சேட்டிங்கா சீட்டிங்கா! [Chatting or Cheating]


      இணையதளம் தகவல்களை உலகஅளவில் பரிமாறிக்கொள்ள உதவுகிற மிகப்பெரிய  சக்தியாகும்.  இது கடந்த நூற்றாண்டில் சிந்தித்துப் பார்க்க இயலாத மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது.  ஒரு மூலையில் சிறிய தொழில் செய்பவரும்  உலகத்திற்கு தம் பணியைச் சொல்வதற்கு ஏற்ற ஊடகம், அதே வேளையில் பல்வேறு தகவல்களை உட்கார்ந்த இடத்திலேயே பெற்றுக் கொள்ளக்கூடிய நுலகமாகவும் காட்சியளிக்கிறது.  தனிமையில் வாடுகிறவர்கள், நண்பர்கள் இல்லாமல் இருப்பவர்கள் Social Media உலகத்திற்குச் சென்றால் நேரம் தெரியாமலே பேசிக்கொண்டிருக்க முடிகிறது.  தொலைபேசி செலவையும் நமக்கு மிச்சமாக்குகிறது. இப்படிப்பட்ட நன்மைகள் இருப்பினும் டீன் ஏஜ் மக்கள் படு குஷியாக உள்ளே போய் கலக்கிவிட்டுப் பின் வெளியேற கரை தெரியாமல் விளிக்கின்றனர்.  இதனைப் பற்றி தெளிவான முடிவெடுக்க வேண்டியது அவசியம். 

இணையதளமும் வசதியும்

 இணையத்தில் செல்ல பல வழிகள் இன்று உள்ளன.  பல இடங்களில் பொது இணைய மையங்களில், பள்ளிகளில், நூலகங்களில் இணையதளத்தில் உலாவ வாய்ப்புள்ளது.  நண்பர்கள் வீடுகளிலுள்ள கணினியை பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.  பிள்ளைகள் தங்கள் வீட்டிலேயே கல்வி சம்பந்தமான தகவல்களைச் சேகரிப்பதற்கு இணையதள வசதியைக் கேட்கின்றனர்.  இதனை தவிர்க்க இயலாமல் உள்ளது.  இணையதள வசதியையே செய்து கொடுக்கக் கூடாது என்பதல்ல.  மாறாக இணையதளத்தால் வரும் பாதிப்புகளைப் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்பதும் இணையத்தளத்தைச் சரியாகப் பயன்படுத்தும் சூழலை உருவாக்குவதும் பெற்றோரின் கடமையாகும்.  பெற்றோருக்கு இணையத்தளத்தைப் பற்றித் தெரியவில்லையென்றால் சிறிது நேரம் செலவழித்துக் கற்றுக் கொள்வது ஒன்றும் தவறல்ல.  

முகமூடிகள் 

முகம் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் புனைப்பெயர்களில் பொய் சொல்லிக்கொண்டு இணையதளத்தில் வளம் வருகின்றனர்.  தள்ளாடும் கிழவனும் 16 வயது நிரம்பிய இளம்வலிபனாக வலம் வருகின்றான்.  பெண்பிள்ளைகள் வீட்டைவிட்டு வெளிய போகாமல் இருந்தால் சரி என்று நினைக்கின்றனர் பெற்றோர்.  அவர்கள் Social Media உலகிற்குள் நுழைந்து எண்ணற்ற நண்பர்களைச் சம்பாதிக்கிறார்கள் பின்னர் வலைக்குள் விழுந்த மீன் போன்று சிக்கித் திகைக்கின்றனர். சிறுவர்களும் ஓய்வு நேரத்தைச் செலவிடுவதாக Social Media உலகத்தில் நுழைந்து வீணாக நேரத்தைச் செலவிடுகின்றனர்.  எந்தவித நோக்கமும் இல்லாமல் மணிக்கணக்காகச் செலவிடுகின்றனர்.  இதனை இணைய வழி தீங்கிழைப்போர் எளிதாக Social Media மூலம் பிறரைக் கவிழ்த்து விடுகின்றனர்.  சிறுவர் மற்றும் இளைஞர் போல் வேஷம் போட்டு உரையாடலில் பங்கு பெறுகின்றனர்.  நேரம் ஆக ஆக நம்பிக்கை பெற்று சொந்த பிரச்சனைகளைப் பகிர்ந்து கொண்டு, அனைத்துத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளுகின்றனர்.  குறிப்பாக பெயர், முகவரி, தொலைபேசி என், பெற்றோரின் பேங்க் எண் என அனைத்து ரகசியங்களையும் கரந்து விடுகின்றனர்.  

