திருச்சபையில் முதியோர்களின் பங்கு


உலகிற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்த முதியோர்களும் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின்பு வீட்டிற்குள் முடங்கிவிடும் சூழல் ஏற்பட்டு விடுகிறது.  உடலில் பல்வேறு நோய்கள் வந்து ஒட்டிக் கொள்ளுகிறது.  தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்ல உடல் ஒத்துழைப்பதில்லை.  முதுமையின் காரணமாகச் சரியாக மற்றவர்கள் பேசுவது கேட்பதில்லை.  ஆகவே அனைத்து விஷயங்களும் அவர்களிடம் பேசாமல், அவர்களுக்குக் காது கேட்காது அவர்களை விட்டு விடுங்கள் என்று கொஞ்சம், கொஞ்சமாகச் சமூகத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.  மற்றவர்கள் பேசுவதைக் கேட்கமுடியாததால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.  

வேலைப்பார்த்து ஓய்வுப்பெறுவதால் இதுரைப் பெற்ற மரியாதை குறைந்து விடுகிறது.  புதிதாகப் பல்வேறு மாற்றங்கள் ஒவ்வொரு துறையிலும் நடைபெறுவதால் ஆலோசனைகள் கேட்பதைக் கூடப் பலர் தவிர்க்கின்றனர்.  அவர்கள் பழங்காலத்தைச் சார்ந்தவர்கள், அவர்களுக்கு நடப்புக் காரியங்கள் தெரியாது என்று ஒதுக்கி விடுகின்றனர்.  பல்வேறு வருடங்களாக பெற்ற அனுபவங்கள் கூட அவசியம் இல்லை என்று அலட்சியப்படுத்தப்படுகிற முதியோர்கள் மீது திருச்சபை அன்பு காட்ட முன்வர வேண்டும்.  

தினமும் ஆலயத்திற்குச் செல்பவர்கள் ஆலயத்திற்குச் செல்ல முடியாமல் போகும் போது ஆண்டவருக்கும், இறை மக்களுக்கும் தொடர்பு விட்டு விட்டது போன்ற உணர்வு வருகிறது.  ஆலயத்தில் உட்கார்ந்து ஜெபித்து விட்டுப் பலரோடு பேசி மகிழ்கிற சூழல்கள் அற்றுப்போவது தனிமையை வருவிப்பதாக அமைந்து விடுகிறது.  

பழைய காரியங்களை மறப்பது பெரியவர்களுக்கு இயற்கையாக வரும்போது அவர்களிடம் கேட்டு ஒரு பயனுமில்லை என்று தூரவீசி எரிகிற பழைய துடைப்பம் போன்று உணர ஆரம்பிக்கின்றனர்.  எனவே தான் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 28% மனநிலையில் பாதிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர்.

பணிசெய்ய இடமில்லை ஆனால் பரமனிடம் இடமுண்டு

ஒரு மனிதனுடைய வேலைதான் ஒருவருக்கு சமூக அந்தஸ்தை கொடுக்கிறதாக அமைகிறது.  பணியினிமித்தமாக யார் வந்து பார்ப்பதும், Recommendக்காக காத்து இருப்பதும், நம்மால் பல குடும்பங்கள் வாழ்வதும் பெருமையளிக்கக் கூடியதாக இருக்கிறது.  பலரின் முன்னேற்றம் ஒரு மனிதனின் கையிலிருக்கும் போது, அந்த மனிதன் சமூகத்தால் உயர்ந்த இடத்தில் வைக்கப்படுகிறான்.  ஆனால் முதியோராக மாறி ஓன்றும் செய்யமுடியாத நிலைக்குத்தள்ளப்படும் போது அந்த மனிதன் சமூக அந்தஸ்தை இழக்க நேரிடுகிறது.  எனவே வாழ்வில் அர்த்தமில்லாமல் இருப்பது போன்று உணர்வு வர ஆரம்பிக்கிறது.  இச்சூழலில் திருச்சபையானது அவர்கள் மீது அன்பு செலுத்தவும், அவர்களை மதிப்போடு நடத்தவும், அவர்கள் அனுபவத்தை இளம் தலைமுறையோடு பகிர்ந்துக்  கொள்ள வாய்ப்பளிக்கவும் இடங்கொடுக்க வேண்டும்.  ஒரு முதியோரின் அனுபவம் என்பது பல புத்தகங்களில் கிடைக்கும் அனுபவத்தைக் காட்டிலும் மேலானதாக அமையும்.  

பொறுப்பு இல்லை ஆனால் ஆண்டவரின் அரவணைப்பு உண்டு 

மனிதன் வயதாகும் போது  அவன் உடல்நிலை மட்டும் குறைவதில்லை. அதோடு அவனுடைய பொருளாதார நிலையும் குறைவுபட ஆரம்பிக்கிறது.  தொழில் செய்பவர்களால் தொழில் செய்ய முடியாது.  அரசுப் பணி செய்தவர்களுக்குப் ஓய்வூதியப் பணம் கிடைக்கலாம், அதுவும் மருத்துவச் செலவுகளுக்கே போய்விடும்.  எனவே பிள்ளைகளை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டு விடும்.  சமூக அளவிலும் மரியாதையின் நிமித்தமாக அவர்களோடு வந்து பேசி மகிழ்பவர்கள் குறைந்து விடுவர்.  ஆலயத்தின்  காரியங்களிலும் முன் நின்று செய்ய இயலாது.  இருப்பினும் திருச்சபை மக்கள் கிறிஸ்மஸ், தபசு நாட்களில் முதியவர்களைச் சந்தித்து அவர்களுக்குப் பிடித்த பாடல்களைப்பாடி, சிற்றுண்டி கொடுத்து மகிழ்ந்தால் அவர்கள் உள்ளம் மகிழும்.

உலகப்பொறுப்பில் ஓய்வு இறைபணியில் துவக்கம்  

மிசோராம் மாநிலத்தில் உள்ள என் நண்பர் ஒரு நாள் பேசும் போது குறிப்பிட்டார்.  எங்கள் மாநிலத்தில் முதியவர்கள் அமைப்பைப் பார்த்து அரசாங்கமே பயப்படும் என்றார்.  காரணம் முதியவர்கள் அமைப்பில் பல்வேறுபட்ட பணியினைச் செய்து முடித்தவர்கள் இணைந்து செயல்படுவதால் அவர்களின் அறிவும் செயல்பாடும் அரசாங்கத்தை மிரளச்செய்கிறதாக இருக்கிறது.  அப்படியென்றால் முதியவர்களின் அறிவையும், திறமைகளையும் திருச்சபையானது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  திருமறையில் தாவீது வயது சென்றவனாக இருந்தாலும் சாலமோனுக்கு அறிவுரைச் சொல்லுகிறதைக்காண முடிகிறது.  அதைப்போன்று சாலமோனின் மகன் ரெகோபெயாம் முதியோரின் ஆலோசனைகளை அபத்தமாக எண்ணினதால் அவன் ராஜ்யபாரமே சிதைவுற்றது.  எனவே திருச்சபையில் முதியோர்கள் சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். 

திருச்சபையின்  முதியோர்களைத் தர்னார்வப் பணியில் ஈடுபடுத்த முற்படவேண்டும்.  சமுதாயத்திற்கு ஏற்ற செயல்பாடுகளில் ஈடுபடவும், திருச்சபையின் வரலாறுகளை எழுதவும், பொருளாதாரத்தை மேம்படுத்த ஆலோசிக்கவும், ஏழை எளியவர்கள் மீது கரிசனைக்கொண்டு திட்டங்கள் தீட்டி மக்களுக்கு வேலைச்செய்யவும், அனாதைகளுக்கு உதவிகள் மேற்கொள்ளவும், நோய்வாய்பட்டவர்களுக்குச் சேவைபுரியவும், ஜெபிக்கவும் ஊக்கப்படுத்த வேண்டும்.

உறவுகள் மேம்பட வேண்டும் 

55 முதல் 74 வயது வரை “Young Old”  இளமையான முதுமை என்றும் 75 வயதுக்குப்பின் “Old Old” முழு முதுமை என்றும் பிரிக்கின்றனர்.  இதில் இரண்டாவது கூட்டத்தைப் பெரியவர்கள் அடையும் போது பிள்ளைகளும் 50 வயதுக்கு வந்து விடுகின்றனர்.  இக்காலக் கட்டத்தில் பெற்றோரைக் கவனிப்பதில் சிலர் சிரமப்படுகின்றனர்.  இச்சூழலில் உறவுகள் நிலைத்திருக்கத் திருச்சபை மூப்பர்கள், பொதுமக்கள் உதவிட வேண்டும்.  அதே வேளையில் வீட்டிற்குச் சென்று திருவிருந்து பரிமாறுதல், பாடங்கள், ஆராதனைகள் நடக்கும்போது மகிழ்ச்சியாக இருந்து, இறைவனைப்பற்றிக்கொள்ள எதுவாக அமையும்.

முதியோர் இளையோர் சந்திப்பு 

இளைஞர்கள் முதியோரை ஒதுக்குவதும், முதியோர்கள் இளைஞர்களைப் பார்த்து நகைப்பதும் இன்று நடைபெறுகிறது.  இதற்கு மாற்றாக முதியோர் தங்கள் ஞானத்தைப் பகிர்ந்து கொடுக்கவும், தங்கள் அனுபவத்தை இளையோரோடு பகிர்ந்துக் கொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.  இளம் தலைமுறையானது முதியோர்களின் நிலமையைப் புரிந்துக் கொள்ள இடம் கொடுக்க வேண்டும்.  இழப்புகள், துன்பங்களைத் தாண்டி எப்படி வந்தோம் என்று அனுபவப்பகிர்வானது, இளைஞர்களின் வாழ்வில் வலுயூட்டுவதாக அமைய வேண்டும்.  தற்கொலைதான் விடை என்று ஓடுகிற இளம்தலைமுறையைத் தடுத்து நிறுத்த இது உதவியாக அமையும்.  

லூக்கா 2:28-32 சிமியோன் பாடினது போல் "ஆண்டவரே உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்துடன் போக விடுகிறீர்... உம்முடைய இரட்சண்யத்தை என் கண்கள் கண்டது" இன்றைய சமுதாயத்தில் இளைஞர்கள், முதியோர் ஒருவரை ஒருவர் ஏற்று வாழத் திருச்சபை உதவிட வேண்டும்.  

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் பிரியமே 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி