கலாச்சார நீரோடையில் அடித்துச் செல்லப்படும் திருச்சபை
தொலைக்காட்சியின் வருகைக்குப் பின் திருச்சபை மக்களிடையே பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சிறுவயது முதற்கொண்டே மாற்றங்கள் பெருகி வருகிறது. மாற்றம் என்பது தவிர்க்க முடியாத ஓன்று. பூமி சுற்றுவதை நிறுத்தமுடியாதது போல், பூமியில் நடைபெறும் மாற்றத்தையும் தடைபோட்டு நிறுத்த முடியாது. ஆனால் மாற்றம் என்பது விழுதலுக்கு நேராக இருக்கும் போது திருச்சபைக்குள்ளே விழிப்புணர்வு தேவை என்பதை மறுக்க முடியாது.
ஆராதனையில், சினிமாவில் வரும் "ஓ" போடு என்பதை அப்படியே திருச்சபையில் நடைபெறும் ஆராதனைகளில் "ஓ" போடு என்று கூறி அதற்கு "ஓசன்னா" என்று அர்த்தத்தைக் கொடுப்பதும் ஆராதனையில் நடைபெறும் தவறு என்று நினைக்கின்றேன். மக்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்களும் சொல்வோம்லா என்று "ஓ" போட வைத்து, மக்களைத் திசைதிருப்புவது தேவனுடையப் பார்வையில் தவறான செயல்.
ஆராதனை என்ற பெயரில் பாடகளைப் பாடி அளவுக்கு அதிகமாக இசைச்சத்தத்தில் என்னப் பொருள் என்றே தெரியாமால் மக்களை ஆடவைப்பது, இன்றைய சினிமாவுடைய தாக்கமாக இருக்கிறது. இளைஞர்கள் சினிமாவில் வரும் பாடல்கள் வரியை உணராமல் இசையைக் கேட்டே குத்தாட்டம் ஆடுவது போல், கிறிஸ்துவக் கூட்டங்களிலும் இசையை மேலோங்கச் செய்து பாடல் அர்த்தமே தெரியாமல் இசை மழையையே இறைப்பிரசன்னம் என்று அர்த்தத்தைக் கொடுப்பது கடவுளே சகித்துக் கொள்ள முடியாத காரியம் என்று நினைக்கிறேன்.
"புதிய சிருஷ்டியே காரியம்" என்று பவுலடியார் குறிப்பிட்டதற்குக் காரணம் ஒரு மனிதன் கிறிஸ்துவுக்குள் வந்தபின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதே. அது ஏற்படாவிட்டால், ஆராதனையின் பொருள் என்னவாகும். நேரம் விரயம் மட்டுமே நடக்கும்.
சென்னையில் ஒரு கிறிஸ்தவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர் பெயரைக் குறிப்பிட்டதும் மக்கள் கரங்களைத் தட்டினர். அடுத்த நிமிடமே, இசை அளவுக்கு அதிகமாக ஒலிக்க ஆரம்பித்தது. அந்தக் கூட்டத்தில் பந்தலைச் சரிப்படுத்திக் கொண்டிருந்த கிறிஸ்தவரல்லாத இளைஞர்கள் இசைக் கேட்டதும், துள்ளிக் குதித்து ஓடிவந்தனர். யாரெல்லாம் பாடல்பாடி நடனம் ஆட விரும்புகிறீர்களோ மேடைக்கு முன் வாருங்கள் என்றவுடன் அந்த இளைஞர்களும் ஓடி வந்தனர். பாடல் ஆரம்பித்தது, சினிமாப் பாடல் காட்சியைப் போல் ஆராதனை நடத்துகிறார்கள். பலர் அதில் ஓடி ஆடிப் பாடினார்கள். இதைப் பார்த்த உடன் அந்த இளைஞர்களும் கழுத்தில் போட்டிருந்த சிவப்பு நிறத்துண்டை எடுத்து உயர அசைத்து அசைத்து ஆட ஆரம்பித்தனர். அங்கிருந்த இளம் பெண்களும் ஆட ஆரம்பித்தார்கள். இந்த இளைஞர்களுக்கும் மேலும் மேலும் மகிழ்ச்சி. அரை மணி நேரத்திற்குப் பின் ஆராதனைகளை முடித்தார். அந்த இளைஞர்கள் களைப்பாகப் போய்ப் பந்தலுக்கு வெளியே போய் நல்லா ஆடியாச்சு என்று சிகரெட் குடிக்க ஆரம்பித்தார்கள்.
