பெற்றோரே பரலோக வழிகாட்டிகள்


ஒரு நாள் ஒரு சிறுவன் கையிலே சிகரெட் வைத்திருந்தான்.  தம்பி யாருக்கு வாங்கிட்டுப் போகிறாய் என்றேன்.  "அப்பா" வுக்குத் தான் வாங்கிக்கிட்டுப் போகிறேன் என்றான்.

என்ன சார், உங்க பையன் ஸ்கூல்-க்கு வந்து பையன்களோடு சேர்ந்து குடிச்சிருக்கிறான்.  கையும் களவுமாக அவனைப்  பாட்டிலோடே  பிடிச்சிருக்கின்றோம் என்றார் ஆசிரியர்.  உடனே தகப்பனார் மகனைப் பார்த்து முறைத்துவிட்டு "ஏன்டா இங்க வந்து குடிக்கிற, நான் பிரிட்ஜியில் வச்சிருக்கிறதையும் எடுத்து குடிச்சிகிட்டு இங்கேயுமா" என்று கையை ஓங்கினார்.  அப்பொழுது தான் ஆசிரியருக்குத் தகப்பனாரை அழைத்துப் பேசியதில் பயன் இல்லை என்று புரிந்தது.

இதைப்போன்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நரகத்துக்கு வழிநடத்தும் வழிகாட்டிகள்.  ஆனால் பரலோக வழிகாட்டிகளாக விளங்க முற்பட வேண்டும்.  ஏன் வழிகாட்டிகள் என்று குறிப்பிடுகிறேன் என்றால் பெற்றோரின் ஒவ்வொரு வார்த்தையும் செய்கையும் குழந்தையின் குணத்தில் நெய்யப்பட்டுள்ள இழைகளாகும் .  இதன் மூலமே அந்தக் குழந்தையானது சமுதாயத்தைத் துணிவுடன் சந்தித்து இணைந்து வாழப்போகிறது என்பதைத் தீர்மானிப்பதாகும் என டேவிட் வில்க்கர்சன் குறிப்பிடுகிறார்.

பெற்றோரின் வாழ்வுதான் பிள்ளைகளை அதிகம் பாதிக்கக்கூடியது. பெற்றோர் நன்றியுள்ளவர்களாக இருந்தால் பிள்ளைகளும் நன்றியுடையவர்களாயிருப்பார்கள்.  பெற்றோர் ஏமாற்றுகிறவர்களாக இருந்தால் பிள்ளைகளும் ஏமாற்றுவதில் வில்லர்களாகக் காணப்படுவார்கள். நூலைப்போலத் தான் சேலை என்பது பெரிய உண்மை.

பெற்றோரின் வாழ்வில் இருந்துதான் பிள்ளைகள் அதிகமாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை லா நால்டே என்பவர் இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். 

     குழந்தைகளைப் பாராட்டுடன் வளர்த்தால் 

     அவர்கள் பாராட்டக் கற்றுக்கொள்வார்கள் 

     குழந்தைகளை நேர்மையுடன் வளர்த்தால் 

     உண்மையுடன் வாழக் கற்றுக்கொள்வார்கள் 

     குழந்தைகளைப் பாதுகாப்பு உணர்வுடன் வளர்த்தல் 

     நம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொள்ளுவார்கள்

     நட்புடன் வளரும் குழந்தைகளே     

    இந்த உலகம் வாழ்வதற்கு ஏற்ற நல்ல இடம் எனக் கற்றுக் கொள்ளுவார்கள் என்று கூறுகிறார்.

நான் பெரிய ஆள், நீ சிறிய பெண் அல்லது சிறியவர் அதனால் என்னை மாதிரிச் செய்யாதே, நான் தான் கெட்டுப்போயிட்டேன், நீ இப்படிச் செய்யாதே, நான் தான் இப்படி இந்தக் காரியத்திற்கு அடிமையாக இருக்கிறேன்.  நீ அப்படி இருக்காதே என்று ஆலோசனைகள் பலவற்றை பிள்ளைகளுக்குக் கூறுகிறோம்.  ஆனால் உண்மையென்னவென்றால் பிள்ளைகள் நாம் பேசுவதை, கவனிப்பதைவிட நாம் செய்கிறபடியே தான் அவர்கள் வாழ்கிறார்கள்.  எனவே வீண் ஆலோசனைகளை விட்டுவிட்டு நல்நடத்தையுடன் வாழ முற்படவேண்டும்.

பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அதிகப் பணம் செலவழித்து வெளி ஊர்களில் தங்கிப்படிக்க வைக்க முற்படுகிறார்கள். ஆனால் பெரியவர்களாக மாறிய பின் பிள்ளைகள் பெற்றோரை மதிப்பதில்லை.  முதியோர் இல்லத்தில் விட்டு விடுகிறார்கள் ஏன்?  பெற்றோர் தான் பிள்ளைகளுக்காகப் பணத்தை செலவு செய்ய முன்வந்தனர்.  அதைப்போல பிள்ளைகளும் எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை நல்ல முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவோம் என்கிறனர் பிள்ளைகள்.  பெற்றோர் பிள்ளைகளுக்குப் பணம் செலவிட முன்வந்தால் பிள்ளைகளும் பணம் செலவிட முன்வருவர்.  மாறாக பிள்ளைகள் மீது அதிக அக்கறையாகப் பாடம் சொல்லிக் கொடுத்து அதிக நேரம் செலுத்தி அன்பு செய்தீர்களானால் பிள்ளைகளால் பெற்றோரைத் தனியாக விட்டுவிட்டு இருக்க முடியாது.  பெற்றோரின் கடைசி மூச்சுவரையிலும் நம்மோடு இருப்பதில் நம்மோடு இருப்பதில் சுகம் இருக்கும். எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுப்போம்.  

நல்ல முன்மாதிரிகளைப் பிள்ளைகள் தேடுகின்றனர்.  அது நடிகர், நடிகையாகவோ, அரசியல் தலைவர்களாகவோ அல்லது தீவிரவாத குழுத் தலைவனாகவோ இருக்கலாம்.  ஆனால் பெற்றோர் நல்ல role model  ஆக இருந்தால் நம் பெற்றோரைப் போல் நானும் நல்லவனாக, நல்லவளாக சமுதாயத்தை மதிப்புமிக்கவர்களாக வாழுவேன் என்று தீர்மானம் எடுக்க முடியும்.  

தீமோத்தேயு என்ற இளைஞன் விசுவாச வீரனாக இருப்பதற்குக் காரணம் பாட்டியாகிய லோவிசாலும் தாயாகிய ஐனிக்கேயாலும் காரணம் என்று பவுலடியார் குறிப்பிடுகிறார்.  பெற்றோரின் தாக்கம் பிள்ளைகளுக்கு உண்டு.  

இன்று பல அரசியல் கட்சிகளும், சாதிய இயக்கத் தீவிரவாத இயக்கக்  குழுக்களும் சில தலைவர்கள் படங்களை முன் வைக்கின்றனர்.  எத்தனையோ வருடங்களுக்கு முன் இருந்தவர்களின் வாழ்க்கையைத் தூசிதட்டி எழுப்பி, இளைஞர்களே நாமும் இவர்கள் பாதையில் நடப்போம் என உறுதிமொழி எடுக்கின்றனர்.  காரணம் இன்றையச் சந்ததி நல்ல தலைவர்களைத் தேடுகிறது.  நல்ல வழிகாட்ட மாட்டார்களா  என்று ஏக்கத்தோடு இருக்கிறது.  ஆனால் பெற்றோர் சிறந்த வழிகாட்டியாக இருந்தால் திருப்தியாகப் பிள்ளைகள் பெற்றோரைப் போல் வாழுவார்கள்.  நம்மை விடச் சிறந்த வழிகாட்டி யார் இருக்க முடியும். ஒவ்வொரு கணமும் நாம் தானே அவர்களோடு இருக்கிறோம்.  முயற்சி செய்வோம்.  

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் பிரியமே 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்  

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி