இல்லறத்தில் உறவு மேம்பட
இல்லற வாழ்வில் திருமணங்கள் ஒன்றுபட்டு இருவரின் வாழ்வும் மேம்பட வேண்டும் என்ற எண்ணம் தற்காலத்தில் குறைந்து வருவது வேதனைக்குரிய காரியமாகும். திருமணமான பின்பும் சுயநலமான "நான்" என்ற வட்டத்தை விடாமல் பிடித்துக் கொள்ளும் மனப்பான்மையால் குடும்பத்தின் சந்தோஷம் பாதிக்கப்படுகிறது.
தன் அழகு குறைந்து விடக்கூடாது என்று விரும்புகிற பெண்கள் எப்பொழுதும் முக அழகுக் கலையைப் பயன்படுத்திக் கொண்டு முகத்தில் தயிரையும், தக்காளிச் சாறையும் பிழிந்து ஊற்றி முகத்தைப் பாதுகாப்பதும், அழும் தன் பிள்ளைக்குக்கூட உதவிட மறுத்துப் பாட்டியிடம் போ அல்லது அப்பாவிடம் போ என்கிட்டே வராதே என்று தன் சுயநலத்தையே பெரிதுபடுத்துகிற போது அவர்கள் வாழ்வு இயற்கையான குடும்ப வாழ்வை விட்டு வெளியே வந்து விடுகிறார்கள்.
திருமணத்திற்குப் பின்னும் பிள்ளைகளுக்காக, கணவனுக்காக வாழ விருப்பம் இல்லாத சூழலில் வாழும் பெண்கள் துரதிஷ்டமானவர்களே. அதே போன்று உழைத்த சம்பளத்தை எல்லாம் ஊதாரித்தனமாகச் செலவழித்து விட்டு, மனைவியின் பணத்தையும் எடுத்துப் பயன்படுத்தி விட்டு, பிள்ளைகளைச் சரியாகப் பள்ளிக்கு அனுப்பாமல் நடுத்தெருவில் விடும் ஆண்களும் துரதிஷ்டமானவர்கள். இப்படிப்பட்ட கணவனோ, மனைவியோ அமையும் போது வாழ்க்கைத் துணையின் நிலைமை நரக வேதனை தான். சுயநல வட்டத்தை விட்டுப் பழகும் மனப்பான்மை இல்லாத காரணத்தினால் ஒரு பெண் தன் மாமியார், மாமனார், அம்மா, அப்பா, கணவன், பிள்ளை, அருகில் உள்ள வீட்டார், சொந்த பந்தங்கள் எல்லாவற்றையும் இழக்க நேரிடும். இறுதியில் என்னை ஒருவரும் நேசிப்பதில்லை. என்னை யாரும் புரிந்து கொள்ளவதில்லை, என்னை யாருக்கும் பிடிக்காது என்று தன்னையே ஓரங்கட்டிக் கொள்ளுவார்கள்.
ஒன்றுமில்லாத தம்பதியினர் தங்களுடைய பழகும் திறமையினால் பல பிரபலமானவர்களுடன் கூட நல்ல தொடர்பை வைத்திருப்பார்கள். தங்களுக்குள்ளும் மகிழ்ச்சியாயிருப்பார்கள். சிலர் மிகவும் பணக்காரத் தம்பதியினராக இருந்தாலும் உறவுகளை இழந்து, சம அந்தஸ்து உள்ளவர்களால் கூட மதிக்கப்படாத அளவிற்குத் தள்ளப்படுவார்கள். கணவன் மனைவிக்குள்ளேயே நன்றாக வேதனைப்படுவர், காரணம் பிறரோடு உறவு வைப்பதில் காணப்படும் சிக்கல்களே. நாம் விரும்பாத நபர்களோடு கூட சுமுகமான இனிமையான இனிமையான உறவை வளர்த்துக் கொள்ள நம்மைப் பக்குவப்படுத்துவதைவிட மிகப் பெரிய பயிற்சி உலகில் எதுவும் இல்லையென்றார் ஆரிகன் என்பவர்.
அப்படியானால் நாம் திருமணம் செய்த கணவன் அல்லது மனைவியோடு அல்லது மனைவியோடு கூடப் பழக முடியாத அளவிற்கு விரும்பத்தகாத குணங்கள் இருப்பினும் அதை அனுசரித்து அவர்கள் விரும்பும் பொறுப்பைப் புரிந்து கத்தியின் மேல் நடப்பது போல் நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பலவேளைகளில் பிறரின் உணர்வுகளை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. ஆனால் அப்படிப்பட்ட சூழலில் என் மனைவி ஏன் அந்தத் தருணத்தில் இப்படி நடந்து கொள்ளுகிறாள் என்பதை உணர நம்மை அந்த இடத்தில வைத்துப் பார்க்க வேண்டும். அப்பொழுது அவர்கள் உணர்வை நாம் புரிந்து கொள்ள முடியும். அதே வேளையில் இதுவரையிலும் பிறரை இகழ்ந்த காரணங்களை நிறுத்திவிட்டு, அதை வெளிப்படுத்தாமல் இருக்க முயற்சிப்பதும் உறவை மேம்படுத்த சிறந்த வழியாக அமையும்.
நான் செய்வதைச் செய்து கொண்டு தான் இருப்பேன் என்னை யாரும் தடுக்க இயலாது என்ற தன்னலமான சிந்தனையுடன் இருக்காமல், நாம் செய்கிற செயல் பயனளிக்கிறதா என்பதைச் சிந்தித்துச் சீர்துக்கிப் பார்க்க வேண்டும். ஒரு மனைவி தான் சம்பாதிக்கும் அனைத்தையும் கணவனுக்குத் தெரியாமல் வைத்துக் கொள்ள வேண்டும். என் சம்பாத்தியத்தை என் பெற்றோருக்கோ, நிலமோ, வீடோ வாங்குவதற்கு வைத்துக் கொள்ளுவேன். அதைப் பற்றி கணவன் கேட்க உரிமையில்லை என்று எண்ணாமல் தன்னை நிதானித்துப் பார்க்க வேண்டும். இதே செயலை என் கணவன் செய்தால் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா? இவ்வாறு கணவனும் மனைவியும் தம் செயல்களை நிதானித்தால் உறவுகள் மேம்படும்.
இனிமையான குணம் உடைய கணவன் அல்லது மனைவியை மற்றவர்கள் மனமார ஏற்கின்றனர். பிறரும் வரவேற்பார்கள். அந்தக் காந்த சக்தியை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். தாராள குணமுள்ள கணவனை மனைவி மனமார நேசிக்கிறாள். தாராள குணமுள்ள மனைவியைப் பிரிந்து கணவனால் வாழ இயலாது ஏனென்றால் உண்மையான அன்பு கவர்ச்சி அல்லது ஈர்ப்புவிசையை கொடுக்கிறது. ஆனால் இன்று திருமணம் என்ற பந்தத்தினால் கட்டிப்போடப்பட்டுள்ளதே என்ற ஏக்கம் தான் மிஞ்சிக் குடும்பம் நடந்து கொண்டிருக்கிறது.
அவனவன் தனக்கானதையல்ல, பிறனுக்கானதையே நோக்கக்கடவன் என்ற திருமறை வாக்கிற்கிணங்க வாழ்வை அமைத்துக் கொண்டால் குடும்பமே நமக்கு பரலோகம் தான்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
மேலும் பல செய்திகளை படிக்க click: blog.TdtaChristianMatrimony.com
Comments
Post a Comment