தவறுகளை நாசுக்காகக் கூறும் பெற்றோர்


ஒரு இல்லத்திற்குச் சென்றிருந்தேன்.  அந்த குடும்பத்தின் தலைவர் மகிழ்ச்சியோடு என்னை வரவேற்றார்.  மகனை எங்கே என்றேன்.  உடனே அவனை அழைத்தார்.  அந்த பையன் தயங்கித் தயங்கி என் முன் வந்தான்.  எப்படி இருக்கிறாய்? என்ன படிக்கிறாய்? என்று அன்போடு வினவினேன்.  அதற்கு மெதுவாகப் பதிலுரைத்தான்.  உடனே அந்தத் தகப்பனாருக்குக் கோபம் வந்து விட்டது.  உடனே மகனைப் பற்றிக் குறைவாகத் திட்டித் தீர்த்துவிட்டார்.  ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்வது கிடையாது.  எப்படியும் ஒரு பாடத்திலாவது fail ஆகி விடுவான்.  தூங்கும்போது மட்டும் கும்பகர்ணன் மாதிரி தூங்குவான் என்று மகனை என் முன்னேயே குறை கூறிக் கொண்டே இருந்தார்.  அச்சிறுவன் கண்கள் கலங்கி, கண்ணீர் தாரைதாரையாய் வடிந்தது. 

உடனே அவனைப் பார்த்து, ஐயாவிடம் தான் உன்னைப் பற்றிக் கூறுகிறேன்.  ஐயா உனக்காக ஜெபிப்பாங்க.  உன் நல்ல நிலைக்காகத்தான் இப்படிச் சொல்லுகிறேன்.  எதற்கெடுத்தாலும் உடனே அழுது விடுவான் என்று மீண்டும் பேசத் தொடங்கினார்.

இன்றைக்குப் பலர் தங்கள் பிள்ளைகளைக் குறித்து அவர்கள் முன்னிலையிலேயே குறை கூறத் தொடங்கி விடுகின்றனர்.  இப்படிப் பேசினால் பிள்ளைக்கு மானம் போய் விடும்.  இதைக்கேட்டுத் திருந்தி விடுவான் என்று நினைக்கின்றனர்.  இது பெற்றோர் செய்கிற மிகப் பெரிய தவறு.  இப்படிச் செய்வதால் எந்த பிள்ளையும் திருந்தியதாகத் தெரியவில்லை. 

பிள்ளைகள் திருந்துவதற்காகப் பிறர் முன்னிலையில் கிண்டல் செய்வதும், தரம் குறைவாகப் பேசுவதும், தண்டிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.  குறிப்பாக அவர்கள் வயதுக்கொத்த பிள்ளைகளோடு ஒப்பிட்டு, பார் அவன் எப்படிப் படிக்கிறான் நீயும் இருக்கிறீயே, இரண்டு பேருக்கும் ஒரே ஆசிரியர் தானே, அவனுக்குக் கற்றுக் கொடுப்பவர் தான் உனக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள்.  ஏன் உனக்கு மட்டும் மறக்குது என்று பிறரோடு ஒப்பிட்டுப் பேசுவது பிள்ளைகளுடைய உள்ளத்தை மிகவும் பாதிக்கிற ஒன்றாக மாறி விடுகிறது.  அதே வேளையில்  பிள்ளைகளுக்குள்ளாகத் தாழ்வு மனப்பான்மையும் பெற்றோர் மீது வெறுப்பும் கோபமும் உருவாகி விடும். 

சிறு வயதில் இவ்வாறு ஏற்படுகிற மனக்காயங்கள் பிள்ளைகளைப் பெற்றோரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து விடுகிறது.  பெரியவர்களாக வளர்ந்த பின்பும் உங்கள் பெற்றோரைக்  குறித்துச் சிந்தித்துப் பாருங்கள் என்றவுடன் காயப்பட்ட காரியங்கள் தான் கண்களுக்கு முன்பாக வருகிறதேயன்றி, சிறந்த காரியங்கள் கண்களுக்கு முன்பாக வருவதில்லை.  இதன் விளைவாகவே பிள்ளைகள் சிறு வயதிலே ஹாஸ்டல்-இல் இருந்து படிக்க விரும்புகின்றனர்.  பிள்ளைகள் உறவைப் பெற்றோருடன் வளர்த்துக் கொள்ளாமல் வாழ ஆரம்பிக்கின்றனர்.  இதன் விளைவாகப் பெற்றோர் முதிர் வயதை அடையும் போது  கரிசனையோடு பார்க்கும் மனப்பான்மை பிள்ளைகளுக்கு இல்லாமல் போய்விடுகிறது. 

ஒரு வேளை பெற்றோர் நினைக்கலாம் நம் பிள்ளையின் நல்ல எதிர்காலத்திற்காகத் தானே நான் இவ்வாறு பேசுகிறேன் என்று நினைக்கலாம்.  ஆனால் பேசிய விதம் தவறாக இருப்பதால், நீங்கள் பேசியது நன்மைக்காக என்ற எண்ணம் பிள்ளைகள் மனதில் வளராமலே போய் விடுகிறது.  எனவே பிள்ளைகளைத் திருத்த வேண்டும் என்று நினைத்தால் அந்தத் தவறுகளை நாசுக்காக சொல்லித் திருத்த முற்பட வேண்டும்.  தவறான காரியங்களைச் செய்யும் போது "கொஞ்சம் யோசித்துப் பாரு நம்ம குடும்பத்தை எவ்வளவு பாதிச்சிட்டு" என்று பிள்ளைகளைச்  சிந்திக்க வைக்க வேண்டும்.  யாரையும் எளிதாகத் திருத்த முடியாது.  அவர்களாகத் திருந்த வேண்டும் என்ற உணர்வு வந்தால் மட்டுமே திருந்த முடியும்.  படிப்பில் பின்னுக்குச் செல்லும் போதும் உன்னால் முடியும் முயற்சி செய் என்றே ஊக்குவிக்க வேண்டும்.  100 க்கு 1 மதிப்பெண் மட்டும் குறையும் போது 1 மார்க்கை விட்டுட்டியே என்று திட்டுவதை விட்டு விட்டு, 99 மதிப்பெண் பெற்றுள்ளாய்.  முயற்சி செய்தால் அந்த ஒரு மார்க்கையும் எடுத்திருக்கலாமே என்றே ஊக்குவிக்க வேண்டும்.  Positive approach மட்டுமே பெலன் கொடுக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.  நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் பிரியமே 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு
: நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Website ஐ Subscribe பண்ணுங்கள்  

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்