சேர்ந்து வாழ்தல்
மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று ஏற்ற துணையை உருவாக்கினார் ஆண்டவர். ஆனால் மனிதன் திருமணமாகி ஏற்ற துணையை அடைந்த பின்னரும் தனிமையாய் வாழ்ந்து கொண்டிருப்பது தான் இன்றைய அவலநிலை.
பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு, குடும்பங்கள் அமைவதால் அன்பும், இணைந்து வாழ்வதில் ஏற்படும் இன்பநிலையும், குடும்பப் பாசப்பிணைப்பும் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.
திருமணத்திற்கு முன் வரன் பார்க்கும் போதே மணமகன் வெளிநாட்டில் ஒரு லட்சம் மாதவருமானம் பெறுவதாக அறிந்து தனது மகள் மகிழ்ச்சியோடு வாழ்வாள் என்று திருமணம் செய்து கொடுக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள், தங்கள் மகளை நல்ல மணமகனுக்காகத் திருமணம் செய்து கொடுக்கவில்லை. மணமகனின் பணத்திற்காகவே திருமணம் செய்து கொடுக்கின்றனர்.
வருடத்திற்கு ஒரு முறையோ, நான்கு வருடத்திற்கு ஒரு முறையோ வந்து செல்லும் மணமகன் எவ்வாறு தன் மனைவியைப் புரிந்து வாழ இயலும்? பணம் வாழ்வின் மையமல்ல, அன்பு, பாசம், ஆதரவு இவையே வாழ்வில் முக்கியம் என்பது மறக்கடிக்கப்பட்டுள்ளது.
ஏன் திருமணத்திற்குப் பின் சேர்ந்து வாழ்தல் அவசியமென்றால், சேர்ந்து வாழும்போதே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இயலும். இல்லையென்றால் பிறர், தன் மனைவியைக் குறித்து, அல்லது கணவனைக் குறித்து எதைச் சொல்லுகிறார்களோ அதுதான் உண்மையாகத் தெரியும். அவர்களுக்கிடையேயான தவறான புரிந்து கொள்ளுதலுக்கு பிறர்காரணமாக மாறிவிடுவர்.
ஒரு சம்பவத்தை "தடம் மாறும் தாம்பத்யம்" என்ற புத்தகத்தில் வாசித்தேன். அது என்னவெனில் இருவர் ஊரைச் சுற்றிப்பார்த்துவிட்டு தங்களின் குருகுலத்திற்கு வருகின்றனர். அப்பொழுது குரு அவர்களிடம், நாட்டு மக்கள் எப்படி வாழ்கின்றனர் என்று கேட்கிறார்.ஒருவர் கூறுகிறார் குருவே மக்கள் நல்லவற்றை நினைத்து, பிறருக்குத் துன்பம் வராமல் பார்த்துக் கொள்ளுகின்றனர்.மும்மாரி பொழிய மக்கள் சீருடன் வாழ்கின்றனர் என்றார். அடுத்தவர் கூறுகின்றார். "குருவே நாட்டில் வறுமை பெருகி வருகிறது.மக்கள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்து வருவதால் மழை மும்மாரி பெய்தாலும் விவசாயம் குறைந்து வருகிறது.வறுமை இன்னும் அதிகரிக்கும்" என்றார்.
இங்கே இருவரும் ஒரே இடத்தைப் பார்த்தாலும் பார்க்கிற பார்வை, சிந்தனை என்பது மாறுபடுகிறது.இதுபோன்று குடும்பமாக வாழாமல் தனித்து வாழ்ந்தால், தன் மனைவியைக் குறித்து தன் மனைவியே கூறுவது உண்மையா அல்லது தனது தாயார், நண்பர்கள் கூறுவது உண்மையா என்ற சந்தேகம் எழும்பும்.கணவன், மனைவியாக உட்கார்ந்து பேசித் தீர்வுகாண்பது என்பது அற்றுப்போய்விடும்.
ஆமோஸ் இறைவாக்கினர் கூறும்போது இருவர் ஒருமனப்பட்டாலொழிய சேர்ந்து செல்ல இயலாது என்கிறார். இல்லற வாழ்வில் சேர்ந்து வாழ்தல் என்பது இருவருக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கும். அதுமட்டுமல்லாமல் பிள்ளைகளும் பாதுகாப்பாக, நெருக்கமாக பெற்றோருடன் அன்பைப் பகிர்ந்து வாழ இயலும்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்
Comments
Post a Comment