பொன்னான காலங்கள்

    
    மாணவர்கள் மத்தியில் உள்ள நட்பு என்பது மிகவும் ஆழமானது.  இதனைப் பிரிக்க இயலாது.  ஒருவர் மற்றவருக்காகத் தங்கள் உயிரைக்  கொடுக்கும் அளவிற்குத் துணிந்து நிற்பர்.  ஒருவர் கஷ்டத்தில் மற்றவர்கள் பங்கெடுப்பது மற்றவர்கள் குடும்பத்தில் நடக்கும் இன்ப, துன்பக் காரியங்களிலே பங்கு கொள்வதும் அதிகமாக இருக்கும்.  

    மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்து பிரிந்து செல்லும் போது வருத்தத்தோடு பிரிவு உபசார விழாவை நடத்துவர். Golden Days எது என்றால், அது கல்லூரி வாழ்க்கை என்றே பலர் கூறுவர். காரணம் அவ்வளவு சந்தோஷத்தை அனுபவித்து மகிழும் பருவம் தான் மாணவப் பருவம்.       

    NSS.,  scout, sports  என்று பல்வேறு விதங்களில்  மாணவர்கள் ஓன்று சேர்ந்து செயல்பட்டு வந்தது.  மகிழ்ச்சியையும், மனபலத்தையும் ஒற்றுமை உணர்வையும் ஊக்கப்படுத்தியது.  ஆனால் இன்றைய மாணவப் பருவத்தில் ஜாதி உணர்வு, தலைதூக்கி வருவது வருத்தத்தைக் கொடுத்து வருகிறது. மாணவப் பருவத்தில் நல்ல நண்பர்களைச் சம்பாதிப்பதற்குப் பதில் எதிரிகளை சம்பாதித்து வருகின்றனர்.  

    என்ன மச்சான், என்ன Bro. என்று பழகி, மற்றவர் சாப்பாட்டை உண்டு, ஜாலியாகக் கல்லூரிக்கு வருவது குறைந்து வருகிறது.  அடுத்த ஊர்ப் பையன், அடுத்த ஜாதிப் பையன் என்று பார்த்து, என்ன மச்சான், என்ன Bro. என்று அழைப்பது ஒற்றுமை உணர்வை வளர்த்து வந்தது.  ஆனால் இன்று யார் எந்த ஊர், எந்த ஜாதி என்று விசாரித்துப் பழகி, குறுகிய வட்டத்தை உருவாக்குவதாக மாறிவிட்டது.

     என்னுடைய கல்லூரி நாட்களில் classmate என் அறைக்குள் வந்து, என்ன மச்சான், சட்டை புதுசா இருக்குது, கொஞ்சம் கொடு நான் போட்டுகிட்டு, காலேஜ்-யை ஒரு சுத்து சுத்திகிட்டு வாறேன் என்று என் சட்டையை அவன் போட்டுக்கிட்டு, அவன் சட்டையை நான் போட்டுக்கிட்டுப் போயிடுவேன். சில நாட்கள் வீட்டிற்கே என் சட்டையைப் போட்டுக்கிட்டுச் சென்றிடுவான். 

     கல்லூரி நாட்களில் 11 மணிக்கே பசிக்க ஆரம்பித்து விடும், உடனே யார் டிபன் பாக்ஸ்சயைத் திறக்கலாம் என்று யோசிப்போம். Break time ல் யார் தோசை, இட்லி கொண்டு வருவார்களோ, அதைக் காலி செய்து வைத்து விடுவோம்.

     மதிய உணவு நேரத்தில் காலி Tiffin box பார்த்துட்டு, டேய்.. யார் எடுத்து சாப்பிட்டது என்று விளையாட்டு சண்டையிடுவோம்.  பின்னர் கேன்டீன் சென்று உணவு வாங்கிக் கொடுப்போம்.

     வெஜிடேரியன் சாப்பிடும் நண்பர்களுக்கு எப்படியாவது மட்டன் சாப்பாடு கொடுப்பதற்கு ட்ரை பண்ணுவோம்.  இது எல்லாம் விளையாட்டாகத் தான் இருக்கும்.  அப்பொழுது அவன் எந்த ஜாதி என்று கேட்டுது தெரிந்ததும் இல்லை.  நான் என்ன ஜாதி என்று அவன் கேட்டதுமில்லை. எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற உணர்வு தான்.  

