அன்பே பெரியது
ஒரு முதிர்வயதான் தம்பதியினர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு மனைவி ஒரு பிள்ளையினிடமும் கணவர் ஒரு பிள்ளையிடமுமாக இருந்தனர். அவர்களிடம் உட்கார்ந்து பேசும் போது, 'ஐயா என் மனைவி என்னைக் கவனிப்பது இல்லை. அவள் விருப்பப்படிதான் வாழ்கிறாள்' என்று குறைவுபட்டுக் கொண்டார். அவரின் மனைவியோ அவரைப் பார்த்து, 'அவர் சரி இல்லை. அவரோடு வாழ்வதைக் காட்டிலும் என் பிள்ளைகளோடு வாழ்ந்தால் கடைசி காலத்தில் என்னை நன்றாகக் கவனித்துக் கொள்ளுவார்கள் என்று கூறினார். 70வயதைத் தாண்டினாலும் சுயநலத்தோடே வாழ்பவர்கள் மகிழ்ச்சியில்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வயதாக ஆக நல்ல நண்பர்களைப் போல மாறிவிட வேண்டும்.
பிறர் விருப்புவெறுப்புகளைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் வளர வேண்டும். நான், எனது என்ற வட்டத்திலிருந்து வெளியே வந்து நாம், நமது குடும்பம், நமது பிள்ளைகள் அவர்களது விருப்பம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் வளர வேண்டும்.
ஒரு கிராமத்தில் ஒரு தகப்பன் இருந்தார். அவர் வீட்டில் கோழிகள் வளர்த்தார். அவைகள் இடும் முட்டைகளை எல்லாம் எடுத்துச் சேர்த்து வைத்துவிட்டுப் பின்பு அவைகளைப் பொரித்துச் சாப்பிடுவார். சாப்பிட ஆரம்பிக்கும் போது தன் பிள்ளைகளைப் பார்த்து ஓடு ஓடு, விளையாட்டுப் போங்க. இங்க வீட்டுக்குள்ளே என்ன செயிறீங்க என்று அடித்து விரட்டி விட்டு, தான் மட்டும் உட்கார்ந்து சாப்பிடுவார். இப்படிப்பட்ட நபர் மீது பிள்ளைகளுக்கோ மனைவிக்கோ அன்பு ஏற்படாது. எனவே பகிர்ந்து உண்ணுவது என்பது அன்பை வளர்க்கும் செயல். ஒரு மாம்பழம் வாங்கி வந்தாலும் வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து வெட்டி சாப்பிட்டால் அன்பு வளர ஆரம்பிக்கும். பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்ற உணர்வு குடும்பத்தில் அனைவருக்கும் ஏற்படும்.
கணவன், மனைவிக்காக ஒரு சில காரியங்களை விட்டுக் கொடுக்க முன் வரவேண்டும்.மனைவியும் அப்படியே தன் விருப்பு வெறுப்புகளையும் விட்டுக் கொடுத்து கணவன் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு முன் வரவேண்டும். திருமணமான இளம் தம்பதியர் வெளிநாட்டிற்குப் பணிக்காகச் சென்றனர். இருவரும் பணியாற்றி அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்றனர்.அங்கு சென்ற பின் மனைவிக்கு நல்ல பணி கிடைத்தது. கணவனுக்குச் சரியான வேலை கிடைக்கவில்லை. சிறிய பணி ஒன்றில் சேர்ந்தார். ஒரு குழந்தையும் பிறந்தது. கணவன் யோசித்தார், இங்கு உள்ள கல்விச் சாலையில் நான் இரண்டு வருடங்கள் படித்தால் நான் இன்னும் உயரமுடியும் என நம்புகிறேன் என்றார். வெளிநாட்டில் படிக்கும் போது அதிக செலவாகுமே என்று மனைவி கூறினார். ஆனால் இரவில் தன் கணவன் விரும்புகிற கல்வியை ஏன் தொடர சொல்லக் கூடாது. இரண்டு வருடங்கள் அவர்களுக்காக ஏன் நாம் கஷ்டப்பட்டு உழைக்கக் கூடாது என்று யோசித்தாள். அடுத்த நாளே சரி என்று கூறினாள். பிறர் விருப்பத்தை நிறைவேற்றுவதிழும் ஒரு மகிழ்ச்சியிருக்கிறது. இப்படிச் செய்யும் போது குடும்பத்தில் அன்பு வளர ஆரம்பிக்கும். இத்தகைய தியாக அன்பு உறவை வளப்படுத்தும்.
இன்றைய சமுதாயத்தில் கணவன் மனைவிக்கிடையே யாருக்கும் எதையும் இழக்கச் சம்மதமில்லை. அப்படி இழப்பதைக் காட்டிலும் அந்த நபரோடு உள்ள உறவைத் துண்டிப்பதே மேல் என்று நினைக்கின்றனர். குடிக்கிற கணவன் என்று தெரியும் பட்சத்தில் மனைவி இப்படிப்பட்ட குடிகாரனோடு குடும்பத்தை நடத்த இயலாது. உறவை முறித்து விட்டுத் தனித்து வாழுவோம் என்று முடிவெடுக்கின்றாள். அவரைத் திருத்த முயற்சி எடுத்துப் பார்ப்போமே என்ற உணர்வு இல்லாமற் போய் விடுகிறது.
கோபப்பட்டுத் திமிராய் பேசுகிற மனைவியாயிருந்தால் இவளைத் திருத்த முடியாது. இவளை தள்ளிவிட்டு மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாமே என்று கணவன் முடிவெடுக்கின்றார்.ஒருவர் திருந்துவதற்கோ, மனமாற்றம் பெறுவதற்கோ இடம் கொடுக்க விரும்பவில்லை. ஒரே நிமிடத்தில் முடிவெடுத்து அதில் நிலைத்து நிற்கின்றனர்.பின்பு அந்த நிலையிலிருந்து மாறினால் ஈகோ பிரச்சினை என்று நினைக்க ஆரம்பிக்கின்றனர்.
நம்முடைய ஆண்டவரும் நம்மீது முந்தி அன்பு கூர்ந்துள்ளார். அவருடைய அன்புக்கு ஈடாக நம்மால் எதையும் கொடுக்க இயலாது. தேவன் தம்முடைய ஒரே குமாரனான இயேசு கிறிஸ்துவை நமக்காக ஜீவபலியாக ஒப்புக் கொடுத்ததின் விளைவாக நம்மீது இறைவன் கொண்டுள்ள அன்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. கணவன் மனைவிக்காக எதை இழந்துள்ளான்.
சில வருடங்களுக்கு முன்பு 50வயது மனிதருக்கு கிட்னி failure ஆகி விட்டது. அவரோ பெரிய செல்வந்தர். எனவே பல மருத்துவமனைகளிலும் கிட்னிக்காச் சொல்லி வைத்திருந்தார். ஆனால் யாருடைய கிட்னியும் சரியாக பொருந்தவில்லை. நாட்கள் கடந்து மாதங்களாகியும் எதுவும் சரியாக கிடைக்கவில்லை. திடீரென்று அவர் மனைவி அவரிடம் என்னுடைய கிட்னியையே உங்களுக்குக் கொடுக்கிறேன் என்றாள். அவரால் இன்றும் தன் மனைவியின் தியாகத்தை மறக்க முடியவில்லை. உயிருள்ளளவும் என் மனைவிக்கு நான் கடன்பட்டுள்ளேன். ஏனென்றால் "நான்" என்று என்னைப் பற்றி சொல்ல முடியாது. என்னில் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்று கூறினார்.
பவுல் கூறுகிறார். புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்த சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்பு கூற வேண்டும். தன் மனைவியில் அன்பு கூறுகிறவன் தன்னில் தான் அன்பு கூறுகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே (எபே. 5:28,29)
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment