சிரித்து வாழ வேண்டும்



குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைய கல்வியறிவு முழுவதுமாக உதவுவதில்லை. பல கண்டுபிடிப்புகள், பல திறமைகள் இருக்கும். இரவு பகலாக உழைத்து, கை நிறையச் சம்பாதிக்க இயலும். இத்தனை திறமைகளையும் மனதில் கொண்டு ஒரு மணமகனை அல்லது மணமகளைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால் இல்லற வாழ்க்கை என்ற பயிரானது நன்றாக வளர்ந்து பலன் கொடுக்க இயலாமல் போய் விடுகிறது. ஒரு மரத்தையோ, செடியையோ, பயிரையோ வைக்கும்போது பெரிய எதிர்பார்ப்பு உண்டு. அது பலன் கொடுக்காமல் போகும் போது நமக்கு மன வேதனையும், இழப்புகளும், வீண் செலவும் வருவது போன்று திருமண முறிவு ஏற்படும்போது, திருமண வாழ்வில் இணைந்தவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களும் புது இன்னல்களை அடைகின்றனர்.

பள்ளிப் படிப்பிற்காக நல்ல பள்ளியைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பலரை பிடித்து ரெக்கமண்ட் வாங்கி, ஆட்டோவிலோ அல்லது வாகனத்திலோ அதிக சிரமம் எடுத்து அனுப்பி வைக்கிறோம். காரணம் நமது குழந்தை வருங்காலத்தில் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற வேண்டும் என்ற எண்ணம்தான். ஆனால் அக்குழந்தை அந்தப் பள்ளியில் படிக்க விரும்பாமலோ அல்லது பாடத்தில் கவனமின்றியோ இருக்குமானால் பெற்றோர் வேதனை அடைவர். அதே வேளையில் அந்தக் குழந்தையும் தன்னுடைய வாழ்க்கையைப் பாழாக்கி விடுகிறது என்று எண்ணுவோம். அதேபோன்று தான் பல இலட்சங்கள் செலவிட்டு, உறவினர்கள், நண்பர்களை அழைத்து, கோலாகலமாகத் திருமணத்தை நடத்துகிறோம். இவ்வளவு செலவிட்டு நடைபெற்ற திருமண வாழ்வு சில மாதங்களுக்குள்ளாகச் சிதைந்துவிட்டது என்றால் அது பெற்றோருக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது.

எதிர்பார்த்தது போல் மாப்பிள்ளை அல்லது மணமகள் இல்லை என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்து விடுகின்றனர். எதிர்பார்த்தபடி தான் எல்லோரும் வாழ்கிறார்களா? எதிர்பார்த்தபடி துணை அமையவில்லை என்று நினைத்தால் இன்று உலகத்தில் எத்தனை பேர் ஒரே நபரோடு வாழ்க்கை நடத்த இயலும்?

திருமண வாழ்க்கையில் மூன்று முக்கியமான அம்சங்களை நாம் நம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஓன்று இனிமையாகப் பேச கற்றுக்கொடுக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் கடினமான, பிறரைத்தாக்கும், தரம் குறைந்த வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். பல குடும்பங்களின் சிக்கலுக்கு முக்கிய காரணம் பிறரைத் தரம் தாழ்த்தி, பிறரது குறையை மிகைப்படுத்தி, கொச்சைப்படுத்திப் பேசுவதுதான். யாக்கோபு 1:19ல் 'பேசுவதற்குப் பொறுமையாயிருங்கள்' என்று குறிப்பிடுகிறார். அறியாமல் சில வார்த்தைகளைப் பேசிவிட்டால், குறிப்பிட்ட பிரச்சினை மறைந்து சிறியதாகி விடும். ஆனால் இழிவான வார்த்தைகள் பிரச்சினைக்கு முக்கிய காரணமாகி விடும்.  எனவே முடிந்த அளவிற்கு குடும்பத்தின் நபர்கள் அனைவரிடமும் இனிமையாகப் பேசிப் பழக வேண்டும். கடுஞ்சொற்களைப் பேசுவது திருவள்ளுவர் குறிப்பிடுவது போன்று இனிய பழங்கள் இருக்க, காய்களை நாம் உண்ணுவது போன்றது. ஒருவரின் பேச்சே ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்துவிடும்.

இரண்டாவது முடிந்த அளவு நல்ல செயல்களைச் செய்ய முற்பட வேண்டும். குடும்ப உறவினர்களைப் பண்புடன் மதித்து அவர்களுக்காக நல்ல காரியங்களை, உதவிகளைச் செய்ய வேண்டும். குடும்பத்திற்குள் பாகுபாடு பார்த்து செயல்படுவதை விட்டுவிட வேண்டும். குடும்பத்திலுள்ள முதியவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். இதை நம் குழந்தைகள் பார்க்கும்போது பிற்காலத்தில் நாமும் அவ்வாறு செய்ய வேண்டும் என்ற மனப்பக்குவம் வளர ஆரம்பிக்கும். நாம் எந்த அளவின்படி அளக்கிறோமோ அந்த அளவின்படி நமக்கு அளக்கப்படும்.

மூன்றாவது சிரித்த முகத்துடன் குடும்ப வாழ்வில் ஈடுபட வேண்டும். பல பிரச்சினைகள் குடும்பத்தில் வந்தாலும், சிரித்த முகமாய் பேசிப் பழக வேண்டும். சிலர் முகத்தை எப்பொழுதும் இறுக்கத்துடன் வைத்திருப்பதால் அவர்கள் குடும்பத்திற்கு மற்றவர்கள் வந்து நல்ல உறவை வைத்துக்கொள்ளமாட்டார்கள். அனிச்சமலர் முகர்ந்தால் மட்டுமே வாடும். ஆனால் விருந்தினர் முகமோ நம் வேறுபட்ட முகபாவனையிலேயே வாடிவிடும் என்கிறார். திருவள்ளுவர். ஒருவேளை நன்றாகப் பேசலாம், ஆனால் முகபாவனை என்பது பிறருடன் தொடர்பு கொள்ளும் வெளிப்படையான ஓன்று. திருமணத்திற்கு முன் மணமக்கள் சிரித்த முகமாக இருக்கிறார்களா என்று சிலர் பார்க்கின்றனர். ஏனெனில் குணங்களை மாற்றுவது என்பது மிகக்கடினமான ஓன்று. சிரித்த முகத்துடன் பிறருடன் பழகுகிறவர்கள் மற்றவர்களை எப்பொழுதும் கவர்ந்திழுக்கிறவர்களாக இல்லற வாழ்வில் காணப்படுவர். ஆகவே உங்கள் கணவன் அல்லது மனைவி வேலைக்குச் சென்று வரும்போது சிரித்த முகத்துடன் வீட்டிற்குள்ளே அழைத்துப்பாருங்கள். எல்லா களைப்பையும் வீட்டிற்கு வெளியே போட்டுவிட்டு புத்துணர்ச்சியுடன் உங்களோடு வாழ்க்கையைத் தொடருவார்கள்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோஷமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி