பிறருடன் ஒப்பிடுதல்
புதிதாகத் திருமணமான தம்பதிகள் தான் கிரிஸ்பஸ், மெற்றில்டா ஜோடி. தாயின் உணவை உண்டு பழகிப்போன கிரிஸ்பஸ்க்கு மனைவியின் கையால் காலை உணவை உண்ண ஆசை வந்தது. இளம் வயதிலேயே தனது திறமையாலும், கல்வியாலும், தொழிற்சாலையில் மேலாளர் பதவியைப் பெற்றவன். காலையில் குளித்து தலைவாரிக் கொண்டு காலை உணவைச் சாப்பிட உட்கார்ந்தான்.
புதிய மனைவி காலை உணவாக, தோசை, சட்னி, சாம்பார் பரிமாறினாள். சாப்பிட்டுக் கொண்டே கூறினான். "என்ன தோசை இது தடிதடியா, எங்க அம்மா ரொம்ப மெலிசா செய்வாங்க. அம்மா செய்கிறது ரொம்ப டேஸ்டா இருக்குமே என்றான்".
மனைவியின் புன்னகை பூத்த முகம், ஒரே நிமிடத்தில் காய்ந்து போன சருகாக மாறியது. வானின் உயரத்தில் பறக்கும் பறவை போல் நினைத்தவள், சில நொடிகளுக்குள் சிறகு ஒடிந்த பறவையாய்த் துடித்தாள்.அவனோ சாப்பிட்டு விட்டுப் பணிக்குப் பறந்து சென்றான். அவளின் உள்ளத்திலோ போராட்டம் ஆரம்பித்தது.
மாலையில் மனைவியைக் காணும் ஆவலில் விரைந்தோடி வந்தான். பைக்கின் சத்தம் கேட்டு வாசலில் மனைவி வந்து நின்றாள். புன்னகை பூத்தவனாய் வீட்டிற்குள் நுழைய ஆரம்பித்தான்.
கொஞ்சம் நில்லுங்க. கனத்த குரலில் மனைவி முகம் படபடக்க...
நான் செய்த தோசை நன்றாக இருக்குமா அல்லது உங்க அம்மா செய்கிறது நன்றாயிருக்குமா?
திகைத்து நின்றான். அவளைப் பார்த்தான். அவளோ தொடர்ந்தாள். இரண்டில் ஒன்றைச் சொல்லுங்க...கண்களில் நீர் வடிய...
என்ன டார்லிங் பிரச்சினை!....
ஒன்றும் தெரியாதது போல பேசாதீங்க. இன்றைக்கு காலையில் சொன்னீங்கல்ல. நான் செய்த தோசையைக் காட்டிலும், உங்க அம்மா செய்த தோசைதான் நன்றாக இருக்கும் என்று...
உங்க அம்மா முக்கியமா? அல்லது நானா?
பிரச்சினை புரிந்து கொண்டது கிரிஸ்பஸ்க்கு. காலை சமையலைத் தன் தாயின் சமையலோடு ஒப்பிட்டுச் சொன்னது அவள் மனதை பாதித்துள்ளது என்பதை அறிந்து கொண்டான்.
பெண்கள் தன்னை யாருடனும் ஒப்பிட்டுச் சொல்வதை விரும்புவதில்லை. அப்படியே ஒப்பிடவேண்டுமானால் மனைவியை உயர்த்திக் காட்டுவதாக அமைய வேண்டும். திருமறையிலும் இதைக் காணலாம் "அவள் புருஷன் அவளைப் பார்த்து: அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்." (நீதி.31:28,29). "முட்புதர் நடுவில் இருக்கும் லீலி மலர் போல் மங்கையருள் இருக்கிறாள் என் அன்புடையாள்" (உன்.2:2)
ஒப்பிடுதலில் மனைவியை உயர்வாகக் கூற வேண்டும். இல்லையெனில் அது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். சில வேலை அடுத்தவர் மீது பொறாமையாக மாற இயலும்.
புரிந்து கொள்ளுதல் திருமணத்திற்கு முன்பா அல்லது பின்பா?
திருமணத்திற்கு முன்பே நன்றாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் தான் பின்பு வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது இக்கால இளைஞர்களின் பொதுவான கருத்து. செல்போன், திருமணம் ஒழுங்கான நாட்களுக்கு முன்போ அல்லது பின்போ தனது சேவையை, திருமணம் ஆகப்போகிறவர்களுக்காக ஆரம்பிக்கிறது. காரணம் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே. நிச்சயதார்த்த பரிசாகவும் இன்று வழங்கப்படுகிறது.
இவ்வாறு புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்தும் குடும்பங்கள் பற்றி மும்பை மற்றும் தானே நகரங்களில் எடுக்கப்பட்ட புள்ளி விபரம் நமக்கு அதிர்ச்சியை கொடுக்கக்கூடியதாக வார இதழ் ஒன்று கூறுகிறது. கடந்த ஆண்டில் இந்த இரு நகரங்களிலும் 17,221 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 7,813 தம்பதியர் விவாகரத்தாக விண்ணப்பித்துள்ளனர். இது 2002ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 250சதவீதம் அதிகமாகும்.
புரிந்து கொள்ளுதல் என்பது குறுகிய காலத்தில் நடைபெறுவது இல்லை. ஏனெனில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் என்பது பல்வேறு சூழல்களில் பழக, பழக கிடைக்கிற பாடங்களாகும். எனவே திருமணத்தின் துவக்கத்தில் புரிந்து கொள்ளுதல் என்பது LKG மாணவர் போன்றதே.
உளவியல் அறிஞர் ஒருவரைப் பார்த்து மற்றொருவர் கேட்டார். பெண்கள் எதை விரும்புவார்கள் எதை வெறுப்பார்கள்? அதற்கு அவர் பெண்களைப் பற்றி 30 வருடங்களாக ஆய்வு செய்து வருகிறேன். ஆனால் நீங்கள் கேட்ட கேள்வியின் பதிலை மட்டும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார். ஒரு பெண் மற்றொரு பெண்ணைப் போல் இருப்பாள் என கூற இயலாது.
இன்று மருத்துவம், பொறியியல், அறிவியல் என கற்றாலும் வாழ்வின் மையம் பணமாக இருப்பதால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்ற எண்ணம் மறைந்து போகிறது.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment