எங்கே இருக்கிறாய்? மணமகனை தேர்ந்தெடுப்பது எப்படி - கணவன்மார்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டியவைகள்

    


    திருமணத்திற்கு  முன் மணமகனைத் தேடும் போது, ஆண் நல்ல பணி செய்கிறானா? நமது பிள்ளையைக் காப்பாற்றத் தகுதியுள்ளவனா? என்று பெற்றோர் யோசித்துப் பார்ப்பதுண்டு.  60 ஆயிரம், ஒரு லட்சம் என்று சம்பளம் பெற்றால் எப்படியாவது அந்த வரனை முடித்து விடுவது நல்லது என்று நினைப்பார்கள்.  சில ஆண்கள் தங்கள் பெற்றோரின் பென்ஷன் சம்பளத்தை நம்பி காலங்கழிப்பர்.  கேட்டால் பெற்றோரைப் பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதால் வேறு வேலைக்குச் செல்லவில்லை என்று வீட்டில் ஆண் தேனீ போன்று வீடே அடைக்கலம் என்று தஞ்சம் புகுந்து விடுவர்.  இப்படி ஆண்களின் குணாதிசயங்கள் பல இருக்கின்றன.  இதனை Dr. ஷாலினி அவர்கள் தன்னுடைய புத்தகமாகிய "ஆண்களை handle செய்வது எப்படி?"  என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.  அதன் சாராம்சத்தை உங்களுக்கு தருகிறேன்.  ஆண்கள் தங்கள் வாழ்க்கையைப் சரியாக மாற்றிக் கொள்வதற்கும், ஆண்களை வரன் பார்க்கும் போது பெண்கள் கவனத்தில் கொள்வதற்கும் ஏற்றதாக அமையும்.  

    எறும்பினிடத்தில் போய் சுறுசுறுப்பைக் கற்றுக்கொள் எனது திருமறை கட்டளையிடுகிறது.  ஆண்கள் உழைப்பவர்களாக, தங்கள் குடும்பத்தை நடத்தத்தக்க பொருளைச் சம்பாதிப்பவராக இருக்க வேண்டும்.  குடும்பம் நடத்தப் போதுமான பணம் சம்பாதிக்க இயலாதவர்கள் திருமணம் செய்யத் தகுதியற்றவர்கள் என உலகமே கூறுகின்றது.  ஆறுவகையான ஆண்கள் இருக்கிறதாக வரையறுக்கப்படுகிறது.  

    முதல் வகை ஆண்கள் எனக்கு வேலைக்குப் போகவே விருப்பம் இல்லை.  வேலைக்குப் போனாலும் துக்கமாக வருகிறது.  போய் டீ குடித்து முடித்துவிட்டு, கதைப்பேசி காலத்தை ஓட்ட வேண்டியது தான் என்னத்த வேலை செய்ய என்று சொல்லும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.  

    இரண்டாம் ரகம் ஆண்கள் எப்படியென்றால், நான் செய்கிற வேலை ஒன்றுக்குமே உதவாது.  நான் படிச்சது ஓன்று, வேலை செய்கிறது ஓன்று; கடவுள் எனக்கு இப்படி ஒருவேலையை நியமிச்சிட்டாரென்று நினைத்தாலே வேதனையாயிருக்கு என்பார்கள்.  

    மூன்றாவது வகை என்னவென்றால், இந்தத் தொழிலை எங்க அப்பா, தாத்தா என்று பரம்பரையாகச் செய்துகிட்டு இருக்கிறோம்.  இதை மூடிட்டா எல்லாரும் கேள்வி கேட்பாங்க அதனால விடமுடியாது செஞ்சுதான் ஆகணும் என்று அழுத்துக் கொள்ளுவார்கள்.  

    நாலாவது ரகம்,  காலையில எப்பொழுது விடியும்? வேலைக்குப் போகலாம்னு காத்துக்கிட்டு இருப்பாங்க.  இராத்திரி பகல்னு தெரியாமல் கண்முடித்தனமா உழைச்சி முன்னுக்கு வருபவங்க, வேலைக்குப் போனா குடும்பம் கோத்திரமும் மறந்திடும்.  

    ஐந்தாவது வகை, ஆண்கள் என்ன வேலை கிடைச்சாலும் சரி. சரியா, உண்மையா உழைப்பாங்க.  வேலை முடிஞ்சதும் வீடு, விளையாட்டு, உடற்பயிற்சி என்று டைம் பாஸ் பண்ணுவாங்க.  

