இனிக்கும் இல்லறம்



ஆசிரியைகளின் அறையிலே சாப்பாட்டு வேளையில் உரையாடல் வளர ஆரம்பித்தது. யார் யாருடைய கணவன்மார் வீட்டு வேலைகளில் எப்படியெல்லாம் உதவி செய்கிறார்கள் என ஒவ்வொருவரும் தங்கள் கணவன் வழியாகக் குடும்பத்தில் ஏற்படும் சோகக் கதைகளையும், இனிமையான சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.ஒவ்வொருவர் மனதிலேயும் பல எண்ணங்கள் முளைக்க ஆரம்பித்தன. அடுத்தவரின் கணவன் அவ்வாறெல்லாம் உதவி செய்கிறாரே நமது கணவன் இவ்வாறு உதவி செய்வதில்லையே என்று மனதுக்குள்ளே பல்வேறு சிந்தனைகளுடன் வெளியேறினர்.

இருவர் பணியாற்றும் குடும்பங்களுக்கும், கணவன் மட்டும் பணியாற்றும் குடும்பங்களுக்கும் அல்லது மனைவி மட்டும் பணியாற்றும் குடும்பங்களுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கின்றன. இருவர் பணியாற்றும் குடும்பமாக இருப்பின் இருவரின் பணியின் தன்மையைப் பொறுத்துத் தான் உதவிகள் செய்ய முடியும்.

ஒருவருக்குத் தலைவலி ஏற்படுகிறது என்றால் தலைவலிக்கு ஒரே ஒரு காரணம் மட்டும் இருப்பதில்லை. நமக்கு வரும் தலைவலி, ஒரு காரணத்தினால் இருக்கலாம். மற்றவர்களுக்கு மற்றொரு காரணத்தினால் தலைவலி ஏற்பட்டிருக்கும். ஆகவே நாம் சாப்பிடும் தலைவலி மாத்திரையை மற்றவர்களும் சாப்பிட ஆலோசனை கூறக் கூடாது. பலருடைய எண்ணம் என்னவென்றால், நாம் இந்த குறிப்பிட்ட மாத்திரையைத் தானே தலைவலிக்காகச் சாப்பிடுகிறோம்.உடனே சரியாகிவிடுகிறது இல்லையா, அப்படியென்றால் இதே மாத்திரையை அடுத்தவரும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். குடும்ப வாழ்க்கைக்கு இது மிகவும் பொருத்தமான ஓன்று. ஒருவர் குடும்பச் சூழ்நிலை மற்றவர் குடும்பத்தின் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் அமைவதில்லை. ஒருவரின் குணாதிசயம், வளர்க்கப்பட்ட சூழல், பெற்றோரின் பாரம்பரியம், தலைவன் ஒரே பையனாகவோ அல்லது பல சகோதரரோடு பிறந்தவராகவோ அல்லது சில சகோதரிகளோடு பிறந்தவராகவோ என பல பின்னணியங்கள், ஒருவரின் வாழ்வைத் தீர்மானிக்கும் அம்சங்களாக இருக்கின்றன.

சிலருடைய கணவன்மார் திருமணத்திற்கு முன்பே சமையல் செய்து சாப்பிட்டவராக இருக்கலாம். அவர்கள் தனியாக அறையெடுத்து வெளியூர்களில் பணியாற்றும் சூழல் இருக்கும்போது சமையல் கற்றிருப்பார்கள்.  இவர்கள், மனைவிக்குச் சமையலில் அதிகம் உதவியாக இருக்க இயலும். மனைவி சுகவீனமானால் கணவனே உணவு சமைக்க முடியும். ஆனால் சில ஆண்கள் சில சகோதரிகளோடு பிறந்திருப்பார்கள், மற்றும் தனியாகச் சமைத்து உண்ண வேண்டிய சூழல் இல்லாமலிருந்திருப்பர். தோட்டம் மற்றும் வயல்வெளிகளில் வேலை செய்பவராக இருந்திருந்தால், கேஸ் அடுப்பில் தீயைப் பற்றவைக்கவும் தெரியாதவராக இருந்திருப்பர். இப்படிப்பட்டவர்கள் கணவனாக மாறும்போது மனைவிக்கு உதவி செய்வதில் அனுபவம் அற்றவராக மாறிவிடுவர். ஒரு வேளை கூட்டுக்குடும்பத்தில் இருந்தால் மனைவி, சமையலில் உதவி செய்ய கணவனை எதிர்பார்ப்பது சிக்கலைத் தோற்றுவிக்கும்.

