பெற்றோரின் சுயநலத்தில் பிள்ளைகளின் பங்கு


திருமணத்திற்குப் பின் கணவன் மனைவியாக எங்கே, எப்படி வாழ்வது என்பது முக்கியமான ஓன்று.   அவர்கள் மணமகனின் பெற்றோருடன் சேர்ந்து வாழ்வதா அல்லது தனியாக வாழ்வதா என்ற கேள்வி அவர்கள் வாழ்வில் எழலாம்.   தனிக்குடித்தனம் சிறந்ததா அல்லது கூட்டுக் குடும்பம் சிறந்ததா என்று பட்டிமன்றம் கேட்டு, கேட்டு சிரித்த சமுதாயத்தில் சிக்கலில் இருந்து விடுபட இன்று வழி தெரியவில்லை.   இங்கு எது சிறப்பு என்று குறிப்பிடாமல் அவரவர் குடும்பச் சூழலுக்கேற்ப வாழ வேண்டும். பெற்றோரைப் புரிந்து வாழ வேண்டும் என்பதனை மட்டும் குறிப்பிடுகிறேன். இதற்கு பெரிய மனசு வேண்டும். 

எழுபத்தைந்து வயது நிரம்பிய தாயுடன் வாழும் மணமகன், திருமணமானதும் தனிக்குடித்தனமமே சிறந்தது என்று வயதான தாயைவிட்டு விட்டுத் தனியாக வாழச் செல்வது சிறப்பாகுமா? அல்லது எத்தனை வயதானாலும், நான் சாகும் வரை என் மகன் என் பேச்சைக் கேட்டே அவன் மனைவியை நடத்த வேண்டும் என்று கூறும் குடும்பம் சிறப்பாக அமையுமா? இளம் தம்பதியர், புதிதாகத் திருமணமாகப் போகிறவர்கள் சிந்திக்க வேண்டும். 

ஒரு நாள் "இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும், தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்.   அவர்கள் ஒரே  மாமிசமாயிருப்பார்கள்" (ஆதி.2:24) என்ற வசனத்தைக் குறித்து ஒரு திருமண ஆராதனையில் அழுத்தம் திருத்தமாக அருளுரையாற்றினேன். இதைக்கேட்ட மணமகனின் தாய் மிகவும் வருத்தப்பட்டு இப்படி அருளுரையாற்றுகிறார்களே, என் மருமகள் என்னை எப்படி மதிப்பாள்? என்னுடைய கட்டுக்குள் இருப்பாளா?   எனக்குக் கீழ்ப்படிந்து இருப்பாளா? என்னுடைய மகனை என்னிடமிருந்து பிரித்திடுவாளே? என்று அச்சப்பட்டு என்னிடத்தில் அவர்கள் வருத்தத்தைத் தெரிவித்தார்கள்.   எனக்கு வியப்பாக இருந்தது.   இப்படித்தான் சில மாமியார்கள் திருமணத்திற்குப் பின்னும் தங்கள் பிள்ளைகளை ரிமோட்  மூலம் நாம் தான் இயக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு வாழ்கின்றனர்.

சில பெற்றோர்கள் போதிய வருவாய் இல்லாமல் இருப்பார்கள்.   அவர்கள் தங்கள் மகனின் வருமானத்தை நம்பியிருப்பார்கள். முன்பு கஷ்டப்பட்டு தம் மகனைப் படிக்க வைத்து நல்ல வேலை வாங்கிக் கொடுத்திருப்பார்கள். எனவே பிள்ளைகள் தங்கள் பெற்றோர் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருப்பார்கள். இச்சூழலை சற்றும் அறியாத புதிய நபராக மணமகள் வருகிறாள். அப்போது தனது மருமகள் தனது மகனை அவள் வசப்படுத்தி நம்மை கவனிக்க விடாமல் செய்து விடுவாளோ என்று அச்சப்பட்டு, தம் மகனை தம் பிடிக்கும் வைக்க முயற்சி செய்கின்றனர்.எனவே துவக்கத்திலேயே சிறிது காரியமானாலும் தங்களுடைய விருப்பப்படித்தான் தம் மகன் செய்ய வேண்டும் என நினைக்கின்றனர்.இது எப்படியென்றால் குடும்பம் என்ற புதிய வாழ்க்கை வாகனத்தை மகனுக்கு அமைத்துக் கொடுத்து விட்டு, பெற்றோர் அதை ஓட்டுவது போன்றது.ஓட்டுநர் இருக்கை மட்டுமே புதுமணத் தம்பதிகள் உட்காரும் இடம்.இதில் பிரச்சினை வரும்போது, நீ மனைவி வந்தவுடன் அவள் பேச்சை கேட்டாள் ஆரம்பித்து விட்டாய் என்று கூறியே தன் மகனை தன் பக்கம் இழுக்கின்றனர்.இந்த சண்டையில் சில புதுமணப் பெண்கள் வெற்றி பெறுவர்.சிலர் தோல்வியடைந்து மாமியார் கொடுமை என்று மணவாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கின்றனர். 

சில பெண்களின் பெற்றோர் தங்கள் மகளை நம்பி வாழ்ந்திருந்தால் திருமணமானவுடன் வருவாயின்றி தவிக்கின்றனர்.   இச்சூழலில் மகளுக்கு திருமணமானவுடன் வீட்டோடு குடும்பமாக்க முயல்கின்றனர்.இது நிறைவேறாவிட்டால் மகளை அவள் கணவனிடமிருந்து பிரித்து விடுகின்றனர்.உலக சம்பிரதாயத்திற்காகத் திருமணத்தை நடத்திவிட்டு, மணமகனை குறைகூறி அவன் மோசமானவன், எனவே தான் எங்கள் மகள் அவனோடு வாழ விரும்பாமல் எங்களோடு இருக்கிறாள் என்று கூறும் வக்கிர எண்ணம் சில பெற்றோரிடம் மறைந்துள்ளது. இது வெளிப்புறத்தில் தனது மகள் மீது அதிக அக்கறைக் காட்டுவது போன்று காணப்பட்டாலும், மனதுக்குள்ளே அது சுயநலமாக உள்ளது. சிறு பிரச்சினைகளிலும் தனது மகளுக்கு ஆதரவாகப் பேசி, மருமகனை உதவாக்கரை என்று ஓரங்கட்டி தங்கள் மகளின் மனதிற்குள் இடம் பிடிக்கின்றனர்.பின்னர் வழக்கம் போல் மகளின் சம்பளத்தில் குடும்பம் தொடரும். இப்பொழுது தன் மகள் தன் வயோதிப காலத்தில் தன்னைப் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை கிடைக்கிறது.

தேவன் இணைத்ததை மனுஷன் எவனும் பிரிக்காதிருப்பானாக என்று கர்த்தர் கூறினார். ஆனால் பிற மனுஷன் என்ன, பெற்றோரே பிரிக்க இயலும் என்பதை இளம் தம்பதியினரும், புதிதாக திருமணமாகப் போகிறவர்களும் உணர வேண்டும். நான்கு மற்றும் ஐந்து அறிவு படைத்த மிருகங்கள் மற்றும் பறவைகள் கூட தங்கள் குட்டி மற்றும் குஞ்சுகளை ஏற்ற காலத்தில் தங்கள் கூட்டை விட்டு வெளியேற்றி அவைகள் விருப்பப்படி வாழ வாய்ப்பளிக்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் தன் பிள்ளைகளை தன் கட்டுக்குள்ளேயே வைக்க வேண்டும் என நினைப்பது நியாயமா? அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற முன்வாருங்கள்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம்  

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி