நல்ல பெற்றோரும் எதிர்மறையான பிள்ளைகளும்
நல்ல பெற்றோருக்கு நல்ல கீழ்படிதலான பிள்ளைகள்தான் கிடைக்கும் என்பதல்ல. சில வேளைகளில் பெற்றோரின் பெயரைக் கெடுப்பதற்காகவே இவள் பிறந்திருக்கிறாள் எனச் சிலர் கூறுவார். அப்படி நடந்தது உண்மையா? என்றால் உண்மைதான். ஒருவர் நல்லவராக வளருவதற்குப் பெற்றோர் மட்டுமல்ல, சமுதாயமும் ஒரு காரணம்; அதையும் தாண்டி மூளையில் ஏற்படும் மாற்றங்களும் காரணமாக அமையலாம்.
ஆண்டவருக்குப் பயந்து நடந்த ஒரு பெற்றோருக்கு ஒரே ஒரு மகள். அழகுபடுத்தி, கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து, சீராட்டி, பாராட்டி மகிழ்ந்தனர். மகளை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று மிகவும் பிரயாசப்பட்டுப் பணத்தைக் கல்விக்காகத் தண்ணீராக இறைத்தனர். தன் மகள் மீது அசையாத நம்பிக்கையும், பெரிய கனவுகளையும் வைத்துச் சிந்தித்துக் கொண்டிருந்த அவர்களுக்குத் திடீரென்று, காவல் நிலையத்திலிருந்து ஒரு தொலைப்பேசி வந்தது. உங்கள் மகள் திருமணம் பண்ணிக்கொள்ள விரும்பியுள்ளாள். எனவே அது விஷயமாகப் பேசவேண்டும். காவல் நிலையத்திற்கு வாருங்கள் என அழைப்பு வந்தது. பெற்றோர் பதறிப்போய், என் மகளா அப்படியிருக்காதே என்று போனில் கூறினர். இருப்பினும் காவல் நிலையம் நோக்கி வண்டி வேகமாகப்போனது. தன் மகளைப்பார்த்து இடிந்து நின்றார்கள். ஆட்டோ ஓட்டுநரோடு திருமணம் செய்து கொள்ள ஆயத்தமாக நின்றாள். மகளைப்பார்த்து ஏன் இப்படிச் செய்தாய். உன் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளோம். உன் எதிர்காலம் குறித்து எவ்வளவு கனவு கண்டுள்ளோம், உன் மனதை இப்படி மாற்றினது யார்? மருத்துவம் படிக்கப் போகிற நீ ஆட்டோ ஓட்டுநரோடு வாழ்வை ஆரம்பிக்கப்போகிறாயோ? உனக்கு என்ன ஆனது என்று கேட்டுப்பார்த்தனர்.
அவளோ, நான் Major, நான் விரும்பின நபரோடு வாழப்போகிறேன் உங்களோடு வர நான் ஆயத்தமாக இல்லை. உங்களுடைய பணமோ, நகையோ எதுவும் வேண்டாம் என்றாள். நீ போட்டிருக்கிற கம்மல், செயின் கூட நாங்கள் செய்து கொடுத்தது தானே. நீ இப்படி பேசலாமா என்றார்கள்.
காதில்போட்ட கம்மலையும், செயினையும் கழற்றி உங்கள் பொருளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். ஒரு போட்டுத் தங்கம் கூட வேண்டாம் என்று முகத்தில் எறிந்தாள் போல் தூக்கிப்போட்டாள். பெற்றோரின் இதயத்திலிருந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது. நாம் பிள்ளையைச் சரியாக வளர்க்க வில்லையோ என்ற கேள்வி எழும்பியது.
ஒரு வாலிபனும், வாலிபப் பெண்ணும் விரும்புவது என்பது வெறும் உணர்ச்சியினால் மட்டும் ஏற்படுவது அல்ல. மாறாக மூளையில் ஏற்படும் மாற்றம் என்று உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
"Companionate love", "Romantic love" என்று லவ் பண்ணுவதைப் பிரிக்கின்றனர். "Companionate love" என்பது பெற்றோர்க்கும் பிள்ளைகளுக்கும், அண்ணன் தங்கைக்கும், நண்பர்கள், உறவினர்களுக்கும் இடையே ஏற்படும் பாசம், ஈர்ப்பு ஆகியவை சார்ந்தது. இது பாலியல் உறவு ரீதியான ஈர்ப்பு அல்ல.
ஆனால் "Romantic love" என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடைபெறுவது. இதில் பாலியல் உறவு ரீதியான எதிர்பார்ப்பு கலந்து இருக்கிறது. இந்த மாற்றமானது மூளையின் ரசாயன மாற்றத்தால் உருவாகிறது. இந்த மாற்றத்தினால் பிள்ளைகள் கண்மூடித்தனமான முடிவுகளை எடுத்து விடுகின்றனர்.
"Endorphins" என்ற ரசாயனம் மூளையில் சுரக்க ஆரம்பிக்கும்போது "Companionate love" உருவாகிறது. இச்சூழலில் எந்த ஒரு நபர் அதிகமாக நேசித்தாலும் பிள்ளைகள் நிதானமாக என் பெற்றோர் எனக்காக எவ்வளவோ தியாகம் செய்துள்ளார்கள். அவர்களை என்னால் தவிர்க்க முடியாது. எங்கள் குடும்பத்தின் கவுரவம் என்னால் பாதிக்கப்பட நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன். உன் பெற்றோரை என் பெற்றோரிடம் பேசி முறையாகச் சம்மதம் கேள். அப்பொழுது நமது திருமணம் நடக்கும், இல்லையென்றால் நமது திருமணத்தை மறந்துவிடு என்று நிதானமாகப் பேசி விடுவார்கள். பெற்றோரும் பிள்ளைகளைச் சரியாக வழிநடத்தி விடுவார்கள்.
ஆனால் "Dopamine", "Norepinephrine" ஆகிய ரசாயனங்களின் கூட்டால் "Romantic love" உருவாகுமானால் பிள்ளைகள் பெற்றோரின் மரியாதை, கவுரவம் ஆகியவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் தவறான முடிவுகளை, தவறான நபருடன் எடுத்துக் கொண்டு தனியாக வாழ முற்படுவார்கள். இது பெற்றோருக்கு மிகுந்தத் தலைகுனிவை ஏற்படுத்தக் கூடியதாக மாறிவிடும். பெற்றோர் பிள்ளைகள் உறவு துண்டிக்கப்பட்டு விடும் . பெற்றோருக்கு ஆறாத காயங்களாக மாறிவிடும்.
பெற்றோர்களே, நமது பிள்ளைகளைக் கர்த்தரிடம் ஒப்படைத்து வளர்ப்போம் "வாலிபன்தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான். உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால் தானே" என்று சங்கீதம் 119:8 கூறுகிறது. நமது பிள்ளைகள் கர்த்தரின் கையிலே அலங்கார முடியாய் விளங்குவதற்கு அவர்களை நாம் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க வேண்டும். கர்த்தர் அவர்களை நித்தமும் வழி நடத்துவார்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் பிரியமே
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்
Comments
Post a Comment