இணையதளத்தில் வாழ்க்கை வேறு நிஜ வாழ்க்கை வேறு

சேட்டிங்கில் (chating) ஈடுபடுகிறவர்கள் பெரும்பாலும் சிக்கலானவர்கள் என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.  சில இளைஞர்கள் தங்கள் படத்தினை அனுப்புகின்றனர்.  உண்மையிலேயே அனுப்பப்பட்ட படம் அவருடையது தானா என்று யாருக்குத் தெரியும்? உங்கள் புகைப்படத்தினைக் கொடுத்துச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்! படத்தை எப்படி வேண்டுமானாலும் தவறாக மாற்றி உபயோகிக்க வாய்ப்புள்ளது.  

இணையதளமும் பின் விளைவுகளும்: 

1.   மாணவப்பருவத்தில் உள்ளவர்களுக்குப் படிப்பில் கவனம் சிதறுகிறது.  

2.   வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் முழு நேரப் பொழுது போக்காக அமைகிறது.  வெளியில் சென்று வேலை தேடும் எண்ணம் குறைந்துவிடுகிறது.  

3.   பணிக்குச் செல்லுகிறவர்கள் பணியில் நாட்டம் செலுத்தாமல் இணையதளத்தின் மீது நேரத்தைச் செலவிட நாட்டமாக இருக்கின்றனர்.  

4.   உண்மையான நண்பர்களுடன் நேரம் செலவிடாமல் பொய்யான அறிமுகம் இல்லாத நபர்களை நண்பர்கள் என்று நினைத்துப் பொன்னான நேரத்தை விரயம் பண்ணுகின்றனர்.  

5.   வெளியில் சென்று விளையாடி மகிழ்வதை விட, இருட்டறைக்குள்ளேயே புதைந்து போகும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.  

6.   நேரம்போவது தெரியாமல் நேரத்தை வீணடித்து விடுகின்றனர்.  

7.   பாலியல் குற்றச்செயல்களைச் செய்ய இளம் வயதிலேயே தூண்டப்படுகின்றனர்.

8.   வாழ்க்கைத் துணையைத் தேடுகிறேன் என்று ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட புகைப்படங்களை நம்பி வாழ்க்கையைத் தொலைத்து விடுகின்றனர்.  

9.   ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் காதல் செய்யும் கொடுமை நடக்கிறது.

சேட்டிங்கில் மாட்டிக் கொள்ளாதீங்க

     இணையதளத்தில் பலர் ஆழம் தெரியாமல் காலைவிட்டுவிட்டுப் படாத  பாடுபடுகின்றனர்.  எனவே கீழ்கண்ட காரியங்களில் கவனம் வேண்டும்.  

1.   நமது பெயர், முகவரி, தொலைபேசி எண், மொபைல் எண், பாலினம், வயது, திருமணவிவரம், வங்கிக்கணக்கு  எண், பாஸ் வேர்டு (கடவுச் சொற்கள்), இவற்றில் எதையும் மற்றவர்களுக்குக் கொடுக்கக்கூடாது.  

2.    மாணவர்கள் தங்களது பள்ளியின் பெயரையும் வேலைபார்ப்பவர்கள் தாம் பணிபுரியும் இடத்தையும் கொடுக்கக் கூடாது.

3.   நமது புகைப்படங்கள் மீதும் கவனம் வேண்டும். நமது புகைப்படங்கள் உருமாற்றப்பட்டுப் பயன்படுத்தப்படலாம்.  

4.   இணையதள நண்பர்களை நம்பக் கூடாது.   நாம் யாரென்ற உண்மையும் கூறக்கூடாது.  

5.   பெற்றோரோடு ஆலோசிக்காமல் இணையதள நண்பர்களைச் சந்திக்கக்கூடாது.  

6.   இணையத்தளத்திற்குச் செல்வதற்கென்று தனிப்பெயர்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

7.   இணையதளத்தைப் பின்பற்றி யாராவது உங்களைப் பின்தொடர்ந்தால் உடனடியாகப் பெற்றோரிடம் அல்லது காவல் துறையின் இணைய குற்ற விசாரணை பிரிவில் புகார் அளித்து விடுங்கள்.

விபத்தை தவிர்க்க முயலுங்கள்

1. உங்கள் பிள்ளைகள் சிறுவர்களானால் அவர்களோடு உட்கார்ந்து இணையதளத்தைப் பயன்படுத்துங்கள்.

