குணசாலியான பெண்
திருமணத்திற்குப் பின் சண்டையிடுகிற, வீண் பிரச்சினைகளை உண்டாக்குகிற, மாமியார் மாமனாரை கண்ணிலே காணவிடாமல் மாற்றி விடுகிற, கணவனைப் பெற்றோரை விட்டுப் பிரித்து விடுகிற, கணவன் பெற்றோருக்கு உதவி செய்கிறதை மறுக்கிற, தான் என்ற அகம்பாவதத்துடன் நடக்கிற, சம்பாதிப்பதால் தானே தனியாக வாழமுடியும் என்று கணவனை மதியாத, தனக்குக் கணவன் பிடிக்கவில்லை என்று நீதிமன்ற வாசலுக்கு ஏறுகிற பெண்ணைப் பார்த்து பல ஆண்கள் மனநிலையில் பாதிப்புக்குள்ளாகின்றனர். திருமணம் என்ற பந்தம் இனிமையாய் இருப்பதற்குப் பதிலாகக் கசந்து விடுகிறது. அன்பு செலுத்த வேண்டிய கணவன், வீட்டிற்கு வராமல் வேலை, வேலை என்று வெளியிலே வாழ ஆரம்பிக்கிறான்.
ஒரு திருமண வீட்டிலே மிகவும் சந்தோஷமாகத் திருமணம் நடைபெற்றது. மணமகள் வீட்டாரே திருமணச் செலவுகள் எல்லாவற்றையும் பொறுப்பேற்று நடத்தினார்கள். மணமகன் வீட்டில் வறுமையான சூழல், ஆனால் மணமகனுக்கு நல்ல வேலை. எனவே பெண் வீட்டாரே எல்லாச் செலவுகளையும் பொறுப்பேற்று செய்தனர். மணமகனின் பெற்றோர் எல்லாரிடமும் தங்களது குடும்பம் மிகவும் உயரப் போகிறது. யாருக்கும் கிடைக்காத மருமகள் அதுவும் பணக்கார மருமகள் கிடைத்திருக்கிறாள் என்று தம்பட்டம் அடித்தார்கள். திருமணம் முடிந்து உடனே சென்னையில் குடியேறினார்கள். மகளுக்கென்று ஒரு வீட்டையே மணமகள் வீட்டார் வாங்கிக் கொடுத்தனர். வீட்டில் ஆடம்பரமான பொருட்கள் அனைத்தும் சீதனமாக வந்தது. அசந்து போனார்கள் மணமகன் வீட்டார்.
புதுக்குடித்தனம் சென்ற பிள்ளைகளைப் பார்த்து வர மணமகன் பெற்றோர் மகிழ்ச்சியோடு சென்றனர். வீட்டிற்குச் சென்றதும் மணமகள் வரவேற்றார். உள்ளே போனதும் அழகான சோபா பார்ப்பதற்கே அழகாக பஞ்சு மெத்தைப் போல் இருந்தது. ஆனால் திடீரென்று இரண்டு பிளாஸ்டிக் சேரைக் கொண்டு வந்தப் போட்டாள் வேலைக்காரி. மருமகள் சோபாவில் இருந்து நலம் விசாரித்தாள். மாமனார், மாமியார் ஒன்றும் புரியாமல் விழித்தனர். இரவு சிறப்பான உணவு, இரண்டு பெட்ரூம் உடைய படுக்கை அறை ஏசி இணைப்புகளுடன் குளுகுளு என்று இருந்தது. மருமகள் அத்தை என்று கூப்பிட்டாள். என்னம்மா? என்று மாமியார் சென்றார். "அத்தை, இரண்டு பாய் இருக்குது இந்த நடு ரூம்ல படுத்துக்குங்க, நீங்க வீட்ல பாய்ல படுத்தே பழகினவங்க இங்க fanல படுங்க" என்று தனக்குள்ளே சமாதானப்படுத்திக்கிட்டு வாய் குளிரப் பேசினால் மருமகள்.மருமகள் அன்பைப் புரிஞ்சுக்கிட முடியாது தடுமாறினாள் மாமியார். கூண்டுக்குள் அடைபட்ட கிளியாக மகன் மருமகள் பின்னால போகிறதப் பார்த்து கண்ணீர் மல்கி தூங்கி எழும்பினார்கள்.
இன்றைக்குக் குணசாலியான பெண் வேணுமா? அல்லது நிறையப் பணம் வரதட்சணையாகக் கொடுக்கும் மருமகள் வேணுமா? என்பது தான் கேள்வி. பணத்தைக் கொடுத்து மணமகனை விலைக்கு வாங்கின தாக பெண்கள் பலர் நினைப்பதால் சின்ன சண்டை வந்தாலும் இது என் வீடு. என் பெட், இது நான் கொண்டு வந்த பீரோ, ப்ரிட்ஜ் என்று கூறி கணவனை இழிவாக நடத்தும் செயல் நடைபெறத்தான் செய்கிறது. இதனால் தான் கணவனால் கைவிடப்பட்ட பெண்களைக் காட்டிலும், கணவனைக் கைவிட்ட பெண்கள் பெருகி வருகின்றனர்.
குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது என்று நீதிமொழிகள் சும்மாவா சொல்லுகிறது? மாடு வாங்குகிறவன் கூடப் பல்லைப் பிடித்துப் பார்த்து வாங்குகிறான். ஆனால் பெண்ணைத் திருமணம் செய்பவர்கள் ஏன் குணத்தை இன்று முக்கியப்படுத்துவதில்லையோ? தெரியவில்லை. குணசாலியான பெண்ணைத் திருமணம் செய்தால் நீதிமன்ற வாசலில் போய் நிற்க வேண்டாம்.
குணசாலியான பெண் ஞானம் விளங்கப்பேசுகிறாள். கணவன், ஊர் பெரியவர்கள் மத்தியில் மதிப்பாக நடக்கும் அளவிற்குச் supportiveவாக இருப்பவள், இராத்திரியும், பகலும் தூங்கி வழியாமல் சுறுசுறுப்பாக இருப்பவள், ஹோட்டலில் வாங்கிச் சாப்பிடாமல் வீட்டில் சமைப்பவள், பிள்ளைகள் தன் தாயைப் பார்த்து எங்க அம்மா கிடைத்தது எங்களுக்குப் பெரிய பாக்கியம் என்று சொல்லும்படி வாழ்பவள், அப்படிப்பட்ட மனையையுடைய புருஷன் மற்ற பெண்களின் நற்குணங்களைப் பார்க்கும் போது தன் மனைவி அவர்கள் எல்லாரையும் காட்டிலும் எவ்வளவு சிறப்பானவள் என்று மெச்சிக் கொள்ளுவான். இப்படிப்பட்ட சிறந்த குணங்கள் உடைய பெண்ணே குணசாலியான பெண் என்று நீதிமொழிகள் 31ஆம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். இன்னும் பெண்களுக்கு எத்தனையோ சிறப்புகள் இருக்கின்றன.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment