட்டனர் என்பதை உணர்ந்தால்தான் குணசாலியான பெண் டீன் ஏஜ் மகளோடு, மகனோடு மகிழ்ந்து வாழ முடியும்.  இல்லையென்றால் வீட்டிற்குள் மூன்றாம் உலகப் போர் தான். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோசமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

மேலும் பல செய்திகளை படிக்க  visit: blog.tdtachristianmatrimony.com

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி