தனிமையாய் இருக்கிறேன்
ஆலய ஆராதனை முடித்து விட்டு வெளியே வந்தேன். பெரியவர் ஒருவர் எனக்காக வெளிய காத்திருந்தார். ஐயா, நான் ஒரு காரியத்தைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தளர்ந்த குரலில் தெரிவித்தார். எனது கரங்களை பிடித்துக் கொண்டு ஐயா நல்ல பிரசங்கம் பண்ணினீங்க, எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் பெற்றோரைப் பிள்ளைகள் பார்க்க வேண்டும் என எல்லா ஆலயத்திலும் கூறுங்கள். நான் ஒரு பெரிய business man. என் பிள்ளைகளுக்கெல்லாம் திருமணம் செய்து வைத்துவிட்டேன். எல்லாரும் தனித்தனி வீட்டில் இருக்கிறார்கள். இப்பொழுது எனக்குச் சுகவீனம் ஏதாகிலும் வரும்போது என்னைப் பார்க்க வருவது யாரும் இல்லை. தனிமை உணர்வில் தவிக்கிறேன் என்றார்.
முதியவர்கள் பலர் தனித் தனி தீவுகளாக மாறிவருகின்றனர். பிள்ளைகள் திருமணம் ஆனவுடனே , தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர். பெற்றோர் தன்னிடம் இருந்தால் ஒரு சுமையாக மாறிவிடுவர் என்ற எண்ணம் பெருகி வருகின்றது. எனவே எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் பிள்ளைகள் பெற்றோருக்கு அனுப்ப ஆயத்தமாக இருக்கின்றனர். ஆனால் தன்னோடு வைப்பதைக் கஷ்டமாகப் பார்க்கின்றனர்.
சுறுசுறுப்பாக அரசுத் துறையில் பணியாற்றியவர்கள், சுய தொழில் செய்தவர்கள் வேலையிலிருந்து ஓய்வுபெறும் நிற்கும் பொது மனக் கசப்பால் மிகவும் தொய்ந்து போய் விடுகின்றனர். இது வரையிலும் வேகமாகப் பணியின் ஆர்வத்தினிமித்தம் காலையிலே எழுந்து குளித்து மற்றக் கடமைகளைச் செய்தவர்களுக்குத் தனிமையில் வீட்டிற்குள்ளே இருப்பது என்பது ஜெயில் போன்று மாறிவிடுகிறது.
பணியிலிருக்கும் பொது பலரைப் பார்க்கவும், அவர்களோடு பேசித் தன்னுடைய பிரச்சனைகளில் உதவி கேட்கவும் இயலும். ஆனால் வீட்டில் இருக்கும் போது மற்றவர்களோடு பேச இயலாமல் உணர்வுகளை அடக்கி வைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பணியிலிருக்கும் போது பலர் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டேயிருப்பார்கள். நேரம் போதவில்லையே என்ற ஏக்கம் இருக்கும் . இப்போது நேரம் போக மாட்டிங்குதே என்ற ஏக்கம். TV பார்த்து, பேப்பர் பார்த்து முடித்தாலும் நேரம் போகமாட்டிங்குது என்று புலம்ப ஆரம்பிக்கின்றனர்.
பணியிலிருக்கும் போது நம்மைத் தேடிப் பலர் வருவர். காரணம் நாம் இருக்கும் பதவி தான். அது இல்லாத போது யாரும் தேடி வருவதில்லை. நாய் கூட என்னைத் தேடி வரமாட்டிங்குதே , முன்னமே எத்தனை பேர் என்னைத் தேடித் தேடி வருவாங்க. பணியில் இருக்கும் போது அதிக (Respect) மரியாதை கிடைக்கும். நம்முடைய பதவியைக் குறித்து இவர் கலெக்டர், பேராசிரியர், தலைமை ஆசிரியர் என்று பெருமையாகப் பேசப்படுவோம். ஆனால் அதை இப்போது எதிர்பார்க்க இயலாது.
சிலர் பணியிலிருக்கும் பொது தன் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுத்தல், வீட்டைக் கட்டி முடித்தல் போன்ற பணிகளை நிறைவேற்றிவைத்து விடுவார்கள். ஆனால் சிலர் பணியிலிருக்கும் போது பணத்தை நன்றாகச் செலவு செய்து விட்டு, பிற்காலச் சேமிப்பு இன்றி தவிப்பர். வருவாயும் குறைந்து விடும். ஆனால் மருத்துவச் செலவுகள் பெருகிவிடும். அவர் நினைத்தபடி எல்லாம் செலவு செய்ய இயலாத சூழல் ஏற்படும். சிலர் பிள்ளைகளின் கையை எதிர்பார்க்கும் நிலையும் ஏற்படும். இச்ச்சூழலில் மனம் உடைந்து போய் விடாமல் இருக்க வேண்டுமானால், நம்முடைய செயல்பாடுகளில், நாம் மாற்றங்களை உருவாக்கிக் கொள்ள முற்பட வேண்டும். நாம் இன்னும் கலெக்டர்ராகவோ அல்லது தலைமை ஆசிரியரைப் போன்றோ மற்றவர்களுக்கு ஆணையிட்டுக் கொண்டிராமல் குடும்பத் சூழலில் வலுவான அன்புறவை உருவாக்க வேண்டும்.
குடும்பமும் அன்புறவும்
மனித வாழ்வே உறவை வலுப்படுத்துவதிலும் அன்பைப் பரிமாறிக் கொள்வதிலும் அடங்கியிருக்கிறது. பவுல் குறிப்பிடுவது போன்று "அன்பே பிரதானம்" "அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை", "தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூறாதவன் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூர முடியும்" இவ்வாறு அன்புறவுடன் வாழும் முக்கியத்துவத்தைத் திருமறை நமக்கு நினைவுபடுத்துகிறது.
இதுவரையிலும் மனைவியுடனும், பிள்ளைகளுடனும், பேரக் குழந்தைகளுடனும், மருமகளுடன், மருமகனுடன் நேரம் செலவிட முடியாதவர்கள். இது தான் நல்ல வாய்ப்பு எனக் கருதி நேரத்தைச் செலவிட்டு அன்பைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். மனைவியுடன் உட்கார்ந்து பேச நேரம் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்ப்பதற்கு இது தான் தருணம் என உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். “Retirement is the period when a deep understanding should be created between the two partners of life” என ஒருவர் குறிப்பிடுகின்றார். குடும்ப வாழ்வில் ஆழமான ஆண்புறாவை வளர்த்துக் கொள்ளக் கடவுள் கொடுத்த உன்னதமான காலம் இது என நினையுங்கள்.
பிரசங்கி புத்தகத்தில் ஒருவன் விழுந்தால் மற்றொருவன் தூக்கிவிடலாமே எனச் சேர்ந்து வாழ்வதின் முக்கிய நோக்கத்தைக் குறிப்பிடுகிறார். வாழ்வில் இளமைப் பருவத்தைக் காட்டிலும், வயதான பின் தான் மற்றவர் உதவி அதிகம் தேவைப்படும்.
92 வயது முதியவர் ஒருவர் கல்லறைத் தோட்டத்தில் நின்று அழுது கொண்டிருந்தார். நான் ஒரு வயதான பாட்டியை அடக்கம் செய்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன். அவரைப் பார்த்ததும் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்ட போது, அவர் நீங்கள் அடக்கம் செய்த பெண் என் மனைவி தான். என்னையும் சேர்த்து அடக்கம் செய்யுங்கள் எனக் கதறிக் கதறி அழுதார். அப்பொழுது தான் புரிந்தது 92 வயதான பின்பும் மனைவியின் அன்புறவை விட்டுப் பிரிய முடியாத அளவிற்கு அன்பு எவ்வளவு ஆழமாய் வேர் விட்டுள்ளது என உணர்ந்தேன். “Love never claims, it ever gives; Love never suffers, never resents, never revenges itself” என மகாத்மாகாந்தி கூறுவது போல் அன்பை நிறைவாய் வழங்க முற்பட வேண்டும்.
பணியில் மாற்றம்
பணியில் இருந்து ஓய்வுபெறும் பொது அல்லது தொழில்களைப் பிள்ளைகளிடம் ஒப்படைக்கும் போது, பெற்றோர் பொதுக் காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முற்பட வேண்டும். மிசோரம் மாநிலத்தில் முதியவர்கள் அதிக மதிப்புடனும், மரியாதையுடனும் வாழ்கின்றனர். பணி நிறைவு செய்தவர்கள் அல்லது முதியவர்களுக்கென்ற சங்கம் இருக்கிறது. அது மிகவும் வலிமையுடையதாக இருக்கிறது. அவர்கள் அம்மாநிலத்தின் முக்கியமான நடவடிக்கைகளை முதியவர்கள் கண்காணிக்கின்றனர். ஆட்சியாளர்கள் தவறினால் அதைச் சுட்டிக் காட்டும் அளவிற்கு வலிமையுள்ளவர்களாக இருக்கின்றனர் என எனது மிசோரம் நண்பர் என்னோடு பகிர்ந்து கொண்டார். “Old wood to best to burn, old wine to drink, old friends to trust and old authors to need” எனப் பிரான்சிஸ் பேக்கன் கூறுகின்றார். இளமைப் பருவம் எவ்வளவு முக்கியமானதோ அதைப் போன்று முதிர் பருவமும் மிக மிகப் பயனுள்ளது. அனுபவங்கள் என்பது அறிவு செறிந்த மிகப் பெரிய நூலகம் போன்றது. அதனை சரியாகப் பயன்படுத்த முற்பட வேண்டும்.
நல்ல திறமையுள்ளவர்கள் சிறந்த புத்தகங்களை எழுத முற்படலாம். To know how to grow old is the master work of wisdom எனக் குறிப்பிடுவது போன்று கற்ற அறிவைப் பிறருக்குப் பாடமாக வைத்து விட்டுச் செல்ல முற்பட வேண்டும்.
படிக்காத, கீழ்த்தரமான, ரௌடித்தனமாக செயல்கள் புரியும் பலர் அரசியல்வாதிகளாக மாறி நாட்டை அவமானப்படுத்துபவர். அவர்கள் மத்தியில் சிறந்த அரசியல் வாதிகளை உருவாக்கவும், தலைமைத்துவம் ஏற்கவும் முதியவர்கள் முன்வர வேண்டும்.
சில முதியவர்களுக்கு நல்ல ஓய்வூதியமோ அல்லது தொழில் மூலமோ வருவாய் வந்து கொண்டிருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் தன்னார்வமாக ஊழியமோ, தொண்டு நிறுவங்களுடன் இணைந்து பணியாற்றவோ முன் வர வேண்டும். இந்தச் சமுதாயத்திற்கென்றும், இந்நாட்டிற்கென்றும் நல்ல பல செயல்களை செய்து அதனையே மூலதனமாக விட்டு விட்டுச் செல்ல முயற்சிக்க வேண்டும்.
வீட்டிலுருக்கிறவர்கள் வீட்டைச் சுற்றித் தோட்டம் அமைத்து அதைப் பராமரிக்கலாம். இதனால் மனதில் தனிமை உணர்வு தங்காது. ஆசிரியராகப் பணிபுரிந்தவர்கள் ஏழை எளிய மாணவர்களுக்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுக்கலாம். சிறிது நேரம் முதியோராக இணைந்து ஜெபிக்கலாம். மிஷனரிப் பணித்தளங்கள் பார்வையிடலாம். ஏனெனில் இதுவரையிலும் நேரம் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது பயனுள்ளதாக மாற்றிக் கொண்டால் வாழ்வே ஒரு அர்த்தமுள்ளதாகத் தோன்றும், இனிமையாக மாறும்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
மேலும் பல செய்திகளை படிக்க click: blog.TdtaChristianMatrimony.com
Comments
Post a Comment