தியாகம்
திடீரென்று மனைவி, நான் என்னுடைய கிட்னியைக் கொடுக்கிறேன் என்று கூறியதும், கணவன் பதறினார். நமக்கு நன்கு பிள்ளைகள் இருக்கின்றனர். திடீரென்று எனக்கும் உனக்கும் ஏதாகிலும் நேரிட்டால் பிள்ளைகள் நிலை என்ன ஆகும்? என்று மனம் புதைத்தார். நீங்கள் போனபின் நான் மட்டும் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று மனைவி உறுதியோடு கூறினாள்.
அறுவை சிகிச்சை திருப்திகரமாக முடிந்தது. அந்தத் தம்பதியினர் இப்பொழுது மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றனர். அன்பிற்குரியோரே! கணவன், மனைவி என்ற உறவு ஏற்பட்ட பின் மற்றவர்களுடைய பலவீனத்தில் தாங்கள் உதவி செய்ய கடன்பட்டவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. வியாதியோ, பிரச்சினையோ யாரிடமும் சொல்லி விட்டு வருவதில்லை. எதிர்பாராத விதமாக எந்த மனுஷனையும், மனுஷியையும் தாக்கலாம்.
சுயநலத்தோடு வாழும் வாழ்க்கையானது முற்றிலும் மாறி, பிறருக்காக வாழும் வாழ்க்கைக்காகத் திருமணமான பின் நம்மைத் தகுதிப்படுத்த வேண்டும். ஆலயத்தில் ஆண்டவரின் சமூகத்தில் நாம் வாக்குக்கொடுக்கும் போதே நன்மையிலும், தீமையிலும், வாழ்விலும், தாழ்விலும், சுகத்திலும், சுகவீனத்திலும் மரணம் நம்மைப் பிரிக்குமளவும் என்று வாக்குக் கொடுக்கிறோம். இந்த வாக்கை நாம் காற்றில் விடும்போது தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. நன்மையிலும், வாழ்வின் உயர்விலும், சுகத்திலும் பொதுவாக பிரச்சினைகள் குடும்பத்தில் தோன்றுவதில்லை. தாழ்விலும், தீமையிலும், சுகவீனத்திலும் தான் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. நம்முடைய வாழ்வை பிறருக்காக தியாகம் செய்ய வேண்டிய சூழ்நிலை வரும் போது தான் ஒருவருடைய உண்மையான தன்மை வெளிப்படும்.
பல குடும்பங்களில் பிரிவினைக்குக் காரணம் கணவன், மனைவிக்காக எதையும் தியாகம் செய்ய விரும்புவதில்லை. அதைப் போன்று மனைவியும், கணவனுக்காகத் தன்னுடைய நேரத்தையோ, சுயவிருப்பு, வெறுப்புகளையோ, தியாக செய்ய விரும்புவதில்லை. தம்முடைய அன்றாட செயல்களில் ஏதாகிலும் பாதிக்கக் கூடாது என்று நினைக்கிறோம். மனைவிக்குச் சுகவீனம் வரும் போது கணவன் ஒரு நாள் விடுப்பு எடுத்து ஒரு நாளைத் தியாகம் செய்து உதவ வேண்டும் என்ற மனப்பான்மை வளருமானால், கணவன் சுகவீனமாகும் போது ஒரு மாதம் கூட செலவிட மனைவி தயாராகி விடுவாள்.
பிள்ளைகளுக்குச் சுகவீனம் வரும்போது அருகில் இருந்து பெற்றோர் உதவி செய்யாமல் வேலைக்காரியிடமோ அருகில் உள்ளவர்களிடமோ பார்த்து கொள்ளுங்கள் என்று அலட்சியமாக விட்டுச் செல்லும் நிலை இன்று பெருகி வருகின்றது. தங்கள் பணியே பெரிது. தங்கள் விருப்பங்களை முதலில் திருப்தி செய்த பின் பிள்ளைகள் மீது கவனம் செலுத்தினால் போதும் என்ற மனம் உடைய பெற்றோர் அதிகரித்து வருகின்றனர்.
இப்படி வாழும் குழந்தைகள் பெரியவர்களான பின்பு தங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பவும் தயங்கமாட்டார்கள். மேலும் இவர்களுக்காகத் தங்கள் நேரத்தைத் தியாகம் செய்ய விரும்பாதவர்களாகவும், இடத்தை அசிங்கப்படுத்துவதைப் பொறுத்துக் கொள்ளும் மனம் அற்றவர்களாகவும் மாறிவிடுவர். குடும்ப வாழ்க்கையில் தியாகம் என்பது மணிமகுடமாக விளங்கி வாழ்வைப் பொருளுள்ளதாக மாற்ற வேண்டும்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்
Comments
Post a Comment