திருச்சபைமக்கள் ஆடக்கூடாது என்று நான் குறிப்பிடவில்லை. தாவீது ஆண்டவருக்கு முன்பாக நடனம் ஆடினார். ஆனால் சினிமா போன்று ஆடித் திசைமாறிச் செல்லக் கூடாது என்பதையே வலியுறுத்துகிறேன். ஆராதனைகள் இளைஞர்களைக் கவர வேண்டும். அதில் மாற்றம் இல்லை. ஆனால் உள்ளான கருத்து, புதிய வாழ்வுக்கு நேராக அழைத்துச் செல்லுதல் போன்றவை முக்கியாமாக இருக்க வேண்டும்.
இறைவழிபாட்டிற்குச் செல்லும் போது ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு அருகில் செல்லத்தக்கதாக ஒரு படி முன்னேற்றம் அடைய வேண்டும். அது ஆராதனை நடத்துகின்றவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமானவையாகும்.
திருச்சபை வழிபாட்டில் உடை
கிறிஸ்தவத் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். மணமகள் அணிந்திருந்த உடையைப் பார்த்து மக்கள் முகம் சுளித்துக் கொண்டு, ஒருவர் கூறினார், போதகர்கள் மக்களுக்கு என்ன கற்றுக் கொடுக்கிறார்கள்? நமது தமிழ் கலாச்சாரத்தைக் கிறிஸ்தவமே அழித்து விடும் போல் இருக்கிறதே என்று வேதனையை என்னிடம் கொட்டிச் சென்றார்.
சாதுசுந்தர் சிங் நாகர்கோவிலில் நடந்த ஒரு கூறுகையில் கிறிஸ்தவ பெண்மணிகள், பிற சமய பெண்களைக் காட்டிலும் நல்ல முன் மாதிரிகளாக இருக்க வேண்டும். காரணம், கிறிஸ்தவ சகோதரிகள் காலையில் எழுவது இல்லை. வீட்டின் முற்றத்தைத் தண்ணீர் விட்டுச் சுத்தப்படுத்துவது இல்லை. சோம்பேறிகளாக, குளிக்காமல், காலையில் அலைகின்றனர். இவைகளை மாற்ற வேண்டும் என்று ஒரு அறைகூவல் விடுத்தார்.
திருச்சபை கூடும் இடங்களில் தகுதியான உடையை உடுத்துவதற்குப் பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டும். மேல் நாட்டுக் கலாச்சாரத்தின்படி வாழ வேண்டும் என்பதில்லை. இன்டர்நெட், தொலைக்காட்சியில் வெளிநாட்டுக் கலாச்சாரத்தைப் பார்த்து அப்படியே நாம் காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்தியப் பெருஞ்சமயத்தில் கூட ஆலயத்திற்கு எப்படிப்பட்ட உடை அணிந்து ஆண்கள் மற்றும் பெண்கள் செல்ல வேண்டும். எப்படிச் செல்லக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறுகிறார்கள். ஆனால் கிறிஸ்தவத் திருச்சபைகளில் எந்த ஆடையையும் உடுத்திவரலாம் என்று எண்ணுகின்றனர்.
ஒரு இன்டர்வியுவிற்குச் செல்லும் போது கூட எந்த உடை தகுதியானது என்பது நாம் உறுதிச் செய்து அணிந்துச் செல்கிறோம். ஆனால் ஆண்டவர் சந்நிதிக்கு முன் வரும் பொது ஆண்டவர் உள்ளத்தைத் தான் பார்க்கிறார் என்று நமக்கேற்றார்போல் வசனத்தை மாற்றிக் கொள்கிறோம்.