    ஆறாவது ரகம், எங்க சேர்மனுக்காகத் தான் நான் உயிரைக்கொடுத்து உழைக்கிறேன்.  அவரு இல்லேண்ணா நான் அங்க வேலை செய்யமாட்டேன்..! சூப்பர் ஆளு.  என் மேல அவரு நம்பிக்கையா இருக்காரு எதுன்னாலும் எங்கிட்டதான் கேட்பாரு அதனால் நான் தான் விழுந்து விழுந்து வேலை செய்கிறேன்.

 இப்படி ஆறு விதமான ஆண்கள் உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.  இந்த ரகங்களில் எது சிறப்பானது என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.         

    முதலாவது ரகம்  சுத்த சோம்பேறி குரூப்பைச் சார்ந்தது.  எந்த விதமான உத்வேகமும் இல்லாமல் சுறுசுறுப்பும் இல்லாமல் ஒப்புக்கு வேலை பார்ப்பவர்கள்.  வேலைசரியில்லையென்று அடித்து விரட்டப்படுவர்.  இரண்டு மாதம் ஒரு கம்பெனி அடுத்த இரண்டு மாதம் வீட்டுல அப்புறம் ஒரு கம்பெனி என நிரந்தரமில்லாமல் அலைவர்.  இப்படிப்பட்டவர்களைத் திருத்துவது கடினம்.  திருமணம் செய்து மனச மாத்திரலாம் என்று நினைத்தால் வாழ்க்கை முழுவதும் போராட்டம் தான்.  இப்படிப்பட்ட ஆண்கள் நல்ல மனையாளனாய் (House Husband) இருப்பதற்குத்தான் லாயக்கு.          

   இரண்டாம் ரக ஆண்கள் எப்பொழுதும் குறை சொல்லிக் கொண்டே இருக்கும் மனப்பான்மை உடையவர்களாக இருப்பார்கள்.  இந்த நிறுவனம் எங்க உருப்படப்போகுது .  இருந்து இருந்து இங்க வந்து நானும் சேர்ந்தேனே; நான் எங்கேயோ இருக்கக் கூடியவன்; இந்தக் குப்பை மேட்டில் வந்து வேலைச் செய்கிறேன்.  என் ரேஞ்சுக்கெல்லாம் இங்க வந்து வேலையில சேரணுமுன்னு தலைவிதி.  எல்லாருக்கும் கும்பிடு போட்டு இப்படி வாழணுமா? என்று குறை கூறிக்கொண்டே interest இல்லாமல் வேலை செய்பவர்.  இப்படிப்பட்ட மனநிலையோடரைத் திருமணம் செய்தால் வாழ்க்கை துணையும் அப்படியே ஆயிடுவாங்க.  காரணம் இந்த வகை நோய் தொத்திக்கொள்ளும்.  பிரச்சனைகளை எதிர்கொண்டு ஜெயிக்கும் ஆண்மகனாக விளங்கமாட்டார்கள்.  

   மூன்றாவது கோஷ்டிகள் தங்கள் குடும்ப கவுரவத்திற்காக வாழ்ந்து முடிப்பவர்கள் பரம்பரையாக வருகிறதை அனுபவித்து  விட்டு காரசார இல்லாமல் வாழ்பவர்கள்.  பெரிய ஹோட்டல்லைத் தாத்தா ஆரம்பித்து இருப்பார்.  அது இப்பொழுது பழையதாகி போயிருக்கும்.  அப்படியே ஈ ஒட்டிக் கொண்டேயிருப்பார்கள்.  சொத்து மதிப்பு பெரிதாக இருக்கும்.  அதைக் குறித்து பெருமையடித்துக் கொண்டே வாழ்வை ஓட்டுவார்கள்.  இவர்களும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று போட்டி மனப்பான்மை இல்லாதவர்களாக இருப்பர்.  ஆனால் சிலர் பெற்றோரை வைத்து சிறு தொழிலைப் பெரிதாக மாற்றும் முனைப்போடு வாழுவர்.  இவர்களால் வாழ்வில் சாதிக்க முடியும்.       

    நான்காவது வகை ஆண்களைத்தான் பலர் திருமணத்திற்கு முன் பார்த்து வியந்து, இவன்தான் சரியானவன் என்று ஈர்க்கப்படுகின்றனர்.  ஏனென்றால் ஈடுபாட்டுடன் வேலையில் களமிறங்கிடுபவர்கள்.  அதிகமான சம்பளத்தை வாங்கும் நபராகவும் இருப்பார்கள்.  அளவுக்கு அதிகமாக தன்னுடைய பணியில் உற்சாகத்தில் காணப்படுவர்.  திருமணத்தற்கு முன் இது பிரச்சனையில்லை.  ஆனால் திருமணத்திற்குப் பின்னும் இதே நிலை தொடரும்போது மனைவி, பிள்ளைகள், குடும்பம் எல்லாம் கவனிக்கப்படாத சூழல் நிலவும்.  எனவே மனைவியானவள்; கணவனைப்பார்த்து உனக்கெல்லாம் திருமணம் அவசியமா பேசாமல் உன் வேலையைக் கட்டிக்கிட்டு அழ வேண்டியது தானே.  இருந்து இருந்து என்னைப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு என்வாழ்க்கையை  என் நாசம் பண்ணுகிறாய் என்று கொதிக்க ஆரம்பிப்பார்கள். மற்றவர்களுக்கு இந்த நிலைபுரியாது. அந்த,  பையன் மிகவும் நல்லவன் அவனைப் போய் குற்றம் சாட்டுகிறாளே என்பர். சில பெண்கள் இவனோடு வாழவே முடியாது.  வீட்டிற்கு வரமாட்டேங்கன்னா அவன் company யில் எப்படியிருப்பன்கோ என்ற சந்தேக உணர்வு  மேலோங்க ஆரம்பிக்கும்.  வேலை மற்றும் பணமே பிரதானமான இந்த வகை ஆண்களால் குடும்பத்திற்கு நேரம் செலவிடக் கஷ்டமாக இருக்கும் அளவிற்கு அதிகமான வேலையில் ஈடுபாடு கொள்வதால் பல குடும்பங்களில் குறிப்பாக  I.T. யில் பணியாற்றுகிறவர்களிடையே திருமண முறிவு  அதிகமாக உள்ளது.  

  ஐந்தாவது குரூப்பைச் சார்ந்த ஆண்கள் சில வேளைகளில் சுயநலக்காரர்கள் போல் தோற்றம் அளிப்பார்கள்.  தான் உண்டு தன் வேலை உண்டு என்று எதிலும் அதிக ஈடுபாடு இல்லாமல் வாழ்வார்கள்.  குறிப்பிட்ட time-ல் வீட்டிலும், வேலை வேலையிலும் செலவிடுவார்கள்.  ஓவராக எதிலும் ஈடுபாடு காட்டாமல் தன்னுடைய கடமையை மட்டும் நேர்த்தியாகச் செய்து விட்டு வீட்டிற்கு வந்ததும் அதைப்பற்றி நினைக்காமல் சந்தோஷமாக இருப்பார்கள்.  இப்படிப்பட்டவர்கள் தான் குடும்பத்தில் பிரச்சனையில்லாமல் வாழக்கூடிய கூட்டம்.  

  ஆறாவது கூட்டம், தன்னுடைய தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்காக வாழ்பவர்கள்.  அவர்களுக்காக எதையும் செய்யும் Hero Worship கூட்டம்.  குறிப்பாகச் சொல்லப்போனால் மோசமாக அழியக்கூடிய கூட்டம்.  இவர்கள் நிதானம் இல்லாமல் தமக்கு மேலதிகாரிகளுக்காகவே வாழுவார்கள். எளிதாக discourage அடைய வேண்டிய சூழல் ஏற்படும்.  

   இப்படி ஆறுவகையான கூட்டமாக ஆண்கள் வாழுகின்றனர்.  இப்படிப்பட்ட ஆண்களை நிதானித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  குடும்பத்தை யார் சரியாகக் கொண்டு செல்லக்கூடும் என்பதை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.  

    ஆண்களும் தான் எந்த categoryல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை அறிந்து அதற்கேற்றார் போல் தன்னை மாற்றிக் கொள்ள முற்பட வேண்டும்.  இன்றைய சூழல் மாறிக்கொண்டே போகிறது.  தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்க வேண்டுமானால் அதற்கேற்றார்  போல் மனிதன் மனிதனாக மாறியே ஆகவேண்டும். பிழைகளைத் திருத்திக் கொண்டு முன்னேறினால் தான் உறவு தொடரும்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோசமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

மேலும் பல செய்திகளை படிக்க click: blog.TdtaChristianMatrimony.com


Comments

Popular posts from this blog

கலாச்சார நீரோடையில் அடித்துச் செல்லப்படும் திருச்சபை

நற்கிரியை செய்யும் பெண்

கவர்ச்சியா? கண்ணியமா?