பிறர் தலையீடு


குடும்ப வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் உதவியாக இருந்தால் வாழ்க்கை மிகவும் இன்பமாக அமையும்.  ஆனால் தவறான நபர் வாழ்க்கையில் தலையிட்டால் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும்.

ஒரு இளம்பெண், திருமணம் முடிந்ததும் மிகுந்த மகிழ்ச்சியோடு கணவன் வீட்டிற்குச் சென்றாள்.  வீட்டில் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.  காரணம் முழுக்குடும்பமும் மாமியார் மற்றும் மாமியாரின் தங்கை ஆகியோரால் ஆட்டுவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.  அணுவேனும் மாமியாரின் சொல்லின்றி அசைய முடியாது.  வீட்டிற்கு வந்த மருமகள் அவள் சொந்தக் காரியங்கள் எதைச் செய்தாலும் மாமியாரின் அனுமதியோடு தான் செய்ய வேண்டும்.  சுதந்திரப் பறவையாக வாழ்ந்த பெண்ணுக்கு இது பிடிக்கவில்லை.  உடனே தன் பெற்றோருக்குச் செய்தியைச் சொல்ல, அந்த அன்பிற்குரிய பெற்றோர் உடனே தங்கள் மகளைத் தங்களோடு வைத்துக் கொண்டார்கள்.  தனித்து வாழ்வதற்கான பேச்சுக்க இடமில்லை என்று மாமியார் மறுக்க, நீதிமன்ற வாசலை மிதிக்கும் இழிவான நிலை.

திருமணம் தங்கள் பிள்ளைகளின் நன்மைக்காக நடந்த்துகிறோமா அல்லது நமது சமுதாய அந்தஸ்துக்காக நடத்துகிறோமா என்ற கேள்வி எழுகிறது.  பிள்ளைகளின் விருப்பு, வெறுப்புகளை விட மாமியார், பெற்றோரின் விருப்பு வெறுப்புகள் மேலோங்கி விட்டால் பிள்ளைகளின் வாழ்க்கை கேள்விக் குறியாக மாறிவிடும்.  திருமண ஏற்பாட்டின் போது பலரைப் பார்த்து, பின்பு ஒழுங்கு செய்து, திருமண அழைப்பிதழை வீடு வீடாகச் சென்று கொடுத்து, திருமணத்திற்காகப் பல இலட்சத்தைச் செலவு செய்து, ஆலயத்தில் பல ஆயர்கள் ஜெபித்து, உற்றார் உறவினர்கள் வாழ்த்தி நிறைவேறுவதற்கு எவ்வளவோ நேரம், பணம் செலவிடுகிறோம்.  ஆனால் பெற்றோரின் சொந்த விருப்பு, வெறுப்பிற்காக திருமணத்தை முறிக்கலாமா?   

மணவிலக்கு செய்து கொண்ட பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் திருமணம் முறிவுற்றதைக் குறித்து வருந்துகின்றனர் என ஆராய்ச்சி கூறுகிறது.  திருமண வாழ்க்கையில் ஈடுபடுவர்களைக் காட்டிலும் இவர்கள் உடல் நலம் மற்றும் மனநனலப் பிரச்சினைகளால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.  திருமணம் முறிவுற்றதால் குடும்பத்தில் உள்ள பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்களும் வேதனைப்படுகின்றனர். 

சின்னச் சின்ன பிரச்சினைகளைப் பெரிதாக நினைத்துப் பிரிந்துவிட்டோமே என்று பலர் வருந்துகின்றனர்.  ஏனெனில் திருமண முறிவுக்குப் பின்னர் அவர்கள் எதிர்கொள்ளுகிற பிரச்சினைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவைகளெல்லாம் ஒன்றுமில்லாதவை எனத் தோன்றுகிறது. பிளளைகள், தகப்பன் அல்லது தாய் இல்லாமல் ஏங்கும்போது அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு யாராலும் இயலாது.  அந்தப் பிள்ளைகளின் ஏக்கங்களைப் பாட்டி அல்லது தாத்தாவால் நிறைவு செய்ய இயலாது.  அவர்களுக்கு எவ்வளவு பொருட்கள் வாங்கிக் கொடுத்து மகிழ வைத்தாலும் பெற்றோருக்கு இணை ஒன்றுமில்லை.

நண்பர்கள், பெற்றோர், சகோதரர்கள், உறவினர் நமது திருமண முறிவுக்குக் காரணமாக இருக்கலாம்.  நாங்கள் இருக்கிறோம் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுகிறோம் என்பர்.  ஆனால் எல்லாக் காலங்களிலும் இவர்கள் நமக்கு உதவமாட்டார்கள் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.  நாசியில் சுவாசமுள்ள மனிதனை நம்புவதைக் காட்டிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் என்று திருமறை கூறுகிறது.  இன்று நான் இருக்கிறேன் என்று கூறும் சகோதரன் நாளை திருமணம் செய்து கொண்டு, தன் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டு போய்விடுவான்.  திருமண முறிவை சவாலாக ஏற்கும் பெற்றோர் வயோதிப காலத்தில் தங்களைப் பராமரிக்க தங்கள் பிள்ளையைப் பயன்படுத்தி விட்டு இடையிலே விட்டு விட்டுச் செல்வர்.  உறவினர்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அவர்கள் வீட்டில் நடக்கும் விசேஷ வைபவங்களுக்கு அழைப்பதைக் கூட மறந்து விடுவர்.  காரணம் நமது வாழ்க்கை யாருக்கும் முக்கியமில்லை.  நீங்கள் மற்றவர்களைச் சமூக அந்தஸ்துக்காகச் சார்ந்திருப்பதால் நீங்கள் செல்லாக்காசாக மாறிவிடுவீர்கள்.  எனவே திருமண முறிவுக்குப் பிறர் பச்சைக் கொடியைக் காட்டினால் அவர்களை நம்பாமல் ஓடிவிடுங்கள்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோஷமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்