2. உங்கள் கணினியை வீட்டில் தனி அறையில் வைக்காமல் பொதுவாக எல்லாரும் பார்க்கிற அளவில் பிரதான அறையில் வையுங்கள்.  

3. உங்கள் பிள்ளைகள் எந்த இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதனை அவ்வப்போது கவனித்துக்கொள்ளுங்கள்.  அதற்காக எப்பொழுதும் சந்தேகப்படாதீர்கள்.  

4.இணையதளத்தில் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதனைக்  கற்றுக்கொடுங்கள்.      

5.யாருக்கும் தெரியாமல் இணையதள நண்பர்களை சந்திப்பதைத்        தவிர்க்க முயலுங்கள்.

6.உங்கள் பிள்ளைகளுக்கென்று தனி மின்னஞ்சல்முகவரியை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

7.தவறான தொல்லைகொடுக்கிற மின்னஞ்சல்களைத் தடுக்க  மின்னஞ்சல் filterகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகளுக்கு

உங்கள் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டும் இணைய தளத்திற்கென்று செலவிடுங்கள். இல்லையென்றால் உங்கள் படிப்பிற்கு இடைஞ்சலாக மாறிவிடும், அநேக தகவல்களை அறிந்து கொள்ளலாம் என்று எண்ணிப் போன்னான நேரத்தை விரயம் செய்ய நேரிடும். நீங்கள் உறுதி எடுக்க வேண்டியது என்னவென்றால்,

1.     வாரத்திற்கு எவ்வளவு நேரம் செலவு செய்வேன்

2.     நண்பர்களுக்கு எனது பாஸ்வர்டை கொடுக்க      மாட்டேன்.

3.      எனது பெயர், முகவரி, போன் நம்பர், பெற்றோர் பற்றிய     தகவல்கள், வங்கி கணக்குகளை வெளிப்படுத்தமாட்டேன். 

4.     எனது படத்தையோ, குடும்பப் படங்களையோ வெளியிடமாட்டேன்.  

5.     இணைய நண்பர்களை பெற்றோருக்குத் தெரியாமல் சந்திக்கமாட்டேன்.

6.     என்னை யாரவது பின் தொடர்ந்தால் அதனை உடனே பெற்றோருக்கு அறிவிப்பேன். 

பெற்றோருக்கு

பிள்ளைகளுக்கு இன்று அரசு மடிக்கணினி வழங்க முன் வந்துள்ளது. எனவே சில மாதங்களுக்குள் கணினி வழியாக மாணவர்கள் செல்லப்போகிற பயணம் வெகு வித்தியாசமாக அமையவுள்ளது.  என் மகன், மகள் எப்பொழுதும் கணினியிலேதான் இருக்கிறான்(ள்) என்று பெருமையடிக்கப்  போகிறார்களா? அல்லது வேதனையடையப்போகிறார்களா? எப்படியிருந்தாலும் உங்கள் பிள்ளைகள் மீது உங்களுக்குக் கீழ்கண்டவாறு கவனம் தேவை.    

1. பயன்படுத்தும் நேரம்:

     பிள்ளைகள் எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள். பாடம் சம்பந்தமான பதிவிறக்கம்(Dowload) செய்கிறார்களா? Social Media யில் யாருடனும் இருக்கிறார்களா? என்பதனைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல் தேவை.

2.  கணினியை எங்கு பயன்படுத்துகிறார்கள்?

     மடிக்கணினியை மறைவிடமாக வைத்துப் பயன்படுத்துகிறார்களா? அல்லது பொதுவான இடத்தில வைத்து பயன்படுத்துகிறார்களா?  நீங்கள் செல்லும் போது Programme-யை மாற்றுகிறார்களா என்பதையும் கவனியுங்கள்.  

3. கணினியைப் பயன்படுத்திய பின் மனநிலை

      உங்கள் பிள்ளைகள் கணினியைப் பயன்படுத்தியபின் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களா? அல்லது மன அழுத்தம் நிறைந்தவர்களாக யாரிடமும் பேசாமல் இருக்கிறார்களா? என்பதனையும் உணர்ந்து அவர்களோடு பேசுங்கள்.  அவர்கள் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டால் கவனியுங்கள்.  

     இணையதளத்தை மகிழ்ச்சியான பல தகவல்களைத் தெரிந்து கொள்ள பயன்படுத்துங்கள்.  வீணான வலையில் வீழ்ந்துவிடாமல் இருக்க வடிகட்டி அமைத்துக் கொள்ளுங்கள்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோசமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

மேலும் பல செய்திகளை படிக்க visit: blog.TdtaChristianMatrimony.com

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி