புரிந்து கொள்ளுதல்



நான் சிறுவனாக இருந்தபோது எங்களது வீட்டின் முன், செடி ஒன்றை வளர்த்தோம்.   நாளடைவில் அது மிகப் பெரியதாக வளர்ந்து பூப்பூக்க ஆரம்பித்தது.  அது மாலை வேளையில் மலர ஆரம்பிக்கும்.   மாலை ஜெபத்திற்காக எங்களது வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு வரும் மக்கள் அந்த மொட்டுக்கள் மலர்ந்து நறுமணம் வீசுவதை அனுபவித்து அதைப் பற்றிப் பேசிக் கொண்டே செல்வார்கள்.   மலர்கள் மலர்ந்த பின்னரே அதன் நறுமணத்தை நம்மால் உணர முடிகிறது.  அதுபோல இல்லற வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசும்போதுதான் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியும்.

இன்றைய இல்லற வாழ்க்கையில் புரிந்து கொள்ளுதல் சரியாக நிகழாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.   இன்றைக்குத் திருமணத்திற்கு முன்பே, வேலை பார்க்கும் மணமகன், மணமகளாக இருக்க வேண்டுமென விரும்புகின்றனர்.   மக்களின் குறிக்கோளே பணம் தான்.  எவ்வளவு சம்பளம்? என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பு.   மனித வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு உதவுவது பணமா?   அல்லது பணத்திற்கு வாழ்வில் முதல் இடமா? கணவனும், மனைவியும் ஒரு நாளில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உழைத்துச் சம்பாதிக்க வேண்டும்.   பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்ற பரிதாப நிலைக்குள் மனிதன் வந்துவிட்டான். வாழ்க்கையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் கைநிறையச் சம்பளம், ஆனால் மகிழ்ச்சியோடு கரம்பிடித்து நடக்க மனைவி அல்லது கணவன் இல்லை. மாடமாளிகை போன்ற வீடு. ஆனால் தனிமரமாக வாழ்க்கைப் பயணத்தைக் தொடருகின்றனர்.

ஒருவரோடொருவர் நேரம் செலவிடாமல் இயந்திரமாக உழைப்பது, புரிந்து கொள்ள இயலாமைக்கு முக்கியக் காரணம் ஆகும்.

சில பெண்கள் திருமணமானவுடன் கணவன் வீட்டிற்கு வந்த வேலைக்காரி போன்று நடத்தப்படுகின்றனர்.   பெண்ணானவள் கணவன் வீட்டிற்கு வந்தவுடன் கணவன் மட்டுமே அவளுக்கு ஆதரவாக இருக்கக்கூடும்.   கணவன், மனைவி இருவரும் பேசி மகிழ இடம் கொடுக்காமல் மகனை தன்னுடைய பிடியிலேயே வைக்க விரும்பும் மாமியார், புரிந்து கொள்ளுதலுக்குத் தடையாக இருக்கின்றனர்.   கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலேயே சந்ததி பெருகுகிறது.  

பிள்ளைகள் படித்து, வேலைக்கு வெளியே செல்கிறபோதும் அல்லது திருமணமாகிச் சென்ற பின்பும் இந்தக் குடும்பங்களில் கசப்புணர்வுகள் பெருக வாய்ப்பு உள்ளது.   பிள்ளைகளே, பெற்றோருக்கு அறிவுரை சொல்லும் சூழலும் வரக்கூடும். புரிந்து கொள்ளுதலே இல்லாமல் 25 அல்லது 30 ஆண்டுகள் குடும்பம்  நடத்தியபின்னும் குடும்பவாழ்க்கை கசப்பாகவே இருந்துவிடுகிறது.

சிலர் மாமியார், மாமனார் இறந்த பின்னரே புரிந்து கொண்டு வாழ முயற்சிக்கின்றனர்.   அவர்கள் முன்பு கழிந்த நாட்களை நினைத்து வெட்கப்படுகின்றனர்.   புரிந்து கொள்ளாமல் காலத்தை விரயம் செய்துவிட்டோமே என்று வேதனைப்படுவர்.   துணைவர் இறந்த பின்னரே, அவரை நாம் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோமே என்று அங்கலாய்ப்பவர்களும் உள்ளனர்.     

படித்தக் குடும்பங்களில் இருக்கிற மிகப்பெரிய சிக்கல் தனித்துவம் பர்சனல் (Personal).   இது என்னுடைய Personal, இதில் நீ தலையிடக்கூடாது. உன்னுடைய Personalல் நான் தலையிடமாட்டேன்.   ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் வெளிக்காட்டாத அல்லது வெளியே சொல்ல இயலாத விருப்பு வெறுப்புகள் இருக்கலாம். ஆனால் அதைத் துணைவருக்கும் தெரியாமல் மூடி மறைக்க வேண்டுமா என்ற கேள்வி நமக்குள் எழும்பும்.

மனைவி பெயரில் வரும் தபால், இ-மெயில் மற்றும் SMS, Whatsapp ஆகியவற்றைக் கணவன், மனைவியின் விருப்பம் இல்லாமல் திறந்து பார்க்கலாமா?   மனைவி அதை விரும்பாத பட்சத்தில் கணவன் அவ்வாறு செய்வது தனி மனித உரிமை மீறலாகுமா?                         

இந்திய கலாச்சாரம், வெளிநாட்டுக் கலாச்சாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. இந்த விசயத்தில் திருமணத்திற்குப் பின் இருவரும் திறந்த புத்தகமாக இருப்பது சிறப்பு. 

இருப்பினும் இன்றைய சூழல்கள், பலர், தம் சுய விருப்பு வெறுப்புகளைத் திருமணமான பின்பும் மூடி மறைக்க விரும்புவதால் சிக்கல்கள் தொடருகின்றன.   மற்றொன்று ஒருவரின் விருப்பு வெறுப்புகளை அல்லது பலத்தை, பலவீனத்தை மற்றவர் புரிந்து கொள்ள விரும்பாமல், மற்றவரைத் தரக்குறைவாக நினைத்துக் கிண்டல் செய்வதும், சிக்கலுக்கு நேராக வழி நடத்தும்.

எதிர் எதிர் சிந்தையுடைய கணவன், மனைவியிடம் புரிந்து கொள்ளல் என்பது கடினப்படுகிறது. சில பெண்கள், குடும்பம், அதை சார்ந்த முன்னேற்றம் என்பதை மையமாகக் கொண்டு வாழ்வர். னால் சில ஆண்கள் பொது நலம், சமுதாய முன்னேற்றம் என்று வீட்டை மையமாகக் கொள்ளாமல் முற்றிலும் சமுதாயத்தை மையமாகக் கொண்டு வாழ்வர்.  

குடும்பத்தை மட்டும் மையமாகக் கொள்ளும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ நண்பர் குறைவு. அவர்கள் கணவன், பிள்ளை, பெற்றோரின் நல்வாழ்க்கையை மையமாகக் கொண்டு செயல்திட்டம் தீட்டுவர். ஆனால் சமுதாய நலம் உடையவர் நண்பர்கள், அதிகாரிகள் என்ற வட்டத்திற்குள் நின்று விடுகின்றார்.   எனவே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதிலே, ஏற்றுக் கொள்வதிலே சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இச்சூழலில் இருவரும் தங்கள் தங்கள் குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வரவேண்டும்.   குடும்ப வட்டத்தில் உள்ளவர் சமுதாய சிந்தை உடையவரைப் புரிந்து கொண்டு உதவி செய்யவும், சமுதாயம் என்ற வட்டத்தில் உள்ளவர் குடும்ப வட்டத்தில் உள்ள மனைவியின் விருப்பு வெறுப்புகளைப் புரிந்து உதவி செய்யவும் முயற்சிக்க வேண்டும். 

அவரவர் வட்டத்திலே நின்று கொண்டிருந்தால் உறவில் விரிசல் உண்டாகும். புரிந்து கொள்ளுதலே இல்வாழ்க்கையின் இன்ப துன்பங்களைப் பகிர உதவும் வாய்க்காலாகும்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோஷமான குடும்பம்  

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்