படிப்பதே எனது டைம்பாஸ்


பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பார்த்து உனக்குப் படிக்கனும்னா மட்டும் வயிறு வலிக்கும், காய்ச்சல் அடிக்கும்.  ஆனால் விளையாட்டுன்னா போதும் காய்ச்சலும், வயிறு வலியும் பறந்து போயிடும்மே என்று சொல்லுவார்கள்.  

படிப்பு என்றால் விருப்பம் இல்லை.  ஆனால் விளையாடுவதற்கு 100 சதவீதம் மனம் ஆர்வமாக இருப்பதால் உடல் உபாதைகள் ஒரு பொருட்டாக இருப்பதில்லை.  எனவே ஒரு உண்மை புரிகிறது.   எதை நாம் விருப்பத்தோடு மனமுவந்து செய்கிறோமோ, அப்பொழுது எந்த இடையூறும் நமக்குத் தெரிவதில்லை.  அதைப் போலவே, ஜாலியாகப்படிக்க வேண்டும்.  ஜாலியாக Practical செய்ய வேண்டும்.  புதிதாகக் கண்டுபிடிப்பது போல் Project அமைய வேண்டும்.  

ஒவ்வொன்றும் ஒரு புதையலைத் தேடுவது போல் தேடினால் படிப்பது ஒரு சுகம் தானே. அதிலும் மேல்படிப்பு என்பது 100 சதவீதம் நம் கையில் தான் இருக்கிறது.  எதை Choose பண்ணப் போகிறோம் என்பதைப் பொருத்தே தான் நம் எதிர்காலமும் அமையப் போகிறது.  எனவே வாழ்வே குதூகலமாக இருக்கும்படி நமது படிப்பைத் தெரிந்தெடுக்க வேண்டும்.

எதை நோக்கிப் பயணிக்கிறோம்? 

பள்ளிகளில் 9ம் வகுப்பு வரை What is your ambition? என்றவுடன் பாதிக்கு மேற்பட்டோர், டாக்டர் என்றும், மீதிப்பேர் இஞ்ஜினியர் என்று கூறுவர். ஒரு சிலரே மாற்று வேலைகளைக் குறிப்பிடுவர்.  ஆனால் 12 ஆம் வகுப்பு வந்த பின், அதேக் கேள்வியைக் கேட்கும் போது 10 சதவீதம் மட்டுமே டாக்டர் என்றும் அதிகபட்சமானபேர் இஞ்சினியர் மற்றும் குறைந்த சதவீதம் பேர் பிற படிப்பையும் குறிப்பிடுகின்றனர்.  எனவே Ambition என்பது சில வேளைகளில் மாறிக் கொண்டே இருக்கிறது.  காரணம், நாம் டாக்டர் ஆகுவதற்கு ஏற்ப மதிப்பெண் எடுக்க முடியுமா என்ற நம்முடைய உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கின்றனர்.  புரிந்து கொண்டால் சரி, புரிந்து கொள்ளாவிட்டால் தான் பிரச்சனை.  உயிரியல் பாடத்தில் 120 எடுத்துக் கொண்டிருந்தவர்கள் திடீர் என்று முழுவருடத் தேர்வில் 200/200 மதிப்பெண் பெற இயலாது.  இந்த உண்மையைப் புரியாவிட்டால் விரக்தியும், தற்கொலைகளும் ஏற்பட்டு விடுகிறது.  நம்முடைய விருப்பம், கனவு டாக்டராக இருப்பினும், கனவை அடைவதற்கு எடுத்த முயற்சிகள், சவால்கள் இல்லையென்றால் அதை அடைய இயலாது.  நம்மைச் சரியாக மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்.  மதிப்பெண் வரும் வரையில் காத்திராமல் நம்முடைய மதிப்பெண்ணை நாமே சரியாக நிதானித்துக் கொள்ள வேண்டும்.  

விருப்பத்திற்கு எதிராகப் பெற்றோரின் சிந்தனை 

பிள்ளைகளுடைய விருப்பம் ஒன்றாகவும், பெற்றோரின் விருப்பம் ஒன்றாகவும், சில வேளையில் அமைந்து விடும். பிள்ளைகள் இஞ்சி னியர் படிக்கவும், பெற்றோர் B.Sc., Maths எடுக்கவும் விரும்பலாம்.  இதில் பிள்ளைகளின் விருப்பம் முக்கியம்.  ஏனெனில் படிக்கப் போவது பிள்ளைகள் தான், மனம் இருந்தால் எவ்வளவு பெரிய மலையையும் தாண்டலாம், மனம் இல்லாவிட்டால் சிறிய முயற்சி கூட வெற்றி பெறாது.

அதே வேளையில் பிள்ளைகள் தவறானப் படிப்பைத் தேர்வு செய்யும் போது பெற்றோர்கள் மறுப்பதும் சரியே.  ஏனெனில் வேலைவாய்ப்பு இல்லாத ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்து விட்டால் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறிவிடும்.  எனவே பெற்றோர் பயப்படுவது இயற்கையே.  சில வேளைகளில் அனுபவம் நிறைந்த பெற்றோருடன் கலந்து பேசி முடிவெடுப்பதே காலச் சிறந்தது.  

வேலைவாய்ப்பை நிர்ணயிக்கும் படிப்பு 

மனிதன் படிப்பதின் ஒரு நோக்கம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே எந்தப் படிப்பைப் படித்தால் அதிகச் சம்பளம் கிடைக்கும் என்று ஆறாம் வகுப்பு படிக்கும் போதே என் மகள் என்னிடம் கேட்கும் போதே தெரிகிற உண்மை என்னவென்றால், சிறு வயது முதற்கொண்டே வேலைவாய்ப்பைச் சம்பாத்தியத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது.  மக்களுக்குச் சேவை செய்ய வரும் மருத்துவப் படிப்பே இன்று வருவாயை ஈட்டும் தொழிலாக மாறிவிட்டது.

இருப்பினும் சமூக வேலை செய்கிறவர்கள் இறைப்பணி செய்கிறவர்கள், சிலர் தான் வேலையைப் பணத்திற்காகச் செய்யாமல் இறைவனுக்காக அல்ல, மனித ஈடேற்றத்திற்காகச் செய்கின்றனர்.  அதுவும் அத்தி பூத்தால் போல் மாறி வருகிறது.  எனவே சுயநலத்தோடு பணம் சம்பாதிக்கும் எண்ணத்திலேயே பெரும்பான்மை மக்கள் படித்து வருகிறார்கள். 

இச்சூழலில் அதிகச் சம்பளம் கிடைக்கும் என்று அரிதான படிப்பை எடுத்துப் படிக்கும் போது வெற்றி பெற முடியாமல் மாறிவிடுவதும், சிலவேலை அரிதான படிப்பிற்குக் குறைவான வேலை வாய்ப்புகளே கிடைக்கும் சூழல் வருவதும் உண்டு. 

கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்து, படித்தவுடன் மகன் வேலை பார்க்கும் சூழல் இருக்குமாயின், அரிதான வேலை வாய்ப்பைத் தேடிக் குடும்பத்தை இழந்து விடக்கூடாது.  எனவே சிந்தித்துப் படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.

நம்முடைய சூழலுக்கு ஏற்ற படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும்

நாம் வளர்ந்த சூழல், பண்பாடு எல்லாம் எப்பொழுதும் நம் கூடவே வந்து கொண்டிருக்கும்.  சிலவேளை வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் படிக்க விரும்பும் போது, அந்தப் பகுதியின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், சுற்றுச்சூழல் போன்றவை நம்மைப் பாதிக்கும்.  அதை எதிர்கொள்ள முடியுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.  குறிப்பாகத் தமிழ்நாட்டில் வளர்ந்தவர்கள் வெளிநாட்டிலோ, வெளி மாநிலமோ செல்லும் போது அங்குள்ள வெப்பம், அங்குள்ள குளிர் நமது உடலுக்கு ஒத்துக் கொள்ளுமா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  இல்லையென்றால் இடையிலேயே நாம் சுகவீனமாகிப் படிப்பைத் தொடர முடியாமல் போய்விடும்.  உணவுப் பழக்கங்கள் நமக்கு ஒத்துவருமா என்பதைப்புரிந்து கொள்வது அவசியம்.  

கல்லூரியைச் சரியாகாத் தேர்வு செய்ய வேண்டும்.  

நாம் படிக்கப்போகிற கல்லூரி நம் வாழ்வை வளமாக்கக் கூடியது என்பதை மறந்துவிடக் கூடாது. எல்லா இடமும் ஒரே படிப்பு தானே என்று முடிவு கட்டக்கூடாது.  நாம் படிக்கப் போகிற கல்லூரியில் உள்ள லேப் எப்படி இருக்கிறது.  Project  செய்ய நம்மை எப்படி ஊக்குவிக்கிறது?  படித்தபின் இந்த கல்லூரியைப் பற்றி வெளியே கூறும் போது எப்படி மதிப்பிடப்படுகிறது.  நம்முடைய Skill -யை வளர்த்து கொள்ள எப்படிப்பட்ட Seminars மற்றும் வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  அங்கு பாடம் எடுக்கப்போகிற Professors எப்படிப்பட்ட தரம் வாய்ந்தவர்கள், உலக அளவில் தரம் பெற்றவர்களா அல்லது நம்மை மனப்பாடம் செய்து தேர்வு எழுத வைப்பவர்களா? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  அங்கு படிக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் படிக்கும் கல்லூரியா அல்லது பணத்தை மட்டும் மையமாகக் கொண்டு செயல்படும் கல்லூரியா?, நமது எதிர்காலத்தை தீர்மானிக்கப்பபோகும் கல்லூரியைச் சரியாக தேர்வு செய்தால் மட்டுமே நல்ல எதிர்காலம் அமையும். 

என்ன வாய்ப்புகள் இல்லை இந்த இந்தியாவில்...

படிப்பது என்றாலே 90 சதவீதம் பேர் மருத்துவத்தையும், பொறியியலையுமே சிந்திக்கிறார்கள்.  ஆனால் பொருளாதார நிபுணர்களாக மாறுவதற்கும், கல்விக் கற்றுக் கொடுப்பதற்கும், சுகாதாரத்துறைகளில் பணியாற்றவும், விவசாயத்தில் முற்போக்கான துறைகளில் பணியாற்றவும், சட்ட நிபுணர்களாகவும், மனிதவள மேம்பாட்டில் ஈடுபடவும், மருத்துவத் துறையில் பல்வேறு விதமான நுண்ணிய பிரிவுகளில்  பயிலவும், கடல் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடவும், இப்படி, பல்வேறு விதமான படிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.  அவைகளைப் புரிந்து, புதிய புதிய வாய்ப்புகளை நீங்கள் கைப்பற்ற முயற்சி செய்யுங்கள். 

எவைகளை நீங்கள் கற்றுத் தேர்ந்தாலும் அவைகளை மனுக்குலத்தின் பயனுக்காகவேப் பயன்படுத்துங்கள்.  இறைவன் மனிதனுக்குக் கொடுத்த உலகை நல்லதாகவேப் பயன்படுத்துவோம்.  நன்றாகப் படித்தால் எப்படிச் சம்பாதிக்கலாம் என்று நினைப்பதை விட, எத்தனைப் பேருக்கு நான் பயனுள்ளவனாக இருக்கலாம் என்று திட்டமிடுங்கள்.  உலகத்தில் நீங்கள் வாழ்ந்தீர்கள் என்பதை இவ்வுலகத்திற்கு உங்களின் சேவையைக் காட்டுங்கள்.  அப்பொழுது வருங்காலச் சந்ததி உங்களுக்கு நன்றியுள்ளதாக இருக்கும்.  உங்கள் வாழ்வு செழிக்க, சிந்தித்து, படிப்பைத் தேர்வு செய்யுங்கள்.  அனுபவமுள்ளவர்களோடு கலந்துரையாடி முடிவெடுங்கள்.  தோற்றவர்கள் பக்கம் போய் ஆலோசனைக் கேட்காதிருங்கள். அவர்கள் உங்கள் உற்சாகத்தைக் குறைத்து விடுவார்கள்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் பிரியமே 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்  

Comments

Popular posts from this blog

கலாச்சார நீரோடையில் அடித்துச் செல்லப்படும் திருச்சபை

நற்கிரியை செய்யும் பெண்

கவர்ச்சியா? கண்ணியமா?