பிள்ளைகளுடன் உறவில் விரிசலா?
குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து விலக ஆரம்பித்து விடுகின்றனர். இதனைப் பெற்றோரால் தாங்கிக் கொள்ள இயலாமல் போய்விடுகிறது. முன்பு பெற்றோர்களை விட்டுப் பிள்ளைகள் பிரிந்திருக்கும் நேரம் பள்ளிக்குச் செல்லும் வேளைதான், ஆனால் இன்று பள்ளிக்குச் செல்லும் நேரம் தவிர டியூசன் செல்லும் நேரமும் அதிகரித்து விடுகிறது. இனி பிள்ளைகள் வீட்டிற்கு வந்தால் தூங்குவதற்குத்தான் வர வேண்டும். இது பறவைகளுக்குக் கூடு இருப்பது போன்று, பிள்ளைகளுக்கு இரவில் தங்கும் விடுதிபோல் வீடு மாறிவிட்டது. எனவே பிள்ளைகள் வீட்டில் இருப்பதும், விடுதியில் இருப்பதும் ஓன்று என்பது போல் மாறிவிட்டது.
வீட்டிற்கு வந்தாலும் பிள்ளைகளைப் படி படி என்று சொல்லுவதால் பிள்ளைகள் வீட்டில் தங்கியிருப்பதில் மகிழ்ச்சி கொள்ளவில்லை. பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் திடீரென்று பள்ளிக்குச் செல்வதை வெறுத்தான். படிப்பதில் பெரிய வெறுப்புத் தோன்றியது. அம்மாவிடம் பேசுவதைத் தவிர்த்தான். வீட்டில் தங்கியிருக்காமல் வெளியே நண்பர்களோடு அரட்டை அடித்து மகிழ்ந்தான். தூங்குவதற்கு மட்டும் வீடு என்ற நிலைக்கு மாறினான்.
பெற்றோருக்குப் புரியாப் புதராக மாறியது. தனது மகனுக்கு கவுன்சிலிங் அவசியம் என்பதை உணர்ந்து ஓடிவந்தார். மகனின் நிலையைக் கூறித் தாயார் கண்ணீர் வடித்தார். தன் மகன் தன்னையே சுற்றி சுற்றி வைத்த நாட்களை நினைத்து ஏங்கினார். ஏன் இந்த மாற்றம்? என வினவினார். First Rank வாங்கினவன் ஏன் படிக்க விரும்பாமல் இருக்கிறான்? ஏன் எங்களை வெறுக்கிறான்? என்னிடம் பேசவே விரும்பாமல் நண்பர்களையே ஏன் நேசிக்கிறான்? என கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றார்கள்.
இளைஞனைச் சந்தித்தேன். துடுக்கான பேச்சில் என்னை வியப்புக்குள்ளாக்கினான். மணித்துளிகள் கடந்தன. பெற்றோரை வெறுக்கும் சூழலை விளக்கினான். எப்பொழுதும் படித்துக் கொண்டே இருக்கும் மிஷினாக என்னைப் பார்க்கிறார்கள். எதோ ரிமோட் மூலம் என்னை இயக்கி First Rank எடுக்க வேண்டும் என விரைவுபடுத்துகின்றனர். எனவே படிப்பு எனக்கு வெறுப்பாக இருக்கிறது. பள்ளிக்குச் சென்றால் ஆசிரியர்கள், வீட்டிற்கு வந்தால் பெற்றோர், படிக்க வற்புறுத்துகின்றனர். எனவே பள்ளிக்குச் செல்லாமல் படத்திற்குச் சென்றேன். வீட்டிற்கு வராமல் நண்பர்களுடன் சுற்றுகிறேன் என்றான்.
இன்று பிள்ளைகள் மீது அன்பு செலுத்திப் பேசி மகிழ்வதற்கென்று நேரத்தை ஒதுக்க பெற்றோர் முன் வராத வரையில், பிள்ளைகள் நம்மை ஒதுக்க ஆரம்பிக்கின்றனர். நம்மை வெறுக்க ஆரம்பிக்கின்றனர். பிள்ளைகள் வெறுக்கும் அளவிற்கு நாம் பிள்ளைகளைத் தொந்தரவு செய்வதைத் தவிர்ப்போம். மகிழ்வோடு வாழ முற்படுவோம்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்
Comments
Post a Comment