பிள்ளைகளுக்கு தைரியமூட்டும் பெற்றோர்
கவுன்சிலிங் பெறுவதற்காக ஒரு பெண்ணை அழைத்து வந்தனர். அப்பொழுது அந்தப் பெண்ணின் பெற்றோர் முதலில் என்னிடம் பேசினார்கள். ஐயா என் பிள்ளைக்கு வயது 35 ஆகிறது. திருமணம் செய்து கொடுத்து விட்டேன். ஏதாவது சின்னக் காரியத்தை வீட்டில் யாராகிலும் சொல்லி விட்டால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உடனே எனக்குப் போன் பேசிவிடுகிறாள். நீங்க கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கய்யா என்கிறாள். அலுவலகத்தில் பணி புரியும் போதும் ஏதாவது பிரச்சனையென்றால் வீட்டிற்கு அழுதுகொண்டே வருகிறாள். சாப்பிட மாட்டேன் என்கிறாள். எனவே அவளுக்குத் தைரியத்தை நீங்கள் கொடுக்க வேண்டும் என்றார்கள்.
அந்தப் பெண்ணிடம் பேசும்போது, சிறுவயது முதலே பெற்றோரின் அரவணைப்பில் இருந்தவள் என்பதைப் புரிந்து கொண்டேன். பெற்றோரின் தன் பிள்ளைகள் மீது அதிக அன்பு வைத்திருந்தார்கள். என்ன பிரச்சனையென்றாலும் பெற்றோரே பேசி சரி செய்துவிடுவார்கள். பிள்ளைகள் தங்களது தேவைகள் எது இருந்தாலும் அதனையும் பெற்றோரிடம் கேட்டுத்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். கேள்விகளைக் கேட்டால் பெற்றோரே எல்லா விடைகளையும் சொல்லி விடுவார்கள். பிள்ளைகள் 100% பெற்றோரையே சார்ந்து இருந்தனர். எனவே திருமணமான பின்பும் மீண்டும் பெற்றோரையே சார்ந்து காணப்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொண்டேன்.
பெற்றோர்களே, இனிய இல்லத்தரசிகளே, சிறு பிள்ளைகள் உங்களைச் சார்ந்து வாழ்வது என்பது உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கலாம். ஆனால் 20 வயது ஆன பின்பும் 100% உங்களையேச் சார்ந்து வாழ வேண்டும் என்று நினைப்பது தவறு. பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டிய சுயாதீனத்தை நாம் கொடுக்க மறுக்கக் கூடாது.
பறவைகளைப் பாருங்கள், சிறு குஞ்சுகளாக இருக்கும்போது தாய்ப்பறவை அவைகளுக்கு உணவு ஊட்டுகிறது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகப் பறக்கடிக்கக் கற்றுக் கொடுக்கிறது. பறக்கத் தெரிந்த பின்னும் அவைகள் தாய்க்கூட்டிலே இருப்பதற்குத் தாய்ப்பறவை சம்மதிப்பதில்லை. அவற்றை விரட்டி விடுகிறது. ஒரு வேளை தாய் தன்னை விரட்டுகிறதே என்று வருத்தம் இருக்கலாம். ஆனால் சுயாதீனமாக வாழ அது கற்றுக் கொள்ளுகிறது.
அதைப்போன்று தான், தாயாகிய நீங்கள் ஏற்ற வேளைகளில் சுயாதீனமாக வாழ, பேச, செயல்படப் பிள்ளைகளை அனுமதியுங்கள். சிறுவயதில் பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். பெண்பிள்ளைகளானால் சிறுவயதிலே தோசை செய்ய, மீன் கழுவினால் அதனைத் தான் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால் செய்யும் போது குறைபாடு இருக்கலாம். அதைப் பார்த்து "இதுதான் நான் முதல்லே சொன்னேன் செய்துகிடமாட்டே, அதைச் செய்யாதே, அப்படிச் செய்யாதே, முடியாத காரியத்தைச் செய்து நேரத்தை விரயம் பண்ணிட்டா, எல்லாம் வேஸ்டாப் போயிட்டு " என்று கத்தாதேயுங்கள். அவர்கள் செய்து பழக்கட்டும். கொஞ்சம் வீணாய்ப் போனாலும் பரவாயில்லை. அவர்கள் கற்றுக் கொள்ளட்டும். அதற்கு அனுமதியுங்கள் சின்ன சின்ன காரியங்களிலேயும் அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள விட்டு விடுங்கள்.
சைக்கிள் பழகும்போது எப்படியும் பலமுறை கீழே விழத்தான் செய்பவார்கள் என்பது நமக்குத் தெரியும். அதே போலத்தான் பணத்தைக் கொடுத்துச் செலவு செய்யக் கூறுங்கள். அப்பொழுது பணத்தின் மதிப்பு அவர்களுக்குத் தெரியும். ஒருவேலையைக் கொடுத்துச் செய்யச் சொல்லுங்கள். அப்பொழுது உலகத்திலே மக்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். ஒரு காரியத்தை முடிப்பதற்கு எத்தனை முறை அலைய வேண்டியதிருக்கிறது. எத்தனை பேரின் காலில் விழுந்து காரியத்தைச் சாதிக்க வேண்டியதிருக்கிறது என்பது புரியும்.
பிள்ளைகள் உங்கள் நிழலிலே வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும் என்று நினைக்காமல் அவர்கள் பிறருக்கு நிழல் கொடுக்கிறவர்களாக மாற வாய்ப்பளியுங்கள். பிள்ளைகள் தீர்மானம் எடுக்கும் சமயங்களில் விட்டுக் கொடுத்துப்பாருங்கள். சிலவேளை நம்மைக் காட்டிலும் மிகச்சிறப்பாகச் செயல்படுவார்கள். சிறு வயதிலேயே தைரியத்தையும், எதையும் சந்திக்கும் ஆற்றலையும் வளர்த்துவிட வேண்டும். இல்லையெனில், பின்னாளில் பிள்ளைகள் வருத்தப்படும் சூழல் உருவாகும்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க இந்த Website ஐ Subscribe பண்ணுங்கள்
Comments
Post a Comment