இந்திய மிஷணெரி சங்கத்தின் ஊழியம் நடைபெறும் அரக்குப் பணித்தளத்திற்குச் சென்றிருந்தேன். மலையில் உள்ள ஒரு ஆலயத்திற்கு மாலை ஆராதனையில் பங்கு கொள்ளச் சென்றிருந்தேன். அங்கு வந்த மக்கள் கிழிந்த பனியன், கிழிந்த டவல் கட்டிக் கொண்டு ஆராதனையில் பங்கு கொண்டனர். அதைப் பார்த்தபோது என் மனம் உடைந்தது. ஆனால் இங்கோ பணக்காரர்கள் நல்ல உடையைக் கிழித்துப் போட்டுக் கொண்டு வருகின்றனர். கேட்டால், இது தான் இன்றைய மாடல் என்கின்றனர், நமது வாலிபப் பிள்ளைகள்.
லேவியராகமத்தில் ஆசாரியர்கள் எப்படிப்பட்ட உடையை அணிய வேண்டும் என ஆண்டவர் மோசேக்குக் கட்டளையாகக் கூறுகிறார். இன்று கர்த்தர் நம்மை ஆசிரியராகவும், லேவியர்களுமாகவே அழைத்துள்ளார் என்பதை மறந்துவிடக் கூடாது. அதற்காக பழைய கலாச்சாரத்திற்குப் போக வேண்டும் என்று நான் கூறவில்லை. சமுதாயம் அங்கீகரிக்கிற அளவிற்குத் தகுதியான உடையை உடுத்துவது மேலானது.
திருமண முறிவு
திருச்சபை மக்களிடம் திருமண முறிவு என்பது சாதாரணமாக மாறி வருகிறது. திருமறையின்படி வாழ்வை அமைத்துக் கொள்வதைக் காட்டிலும் சுயவிருப்பத்திற்கு ஏற்றப்படி வாழ்வை அமைத்துக் கொள்ளவே விரும்புகின்றனர். திருமணம் செய்யத் தான் போதகர் தேவையே தவிர, திருமணப் பிரச்சனைகளுக்குத் தேவையில்லை. சமயச் சடங்காரத்தை நிறைவேற்றும் பூசாரியாகவே வாழக் கிறிஸ்தவ மக்கள் விரும்புகின்றனர். திருமணத்திற்குப் பின் அது எங்கள் தனிப்பட்ட விசயம் இதில் ஏன் போதகர் தலையிடுகிறார் என்ற சூழ்நிலை உருவாக்கி வருகிறது.
கணவனும், மனைவியும் மணமுடிக்கும் முன்பே நல்ல சம்பளம் வாங்குகின்றனர். சுயமாக வாழ முடியும் என்ற துணிவு, ஒரு வாலிபனுக்கும், வாலிப சகோதரிக்கும் உருவாகி விடுகிறது. எனவே திருமணத்திற்குப் பின்னும் சண்டைகள் வந்தால் என்னால் தனித்து வாழ இயலும் என்று எளிதாகப் பிரிந்து விடுகின்றனர். ஆனால் இறைவனுடைய திட்டம் சேர்ந்து வாழ்வது தான் என்பதை உறுதிப்படக் கூற முடியாமல் தவிக்கிறது திருச்சபை. அதெல்லாம் நடக்காத காரியம் என்று தங்களுக்குத் தாங்களே நியாயம் கற்பிக்கும் நிலமைக்குள்ளாகிவிட்டோம்.
திருச்சபை மக்கள் தீர்க்கமாக திருமறையின் வழியில் நின்று நம்மைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். வெளிக் கலாச்சாரத்தை உள்வாங்கும் போது திருமறையின் வசனங்களிலிருந்து பிறழாமல் இருக்க முற்பட வேண்டும். திருமறைக்கு மாறுபட்ட திருச்சபை வளர்வதில் பயனில்லை. மீண்டும் திருமறைக்குத் திரும்புவோம்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் பிரியமே
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்
Comments
Post a Comment