பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரின் பாரம்
சிறுவனை அவன் தாய் என் அருகில் அழைத்து வந்தார். ஐயா இவனுக்குக் கொஞ்சம் புத்திச் சொல்லுங்க. இவங்க அப்பாதான் சரியில்லாமப் போயிட்டாரு. இவனாவது நல்லா இருக்கனுமேன்னு நினைச்சி நான் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிறேன். என் வாழ்வின் இலட்சியமே என் மகன் உயர வேண்டும் என்பது தான். அதற்காகத் தான் நான் இரவு பகலாக உழைக்கிறேன். அவன் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டேன். ஆனால் அவன் அதையெல்லாம் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை. அவனை நினைத்து எனக்கு எனக்கு வருத்தமாக இருக்கிறது என்றார்கள்.
அந்த சிறுவனோ கொஞ்சம்கூட அதைக் கண்டுக் கொள்ளாமல் விளையாடிக் கொண்டே என் அருகில் நின்றான். கள்ளம் கபடம் இல்லாமல் ஒன்றும் அறியாமல் நின்ற சிறுவனைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருந்தது. தாய்க்காகப் பரிந்து பேசுவதா அல்லது கபடம் இல்லாமல் இருக்கும் சிறுவனுக்காகப் பரிந்து பேசுவதா என்று திகைத்து நின்றேன்.
இன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மிகவும் பெரியவர்களாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். தாங்கள் தான் மேலான பணிகளைப் பெற்றுக் கொள்ளத் தவறிவிட்டோம். நமது பிள்ளையாவது உயர உயரப் பறக்க வேண்டும் என்று எண்ணித் தங்களது விருப்பங்களை அவர்கள் மீது சுமத்தி விடுகிறோம். ஆனால் பிள்ளைகளால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
அதிக சுமைகளைச் சுமத்துவதால் பிள்ளைகள் பலவேளை அதிகமதிப்பெண்களைப் பெற இயலும். ஆனால் வாழ்க்கையில் தோல்விகளையே சந்திக்கின்றனர். ஆண்டவர் ஒவ்வொருவரையும் குறித்து ஒரு திட்டம் வைத்திருக்கிறார். நமது பிள்ளைகளைக் குறித்தும் ஆண்டவருக்கு அக்கறை இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.
பிள்ளைகளின் விருப்பங்களை அறியாமல் நமது விருப்பங்களைச் சுமத்தும்போது அவர்களுக்குச் சுமையாக மாறிவிடுகிறது. மாறாகச் சிறுவயதில் இருந்தே கல்வியின் முக்கியத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். கல்வியினால் ஏற்படும் நன்மைகளையும், கல்வியைக் கற்றவர்கள் பெற்றுக் கொண்ட உயர்வையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளை மதிப்பெண்ணுக்காக மட்டும் படிக்க ஊக்கப்படுத்தாமல் எதிர்காலத்திற்காகப் படிக்க ஊக்கப்படுத்த வேண்டும். இன்று மதிப்பெண் மட்டும் பெற்றவர்கள் உலகில் முன்னேறவில்லை என்பதைப் பெற்றோர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். திருமறையில் யோசேப்பு சிறுவயதாக இருக்கும் போது கனவுகளைக் கண்டான். அவன் கனவு எல்லாம் உயர்வானதாக இருந்தது. அவன் சகோதரர்கள் அவனைப் பகைப்பதற்கு ஒரு காரணம் அவன் கண்ட கனவுகளே. ஆனால் கனவுகள் எதிர்காலத்திற்குப் போடப்படும் அஸ்திபாரங்கள் என்பதை அவன் சகோதரர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. நம்முடைய பிள்ளைகளும் அப்படிப்பட்ட அஸ்திபாரங்கள் போட முற்படவேண்டும்.
ஆனால் கண்டிப்பாக நமது கனவுகளை அவர்கள் கனவுகளாக மாற்ற முற்படக்கூடாது. அது நமது உடையை நமது பிள்ளைகள் அணிவதற்குச் சமானம் பிள்ளைகளின் தனித்திறமைகளை அறிந்து அதில் முன்னேற ஊக்கப்படுத்த வேண்டும். ஏனெனில் வாழ்க்கை என்பது பிள்ளைகளுக்கு கசப்பாகவே இருந்துவிடக்கூடாது. கலை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்.
இன்று பிள்ளைகள் வாழ்வில் படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் விளையாட்டே மறந்துவிட்டது. விளையாட்டு என்றால் Computer Game மட்டுமே தெரிகிறது. பிள்ளைகள் Ground-ல் இருந்து விளையாடும் போதும், தெருவில் நின்று விளையாடும் போதும் வெற்றி, தோல்விகளைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் வளரும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் துளிர்விடும். அவர்கள் ஆசிரியர் அடித்தது, மாணவர்களிடம் போட்ட சண்டைகள் எல்லாம் மனஅழுத்தமாக இருந்தது. விளையாடும்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சரியாகிவிடும். இன்னும் மாணவர்களுக்கு Games Period தான் பிள்ளைகளுக்குப் பிடிக்கிறது. காரணம் பிள்ளைகள் விளையாடக்கூடிய சூழல்கள் வீட்டில் இல்லாமல் போவதால் சக மாணவ மாணவியிடம் சேர்ந்து விளையாடுவது அளவில்லாத மகிழ்ச்சியாக இருக்கிறது. விளையாட்டும், படிப்பும் சமஅளவில் கொடுக்கும் போது பிள்ளைகள் தங்களின் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த இயலும்.
டாக்டர் சித்ரா அரவிந்த் அவர்கள் மாணவப் பருவத்தில் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறிப்பிடும் போது மன அழுத்தம் நிறைந்த பிள்ளைகள் தங்கள் திறமையை விடக் குறைந்த மதிப்பெண்ணையே பெறுவர். மனநலப் பிரச்சனைகளான வலிகள், மனச்சோர்வு, மனப்பதட்டம், பயம், போன்று பல காரணங்களால் கஷ்டப்படுவார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார். குறிப்பாகத் தாழ்வு மனப்பான்மை பெற்றோரால் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பதைக் குறிப்பிடுகிறார். காரணம் பெற்றோர்கள் வைக்கிற இலக்கை பிள்ளைகள் அடைய முடியாவிட்டால் என்னால் ஒன்றுமே செய்ய முடியாது. நான் எதற்கும் லாயக்கற்றவன் என்று தங்களைத் தாங்களே நினைத்துக் கொள்ளுவார்கள். பெற்றோரும் மூத்த மகன் நன்றாகப் படிப்பான் இவன் படிப்பில் மக்கு. இவன் ஒன்றுக்கும் உதவமாட்டான். எனக்கு இவனைப் பற்றித் தான் கவலை. இப்படிப் பேசுவதே பிள்ளைகளுக்குத் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும். எனவே பெற்றோர்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்துங்கள். மரியாளிடம் இயேசுவைக் குறித்துக் கூறிய போது அதை மனதில் வைத்துச் சிந்தித்தது போல் உங்கள் பிள்ளையைக் குறித்து மனதில் சிந்தியுங்கள். கர்த்தர் வாலாக்காமல் மேலாக்குவார்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் பிரியமே
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்
Comments
Post a Comment