கூட்டுக்குடும்பம் இல்லாமல் தனிக்குடும்பமாக வசிக்கும் குடும்பத்தில், ஒருவருக்கொருவர் உதவி செய்வது எளிதான காரியம். இருப்பினும் கணவன் காலையிலேயே பணிக்குச் செல்லும் வீட்டிற்கும், அல்லது மனைவி காலையிலேயே பணிக்குச் செல்ல வேண்டிய வீட்டிற்கும் அல்லது இருவருக்கும் ஒரே நேரத்தில் பணிக்குச் செல்பவர்களுக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன.

சமையல் செய்வது பெண்கள் வேலை, அதை ஆண்கள்  செய்யக்கூடாதென்றோ அல்லது ஆண்கள் பெண்களுக்கு உதவி செய்ய முடியாது என்றோ கூறவில்லை. ஆனால் இக்காலப் பெண்கள் மற்றப் பெண்களின் கணவனைப் போன்று தன் கணவனும் மாற வேண்டும் என்று எதிர்பார்த்து, கணக்கு சூத்திரம் போன்று விடை காண்பது குடும்ப வாழ்வில் சிக்கலை உருவாக்கும்.

மற்றொரு புறத்தில் ஆண்கள், பெண்களுக்கு உதவி செய்ய வேண்டியது அவசியம் என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும். மனைவி சுகவீனமாக இருக்கும்போது மனைவியின் துணிகளைத் துவைப்பதும், கடைக்குச் சென்று காய்கறிகளை வாங்கி வருவதும், மனைவிக்குக் காலையில் சூடாகக் காபி போட்டுக் கொடுப்பதும், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்காகக் குளிப்பாட்டி விடுவதும் சுகமான அனுபவமே. இதில் சுயநலமும், ஈகோவும் இருக்க வேண்டியதில்லை. ஆனால் ஒருவரை ஒருவர் அதட்டி வேலை வாங்குவதால் இனிமை போய் கசப்பு வளரும்.

இருவரும் சுகமாகப் பணியாற்ற நினைக்கும்போது பெண்கள் மட்டும் அதிகாலமே சமையல் செய்ய வேண்டும் என்றும், இரவு அனைவரும் படுத்த பின்னரும் சமையல் பாத்திரங்களைச் சுத்தம் செய்துவிட்டு, பின் இரவு தூங்க வேண்டும் என்று நினைப்பது ஆணாதிக்கச் சிந்தனை. பெண்கள் பின் தூங்கி முன் எழ வேண்டும் என்பது இவர்களுக்குப் பொருந்தாது. ஏனெனில் சமையல் செய்வதும், வீட்டைச் சுத்தம் செய்வதும், துணிகளைத் துவைப்பதும், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதும் ஒரு தனி நபர் செய்ய வேண்டிய ஒரு நாள் வேலைக்குச் சமானம். எனவே பெண்களை இரட்டைப் பணிச் சுமைக்குள் தள்ளக்கூடாது. பெண்கள் பலவீனமான பாண்டம் என்று திருமறை கூறுகிறது. அப்படியிருக்க பலவீனமானவர்களை, இரட்டைப் பணிச் சுமைகளைக் கொடுத்து வேலை வாங்குவது நியாயமா?

பணிப் பகிர்வு என்பது, வாழ்வில் வளமான வாழ்வுக்கு நேராக அழைத்துச் செல்வது. கணவன் மனைவியிடையே பிரச்சினைகள் வந்து பேசாமல் இருக்க நினைத்தாலும் பணிப் பகிர்வு நிமித்தமாகப் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும். குறிப்பாகக் கூறினால் தொடர்பு அற்றுப்போகாமல் இருக்க பணிப்பகிர்வு உதவி செய்யும். எனவே வாழ்வு வளமாக அமைய சூழ்நிலையை அறிந்து, பிறரோடு ஒப்பிடாமல் பணிப்பகிர்வு மேற்கொள்வோம். இறையாசியை குடும்ப வாழ்வில் நிறைவாக பெற்றுக் கொள்வோம். பணிப்பகிர்வில் பலருக்கு பிரச்சினை ஏற்படுமாயின் சமையலுக்கு ஒரு நபரை வைத்துக் கொள்வது சிறப்பு. இரண்டு பேர் பணியாற்றும்போது ஒரு சிறிய தொகையை செலவிட்டு பாத்திரங்கள், துணி துவைப்பது போன்றவற்றிற்கு வேலையாள் வைப்பதில் தவறு இல்லை. இந்த சிறிய தொகையை செலவு செய்ய வருத்தப்படும் போது குடும்பத்தில் பிளவுகள் ஏற்படும்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோஷமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி