இல்லறமும் மது அருந்துதலும்
திருவிழா மிகச் சிறப்பாக ஒரு கிராமத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரவு முழுவதும் ஊர் மக்கள் தூங்காமல் கலை நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால், ஒரு வீட்டில் மட்டும் பயங்கரச் சண்டை நடந்து கொண்டிருந்தது. காரணம் வீட்டின் தலைவர் நன்றாகக் குடித்து விட்டு பிள்ளைகள் மனைவியை அடித்து உதைத்துக் கொண்டிருந்தார்.பிள்ளைகள் பயந்து அலறிக் கொண்டிருந்தார்கள்.சில பிள்ளைகள் வீட்டின் கதவுக்குள் சென்று ஒளிந்து கொண்டார்கள்.வீட்டில் இருந்த தோசை மாவை எடுத்து மாட்டுக்கு வைத்து விட்டு மகிழ்ச்சியோடு வீட்டின் தலைவர் இருந்தார். மகிழ்ச்சியான திருவிழாவில் மனம் நொந்து காணப்பட்ட குடும்பத்தைக் காணும்போது குடும்ப வாழ்வில் ஈடுபடும் ஒரு ஆண்மகன் குடிப்பதால் மகிழ்ச்சியை இழந்து விடும் சூழல் ஏற்படுவதைக் குறித்து வருந்தினேன்.
குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி என்பது, தனி மனித மகிழ்ச்சியில் முழுக் குடும்பத்தின் மகிழ்ச்சியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சுய நலமாக கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ மாறும் போது பிறர் நலம் பாதிக்கப்படும்.
ஒரு குடும்பத்தில் உள்ள பெண் பிள்ளைக்குப் பல வரன்கள் வந்து கொண்டிருந்தார்கள்.ஆனால், ஒன்றும் முடியவில்லை. குடும்பத்தின் தலைவி மிகவும் வருந்தினார். வரன் அமையாததற்கு ஒரே ஒரு காரணம், தகப்பன் ஒரு குடிகாரன். குடிகாரன், வீட்டில் பெண் எடுத்தால் அவளின் தந்தை நம் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து கலாட்டா பண்ணுவார் என்று பயப்படுகின்றனர். வெட்கக் கேடானதாகவும் பலர் எண்ணுகின்றனர். பிள்ளைகளின் எதிர்காலத்தைத் தகர்ப்பதற்குக் காரணமாக ஒரு தகப்பன் அமைந்து விடுகிறாரென்றால் அந்தக் குடிப்பழக்கம் அவசியமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். குடிப்பழக்கம் உடையவரால், குடும்பத்தின் அந்தஸ்து குறைந்து விடுகிறது. பெரிய பணக்காரராக இருந்தாலும் சமூக அந்தஸ்தில் கீழ் நிலைக்குச் சென்று விடுகின்றனர்.
குடும்பத்தில் பிள்ளைகளைச் சீராட்டி, வேண்டியது எல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டிய தகப்பனை, ஒரு குடிகாரனாக பிள்ளைகள் பார்க்க விரும்புவது இல்லை.குடிக்கும் தகப்பனோடு பேசுவதைப் பிள்ளைகள் குறிப்பிட்ட வயதில் நிறுத்தி விடுகின்றனர். குடிகாரத் தகப்பனை மதிக்கும் பழக்கமும் பிள்ளைகளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி விடுகிறது. பிள்ளைகள் வாழ்வில், முடிவெடுக்கும் தீர்மானத்தையும் குடிகாரத் தகப்பன் இழந்து விடுகிறார்.அவருக்கு என்ன தெரியும் என்று ஓரங்கட்டி விடுகின்றனர். பொறுப்பான செயலைச் செய்யும் ஆற்றலை தன் தகப்பன் செய்ய மாட்டார் என்ற எண்ணம் பிள்ளைகளுக்கு வந்து விடும். நாம் எடுக்க வேண்டிய முடிவுகளை யாரோ ஒருவர் செய்யும் அளவிற்குச் சென்று விடும். இப்படிப்பட்ட சூழலில் குடிகாரத் தகப்பன் மென்மேலும் மன அளவில் பாதிப்புக்குள்ளாவார். குடிகாரத் தகப்பனைப் பிள்ளைகள் தன் தகப்பன் என்று சொல்லக் கூட வெட்கப்படுகின்றனர்.
குடும்ப வாழ்வில் அனைவரும் சந்தோஷ ப்படும் செயல்களைச் செய்ய வேண்டும். குடி குடியைக் கெடுக்கும் என்பது மிகவும் உண்மை.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment