அந்நிய நுகத்தில் பிணைப்படாதே...!

 


ஒரு பெண்ணின் தகப்பனார் என்னிடம் வந்து ஒரு விளக்கம் வேண்டுமையா என்று கேட்டார்கள்.  தயக்கத்தோடு பேச ஆரம்பித்தார்கள்.  ஐயா, என் மகளுக்கு வரன் பார்க்கிறோம்.  சில ஆண்டுகளாகவே திருமணத்திற்கு முயற்சி எடுத்தோம் எல்லா வரன்களும் சரியாக அமையாமல் போய்விட்டது.  ஆனால் தற்பொழுது நன்கு படித்த, நல்ல வேலை பார்க்கின்ற ஒரு மணமகன் கிடைத்திருக்கிறான்.  ஆனால்... என்று இழுத்தார்கள். சொல்லுங்க என்றேன்.  பையன் கிறிஸ்தவன் அல்ல.  அதுதான் ஒரு குறையாக இருக்கிறது.  கிறிஸ்தவ மார்க்கத்திற்கு வருவதற்கு பையன் வீட்டார் தயங்குகிறார்கள்.  எனவே ஆலயத்தில் வைத்துத் திருமணம் செய்யாமல், பொது இடத்திலோ அல்லது வீட்டிலோ வைத்துத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.  

நாங்களும் திருமணத்திற்கு வரன் பார்த்து இளைத்துப்போய் விட்டோம்.  எங்களுக்கும் பையன் மிகவும் பிடித்து விட்டது.  இந்த வரனை விட்டு விட்டால் எப்படி அமையுமோ என்று நினைக்கிறோம்.  நாட்கள் ஆக ஆக எப்படியாவது என் மகள் மணமகனை நம்முடைய வழிக்குள் கொண்டு வந்து விடுவாள் என்று கூறி திருப்திப்பட்டுக் கொண்டார்கள்.  

நான் கேட்டேன், ஐயா உங்கள் மகள் சண்டே ஸ்கூல்-இல் பிள்ளைகளுக்குத் திருமறையைக் கற்றுக் கொடுக்கிறவள் ஆச்சே, அப்படியிருக்கும் போது பொது இடத்திலோ, வீட்டிலோ வைத்து திருமணம் பண்ணும் போது, பிறதெய்வ வழிபாட்டின்படி நடந்து கொள்வார்களே என்றேன்.  அதற்கு அந்த ஐயா, அது என்னைய்யா வெறும் மண்ணுதானே சும்மா பூசிக்கிட்டுப் போகட்டுமே, அதைத்தான் அழித்து விடலாமே என்று தனக்கு ஆதரவாகப் பேசினார். 

அன்பிற்குரியோரே! நாம் நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, நாமே நமது செயல்களை நியாயப்படுத்திக் கொள்ளுகிறோம்.  பிறசமய மக்களைத் திருமணம் செய்பவரைக் குறித்து "அவிசுவாசிகளோடே நுகத்தில் இணைக்கப்படாதிருப்பாயாக"  என்று பவுலடியார் குறிப்பிடுகிறார்.  ஏனெனில் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.  

பழைய ஏற்பாட்டில், சாலமோன் பிறதெய்வங்களை வழிபடும் பெண்களைத் திருமணம் செய்ததால், அவர்கள் அவனுடைய இருதயத்தை வழிவிலகிப்போகப் பண்ணினார்கள் என்று வசிக்கிறோம்.  அவன் தன் தகப்பனாகிய தாவீதைப் போல் கர்த்தரின் கட்டளைகளுக்குக் கீழ்படியாமல் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது.  ஒருவரைத் திருமணம் செய்து நமது சமயத்திற்கு இழுக்க வேண்டிய அவசியம் இல்லை.  சிலர் முழு மனமாற்றத்துடன் வரலாம்.  ஆனால் திருமணத்தின் பெயரால் சமயம் மாறி, பெயரை மாற்றிக் கொள்வதில் கர்த்தருக்கு எந்தப் பயனும் இல்லை.  

அதே வேளையில் ஒருவர் ஞாயிறு அன்று ஆலயத்திற்குப் போக நினைப்பார் மற்றொருவர் அதை வெறுப்பார் இது என்ன ஓயாமல் நீங்க ஆலயத்திற்குப் போறிங்க என்பார்.  குழந்தை பிறந்த உடன் என்ன பெயர் வைப்பது.  எங்கு போய் முடி எடுப்பது,  யாரை வைத்து காது குத்துவது என அனைத்துக் காரியங்களிலேயும் பிரச்சனைகள் தொடர ஆரம்பிக்கும்.  எனவே திருமணத்திற்கு முன்பே ஒரு முடிவுக்குள் வந்து விட வேண்டும்.  எந்தச் சமயத்தில் திருமணத்தை நடத்துவது, யார் எதையெல்லாம் விட்டுவிடுவது என்று முடிவுக்குள் வரவேண்டும்.  இல்லையெனில் பெற்றோரின் தலையீட்டால் பிரச்சனைகள் தொடரும்.  அது வாழ்க்கை  முழுவதும் மகிழ்ச்சியை இழக்க வைத்து விடும்.  

சிலவேளைகளில் இந்தப் பிரச்சனைகள் விவாகரத்துவரை சென்று விடுகிறது.  காரணம் சமயம் என்பது அதோடு சேர்ந்த சடங்காச்சாரங்களுடன் இணைந்தது.  சடங்காச்சாரமானது நமது நம்பிக்கையோடு இணைந்தது.  நம்பிக்கைதான் மனிதன் வாழ்வாக அமைகிறது.  எனவே வாழ்வாதாரத்தையே அசைக்கக் கூடியது சமய வேறுபாடுகள்.  எனவே, திட்டமிட்டு வாழவைத் தொடர நமது பிள்ளைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.  பிள்ளைகள் வாழ்வில் உதவிட வேண்டும்.  

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோசமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Website ஐ subscribe பண்ணுங்கள்  

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்