  இன்றும் அந்த நண்பர்களை எப்பொழுதாவது தேடிப்போய்ப் பார்க்க வேண்டும் என்ற உணர்வு உள்ளுக்குள்ளே மறைந்து காணப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

 எனது திருமணத்திற்குக் கல்லூரி நண்பர்கள் எல்லாரும் வந்து கலந்துக்கிட்டு, ஜாலியாகப் போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு, சின்ன கிபிட் கூட கொடுக்காம, 'மச்சான், கலக்கிட்டீங்க போங்க' என்று கைக்கொடுத்துட்டு, நல்ல சாப்பிட்டுகிட்டு போனாங்க.  சம்பிரதாய கிபிட் என்று எதுவும் நண்பர்களுக்கு அவசியம் இல்லை.  

 நம்ம வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படாம, மச்சான் பிச்சு உதறிட்டடா... என்று வாழ்த்தும் உள்ளங்கள் தான் நண்பர்கள் வட்டம்.  இதை இழந்து போகாதீங்க ப்ரண்ட்ஸ்...

 ஜாதி என்பது குறுகிய மனப்பான்மையை உருவாக்கக் கூடியது.  சுயநலவாதிகள், தங்களது லாபத்திற்காக நச்சு விதைகளை நம்மீது அள்ளி  வீசுகின்றனர். உன் பிரச்சனைக்கு நான் வருவேன் என்று வீரவசனம் பேசுவார்கள்.  நாம் சண்டையில் உயிர் விட்டால் அவர்கள், நம் பெயரைச் சொல்லி தங்கள் வாழ்க்கையின் படிக்கட்டாக மாற்றிக் கொள்ளுவார்கள்.  நாம் சண்டையிட்டு, மண்டையைப் போடமாட்டோமா என்பதே அவர்கள் நோக்கம்.  நல்லவர்கள் போல் நடிக்கும் நயவஞ்சகர்களை நம்பிப் படிக்கும் வயதில் பாழாய்ப் போய்விடாதீர்கள்.  

  ஜாதித் தலைவர்கள் பிறந்த நாளில் கேக் வெட்டுவது,  ஜாதி பெயரால் கையில் வர்ணம் போட்டு கயிறு கட்டிக்க கொள்வது, சாதியைக் காட்டிக் கொள்ள பலவர்ண பொட்டு வைப்பது, உனக்குப் பெருமையாகத் தோன்றலாம்.  ஆனால் உன் அருகிலிருக்கும் நண்பனை உன்னைவிட்டுப் பிரித்துவிடும். 'சாதிகள் இல்லையடி பாப்பா'  என்று பாடினார் பாரதியார்.  அவர் மறைந்தும் சாதி மட்டும் மாணவர்களுக்குள் மறையாமல் மரமாய் வளர்ந்து வருகிறது.  

     ஜாதி என்ற சிறிய வட்டத்தை விட்டு வெளியே வரும் போது எண்ணற்ற நம் வாழ்வில் முன்னேற, கைக்கொடுக்க ஆயத்தமாக இருக்கிறார்கள்.  ஒருவன் விபத்தில் மாட்டினால் மற்றோருவன் குருதியைக் கொடுக்கிறான்.  அப்பொழுது எந்த சாதிக்காரன் இரத்தம் என்று கேட்பதில்லையே! 

      இயேசு கிறிஸ்துவும் உலகில் உள்ள அனைத்து மக்களையும் நண்பனாக நேசிக்கக் கூறினார்.  இறைவன் மனிதனைப் படைக்கும் போது தம் சாயலாகவே படைத்தார் (ஆதி. 1:27), உலகில் சாதிகளை மனிதன் தான் உண்டாக்கினான் சுயநலத்திற்காக.

     ஆகவே, சுயநலத்தை விட்டு விட்டு அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்று அன்போடு பழகுவோம்....! ஜாதியை மறப்போம்....!!  

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

மேலும் பல செய்திகளை படிக்க click: blog.TdtaChristianMatrimony.com


Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்