இரகசியம் காத்தல்
டிங்டாங்.... டிங்டாங்.... ஆலயமணி ஓசை பலமாக விழுகிறது. மணியின் கயிற்றை மிகவும் உற்சாகமாக இழுத்து இழுத்து விடுகிறார் ஆலயப் பணியாளர் சுவிசேஷமுத்து.
சிறுபிள்ளைகள் கிறிஸ்துமஸ் நாடகங்களையும், பாடல்களையும் பாடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டு பட்டாம் பூச்சிகளைப் போன்று அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
புத்தாடை உடுத்தினவர்களாக ஆங்காங்கே பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நாடகத்தின் பாத்திரங்களுக்கேற்ப உடையை உடுத்திவிடுவதில் பெருமகிழ்ச்சியோடு அலைகின்றனர்.
தெருக்களெல்லாம் ஒளிவிளக்குகளும், தொடர் விளக்குகளும் மின்னிக் கொண்டிருக்கின்றன. ஆலயத்தின் முன் சிறப்பான அலங்காரத்துடன் நாடக மேடை கெம்பீரத்துடன் காட்சியளிக்கிறது.
பழைய சேலையுடன், தளர்ந்த நடையுடன் ஒரு பெண் ஆலயத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறாள். அருகில் வரும்போது போதகர் புரிந்து கொண்டார். அவள் ஆலயத்தைச் சேர்ந்த சரோஜினி. போதகர் அமல்ராஜைப் பார்த்து, ஐயா இனி என்னால் என் கணவரோடு சேர்ந்து வாழ முடியாது என்று கூறித் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். என்ன விஷயம் என்று கேட்க, மீண்டும் சத்தமிட்டு அழ ஆரம்பித்தாள்.
சிறிது நேர அமைதிக்குப் பின்..... என்ன நடந்தது கூறுங்கள் என்றார் போதகர் அமல்ராஜ்.
ஐயா என்னை தவறாக பேசி அவமானப்படுத்துகிறார் என்று கூறி மீண்டும் ஒ... என்று கதறி அழ ஆரம்பித்தாள்.
அந்த வேளையில் பழைய அழுக்கடைந்த சட்டையுடன், கண்களில் கோபத்துடன் மனைவியை வெறித்துப் பார்த்துக்கொண்டு ஆலயத்திற்குள் நுழைந்தார், அவள் கணவர் லாமேக். அவர் போதகரைப் பார்த்ததும் சற்றுப் பொறுமையுடன் அவர் அருகில் வந்தார்.
ஐயா கணவன், மனைவி வாழ்க்கையில் ஒன்றையும் மறைக்கக்கூடாது. அப்பொழுதுதான் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ முடியும் என்று நினைத்து என் இளம் வயதில் செய்த தவற்றை எல்லாம் அவரிடம் கூறினேன். ஆனால் அவரோ அவைகளையெல்லாம் இப்பொழுது சுட்டிக்காட்டி நீ மோசமானவன் தானே என்று ஊர் மக்களுக்குக் கேட்டும் அளவிற்குச் சத்தமிட்டு என்னை இழிவு படுத்துகிறார். என்னால் அதைத் தாங்கிக் கொண்டு அவரோடு வாழ முடியவில்லை. எனவே நாங்கள் பிரிந்து வாழ ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறி மீண்டுமாக அழுது கொண்டே நின்றாள்.
பொறுமையுடன் கேட்ட போதகர், லாமேக்கைப் பார்த்து, உங்கள் வாலிப வயதில் நீங்கள் எவ்வாறு நாட்களைச் செலவிட்டீர்கள் என்று கேட்க, மகிழ்ச்சியோடு தன்னுடைய மும்பை அனுபவத்தைக் கட்டவிழ்த்து விட்டார் லாமேக்.
நீங்களும் உங்கள் வாலிபத்தில் தவறு செய்திருக்கிறீர்கள். அப்படியிருக்க உங்கள் மனைவியை மட்டும் குறைகூறி வெறுத்து ஒதுக்குவது சரியா என்று போதகர் கேட்க ...
தலைகவிழ்ந்தவராக, தவறுதான் என்றார் லாமேக்.
உங்கள் மனைவி நல்லவராக, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பதற்காக, உண்மையை ஒத்துக்கொண்டு வாழ நினைக்கிறார். நீங்கள் அவரை ஏற்று வாழ்வது அவசியம் அல்லவா என்றதும்,
ஆம் ஐயா ... நான் அவளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அவள் மனதைக் காயப்படுத்தியுள்ளேன். இனி அவ்வாறு நடக்காது என்று கூறி மனைவியை அழைத்துச் சென்றார்.
வாழ்க்கையில் ஒருவர் குறையை மற்றவர் ஏற்று, சரியான புரிந்துகொள்ளுதலுடன் வாழ வேண்டும்.
முதலாவது, பெண்களைப் புரிந்துகொண்டு அன்பு செலுத்துவதற்கான சில வழிகளைப் பாக்கர் என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
1. மனைவியின் விருப்பங்கள் என்ன என்பதை, கணவன் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு தலைப்பட்சமான விருப்பமாக இருப்பினும் உடனே அவசரப்பட்டு நிராகரித்துவிடக் கூடாது.
2. மனச்சோர்வு அடையும் வேளையில் அவர்கள் அருகில் இருந்து தட்டிக் கொடுக்க வேண்டும். அப்பொழுது அதிக ஆலோசனை கூறக்கூடாது.
3. இன்று எவ்வாறு நேரத்தைச் செலவிட்டாய் என்று விருப்பத்தோடு கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
4. ஒவ்வொரு நாளும் மனைவியோடு கரிசனையுடன் பேசி செயல்பட வேண்டும்.
5. மனைவி விரும்பாத பழக்கவழக்கங்களைக் கணவன் விட்டுவிட வேண்டும்.
6. மனைவி மாறவேண்டும் என எல்லாக் காரியத்திலேயும் நினைப்பதைவிட கணவன் தன்னை மாற்றிக் கொள்ள முயல வேண்டும்.
7. உங்கள் மனைவி உங்களுக்குக் கிடைத்திருப்பது பெரிய பாக்கியம் என்று பெருமைப்படுபவராக இருக்க வேண்டும்.
8. வெளியே சென்ற நீங்கள் வீட்டிற்குத் தாமதமாகச் செல்வீர்களானால் அதை முன்பே மனைவிக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
9. திருமணம் மற்றும் பிறந்த நாட்களில் உங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவர்களுக்கு விருப்பமானப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.
10. உங்கள் மனைவி தன்னுடைய பிரச்சினையை உங்களிடம் கூறும்போது அதை அலட்சியப்படுத்தாமல் பொறுமையாகக் கேட்டு உதவ வேண்டும்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்
Comments
Post a Comment