கட்டுப்பாடான குடும்பம்


மிகச் சிறப்பான, டீசன்ட்டான குடும்பத்தில் மகளுக்கு வரன் கிடைத்துள்ளது என்ற மன நிறைவோடு திருமணம் நடைபெற்றது. மணமகன் வீட்டில் அனைத்துப் பொருட்களும் அதனதன் இடத்தில் இருந்தது. ஒரு நாற்காலி கூட இடம் மாறாமல் இருந்தது. சமையல் அறையில் ஒவ்வொன்றும் சுத்தமாக நேர்த்தியாக இருந்தது. மணமகன் வீட்டார், வீட்டை எவ்வளவு அழகாகவும் வைத்திருக்கிறார்கள் என்று மணமகள் வீட்டார் வியந்து போனார்கள். தங்கள் மகள் கொடுத்து வைத்தவள் என்று மனதில் மகிழ்ச்சி கொண்டனர்.

திருமணமாகி சில நாட்களுக்குப் பின் தன் மகளைப் பார்த்துவர விரும்பி மகள் வீட்டிற்குப் பெற்றோர் சென்றனர். கதவைத் திறந்ததும் சம்பந்தியர் வியப்பாகிப் புன்முறுவலித்து நின்றனர். என்ன ஒரு போன் கூடப் பண்ணாமல் வந்து விட்டீர்கள் என்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். மதியம் சாப்பிடும் நேரம் ஆகியும் சாப்பாடு வரவில்லை. மகளைப் பார்த்து சாப்பிட்டாயா என்று கேட்டபோது ஆம் என்றாள். ஆனால் பெற்றோருக்குச் சாப்பாடு கொடுப்பதற்குச் சாப்பாடு இல்லை. யாரும் சமைப்பதற்கும் முயற்சிக்கவில்லை. வெளியே வாங்கிக் கொடுக்கவும் முற்படவில்லை. ஏனெனில் அவர்கள் வருமுன் போன் மூலம் தெரிவிக்கப்பட்டு வராததால் சமையலில் அவர்களுக்குச் சேர்த்துச் சமைக்கவில்லை. எல்லாமே ஆர்டர் ஆக இருக்க வேண்டும். சோர்ந்து போன பெற்றோர் தண்ணீரைக் குடித்து விட்டுக் கிளம்பினர்.

மகள் வீட்டில் எல்லா வரவு செலவுகளும் நோட்டில் எழுதப்படும். திட்டமிடாமல் எதுவும் செய்ய முடியாது. மனைவிக்கு சேலை வாங்கவும், சுடிதார் எடுத்து கொடுக்கவும், பூவாங்கிக் கொடுக்கவும் பட்ஜெட்டில் முதலிலேயே சொல்லி விட வேண்டும். சுயமாக எந்த ஒரு காரியத்திலும் முடிவு எடுக்கவே முடியாது. மணமகளுக்கு எல்லாம் புரியாத புதிராக விளங்கியது.

தனித்தனியாகச் செல்போன் வைத்துக்கொண்டு பேசக்கூடாது. எல்லோரும் வீட்டின் பொதுவான ஹாலில் தான் போன் பேச வேண்டும் என்ற எழுதப்படாத சட்டமும் வீட்டில் இருந்தது. இதைப்போன்று பல்வேறு புதிதான சட்டதிட்டங்களும், ஒழுங்குமுறைகளும் புதிதாக வந்த மணமகளுக்கு விகற்பமாயும் ஏற்றுக்கொண்டு நடப்பதற்கு இயலாததாகவும் மாறிவிட்டது. வாழ்க்கையில் சுதந்திரத்தை இழந்ததாக நினைத்தாள்.

குடும்பம் என்பது ஒரு நிறுவனம் அல்ல. எல்லாம் ஒழுங்காகவே இருக்க வேண்டும் என்ற சட்டதிட்டம் கிடையாது. எல்லா விஷயத்திலும், கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற அவசியமுமில்லை. சிறுபிள்ளைகள் இருந்தால் சிறுநீர் கழிக்கும். எல்லாப் பொருட்களையும் இழுத்துப் போட்டு விளையாடும். சமையல் பொருட்களை எல்லாம் கீழே கவிழ்த்துவிடும். டி.வி போன்று மின்சாரத்தால் இயங்கும் பொருட்களையும் இழுத்துப் போட்டு விடுவர். எனவே பிள்ளைகளைப் பிடித்துக் கயிற்றால் கட்டிப் போடுவதும், ஒரு அறைக்குள்ளே அடைத்து வைப்பதும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடாமல் சாப்பாடு இல்லை என்பதும் வீட்டிற்குள்ளேயே சுதந்திரம் இல்லாமல் வாழ்வது போன்று மாறிவிடும். சிறைக்குள் வாழ்வது போன்று சரியான நேரத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் இயற்றுவது மகிழ்ச்சியையும், சுதந்திரத்தையும் கெடுத்துவிடும்.

குடும்பத்தில் கட்டுப்பாடு அவசியம் இல்லை என்று நான் குறிப்பிடவில்லை. ஆனால் சட்டதிட்டங்கள் எல்லாம் மனிதனின் வாழ்க்கையின் நலன்களுக்காகவே, ஆனால் அந்தச் சட்ட திட்டம் மனிதனின் வாழ்க்கையில், இருப்பதை இழப்பதற்குக் காரணமானால் சட்டதிட்டத்தை இயேசுவானவர் போன்று தகர்த்தெறிவதே சிறப்பு.

புதிதாகத் திருமணம் செய்து வீட்டிற்கு வருகிறவர்களையும் உடனடியாகச் சட்டதிட்டங்களைக் கடைப்பிடிக்கக் கட்டாயப்படுத்துவதும் தவறு. அவர்கள் வளர்ந்த சூழலிலிருந்து முற்றிலும் மாறுபடும்போது நாளடைவில் தான் அதனை சரியாக பின்பற்ற இயலும். உடனடி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நினைக்கும்போது அவர்கள் தங்கள் சுதந்திரத்தை இழந்து விடுவதாகக் கூறுகின்றனர். தங்களால் இந்த குடும்பத்தில் வாழ இயலாது என்ற முடிவிற்கு வந்து விடுகின்றனர். எனவே கட்டுப்பாடுகளும், மாற்றங்களும் வாழ்விற்கு வளமூட்டுவதற்கே தவிர வாழ்வை கசப்பாக்குவதற்கு அல்ல என்பதை நினைவில் கொண்டு நமது குடும்பத்தை வழி நடத்தி மகிழ்ச்சியாக்கிக் கொள்ளுவோம்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி