பிள்ளைகளின் திறனைப் புரிந்துக்கொள்ளும் தாய்


கணவனை இழந்ததினால் தொழிலில் மிகப்பெரிய சரிவு வந்தது.  அந்தக் கைம்பெண்ணுக்கு.  எப்படியாகிலும் குடும்பக் கவுரவத்தை நிலைநிறுத்த எண்ணிப் பல இலட்ச ரூபாய் கடனாகப் பணக்காரரிடம் வாங்கினாள்.  பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் அனுபவம் இல்லாததால் தொழிலில் பணம் எல்லாம் கரைந்துபோனது.  

கடன்கொடுத்தவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பணத்தைக் கேட்டார்.  அந்தப் பெண்மணியோ தன்னுடைய நஷ்டத்தின் காரணமாகப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை.  சீக்கிரத்தில் கொடுத்து விடுகிறேன் என்று Promise பண்ணிப்பார்த்தாள்.  ஆனால் காலம்தான் கடந்ததே தவிரப் பணம் திரும்ப வராததால் கோபத்தோடு நேரிலேயே வீட்டிற்கு வந்தார்.  கன்னா பின்னா என்று கத்திக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார்.  முன் அறைக்கு வந்தவர் திடீரென்று  வாயடைத்து நின்றார்.  கைம்பெண்ணின் மகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.  கோபம் தானாக நீர் பட்டது போல் குளிர்ந்தது.  அந்த இளம் பெண்ணிடம், தாயார் எங்கே என்று மெதுவாகக் கேட்டார்.  

கடன்கொடுத்த பணக்காரன் அந்தக் கைம் பெண்ணிடம் பேசிய பின், பணம் கொடுக்க உனக்கு முடியாவிட்டால் உன் மகளை எனக்குத் திருமணம் செய்துகொடு என்று மெதுவாகப் பேச்சைத் திருப்பினார்.  அந்தப் பெண்மணியோ அதிர்ந்துப்போனாள்.  வீட்டிற்கு வருகிற ரவுடிக்கு எப்படி பெண்ணைக் கொடுப்பது, அடிபிடி சண்டையில் எப்பொழுதும் போலீசுக்குப் பயந்து மகள் சாகவேண்டுமே என்று எண்ணித் தயங்கியவாறு தன் மகளிடம் பேசிச் சம்மதம் வாங்கி உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றாள்.  

நாட்கள் உருண்டோடியது பதிலோ வரவில்லை.  கடன் கொடுத்தவன் ஒரு முடிவுக்கு வந்தான்.  ஊரைக் கூட்டிப் பஞ்சாயத்துப் பண்ணி, அவள் மகளைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தான். 

ஊர் கூட்டப்பட்டது, ஆற்றோரக் கரையினிலே, பணக்காரன் மக்களிடம் சொன்னான் இவள் பணம் வாங்கிக் கொண்டு திருப்பித்தராமல் இருக்கிறாள். எனவே பணத்தைக் கொடுக்கச் சொல்லுங்கள் அல்லது அவள் மகளைக் கொடுக்ககச் சொல்லுங்கள் என்றான்.  ஆற்றோரத்தில் உள்ள இரண்டு குழாங்கல்லை ஒரு பையில் போட்டு வெள்ளைக் கல்லெடுத்தால் அவள் எனக்குப் பணமும் தரவேண்டாம், மகளையும் தரவேண்டாம்.  மாறாகக் கருப்புக்கல் எடுத்தால் அவள் மகளைத்தர வேண்டும், பணத்தைத் தரவேண்டாம் என்றான்.  இதைக்கேட்ட தாய் தன் மகளிடம் வந்து, இவன் ஏதோ சூழ்ச்சி பண்ணுகிறானே என்னச் செய்வது என்று கதறினாள்.  மகளோ தாயைப்பார்த்து அழாதே, நான் பார்த்துக் கொள்ளுகிறேன் என்று தைரியப்படுத்தினாள்.  

பணக்காரன்  கூழாங்கல்லைத்  தேடிப்பார்த்து,  இரண்டு கருப்பு கூழாங்க்கல்லையே பைக்குள் போட்டான்.  இதைப்பார்த்த அந்த இளம் பெண்ணுக்கு அதிர்ச்சியாக இருந்தது.  இருப்பினும் மனஉறுதியோடு யாரிடமும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தாள்.  

மக்கள் கூட்டம் என்ன ஆகுமோ என்று கையைப் பிசைந்துக் கொண்டிருக்கும்போது பையைக் கொண்டு வந்து கொடுத்தான்.  ஒரு கல்லை எடு என்று தூக்கலான சத்தத்தோடு பேசினான்.  கையைப் பையிலிருந்து எடுத்தவள் மயங்கியவாறு கை தடுமாறி எடுத்த கல் கீழே விழுந்தது.  தன்னைச் சரிசெய்து கொண்டு கூட்டத்தைப் பார்த்து, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கையைக் கூப்பிக் கேட்டாள். அப்படியே, ஐயா நான் எந்தக் கல்லை எடுத்தேன் என்று எனக்கு தெரியவில்லை.  ஆனால் ஓன்று மட்டும் தெரியும், நான் எந்தக் கல்லை  எடுத்தேனோ அது போக மீதம் உள்ள கல்லை வைத்து முடிவு பண்ணிக் கொள்ளுங்கள் என்றாள்.  உள்ளே கையை விட்டால் கருப்புக்கல் இருந்தது.  பணக்காரனின் முகம் செத்தது.  அந்தக் கைம்பெண் தன் மகளின் சமயோசித புத்தியைக் கண்டு பிரமித்தாள்.  தன் மகளுக்குள் இவ்வளவு ஞானம் இருக்கிறதே இதை நான் அறியவில்லையே என்று ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள்.  

அன்பிற்குரியோரே! நமது பிள்ளைகளிடம் உள்ள திறமைகளை நாம் அறியாமல் நீ முட்டாள், அறிவு கெட்டவள், நீ முன்னேறவே மாட்டாய் மாடு மேய்க்கத்தான் நீ லாயக்காவாய் என்று பலவாறு நமது பிள்ளைகளை நாமே எடைபோட்டுத் திட்டுகிறோம்.  நாம் எதிர்பார்க்கிற திறமை இல்லாவிட்டால் அவர்கள் ஒன்றுக்கும் உதவாக்கரை என்று முடிவெடுத்து விடுகிறோம்.  ஆனால் அவர்களுக்குள் இருக்கும் திறமையைப் பெற்றோர் கண்டிப்பாகப் புரிந்துக் கொள்ள வேண்டும்.  

தனித்திறமைகள் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்து கிடக்கும்.  அவைகளைப் புரிந்து அதற்கேற்ப அவர்களை உற்சாகப்படுத்தினால் வைரக்கல் பட்டை தீட்டியதும் மின்னுவது போல் மின்ன ஆரம்பித்து விடுவார்கள்.  குறிப்பாக ஒரு தாய் தன் பிள்ளைகளோடு அதிக நேரம் செலவழிக்க, உரையாட வாய்ப்பு உள்ளது.  அப்பொழுது தனித் திறமைகளை அறிந்துக் கொள்ள வேண்டும்.  வெறும் படிப்பு மட்டும் மனிதனின் வாழ்வை உருவாக்கி விட இயலாது.  முதல் மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே இவ்வுலகில் உயர்ந்து விட வில்லை.  மாறாகத் திறமை உள்ளவர்கள் தான் உயர்ந்து, நிமிர்ந்து நிற்கிறார்கள் எனவே நாம் நம் பிள்ளைகளைக் கூனி குறுகிவிட வைத்து விடாமல், நிமிர்ந்து நிற்க உதவிச் செய்வோம்.         

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் பிரியமே 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்       


Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்