சண்டையிடும் மனைவி vs குணசாலியான மனைவி
சண்டையிடும் மனைவி, மழை காலத்தில் ஓயாமல் ஒழுகிக் கொண்டிருக்கும் வீட்டிற்குச் சமம் என்று நீதிமொழிகள் புத்தகம் கூறுகிறது. மழை காலத்தில் ஒழுகிக் கொண்டிருக்கும் வீட்டில் எப்படி மனிதன் குடியிருக்க முடியாதோ அப்படித்தான் சண்டையிட்டு எப்பொழுதும் புலம்பிக் கொண்டிருக்கும் மனைவியோடு ஒரு கணவன் குடியிருக்க முடியாது. ஒரு பிரச்சினையென்றால் அதை உடனே பேசி முடித்துவிட வேண்டும். அதை விட்டு விட்டு ஓயாமல் அதையே பேசிக் கொண்டிருந்தால் ஆண்களால் அதைக் கேட்டுக் கொண்டேயிருக்க முடியாது. உடனே அடிபிடி சண்டை வரும். இல்லையென்றால் வீட்டிற்கு வருவதைக் குறைத்துக் கொண்டு போய் நேரத்தை செலவு செய்ய விரும்புகிறான்.
ஒரு மலரில் தேன் இருந்தால் வண்டுகள் தானாக தேடி வந்து ரீங்காரம் இடும், அந்த மலரே செயற்கை மலராக இருந்தால் வா வா என்று அழைத்தாலும் ரீங்காரம் இட வண்டுகளே மறுத்து விடும். இயற்கையாக இல்லாத மலரையே வண்டுகள் சீண்டாத போது ஆறறிவு படைத்த மனிதன், இயற்கையாக அன்பு செலுத்தாத மனைவியோடு எப்படி அன்பு செலுத்துவான்? மனைவி பிள்ளைகள் என்று ஒரு குடும்பம் இருக்கிறதே என்று ஒப்புக்கு வீட்டிற்கு வருகிறவனாக மாறி விடுகிறான்.
புத்தியுள்ள மனைவியோ தன் வீட்டைக் கட்டுகிறாள். புத்தியில்லாத மனைவியோ தன் கைகளால் தன் வீட்டை இடித்துப் போடுகிறாள். ஒரு பெண் ஒரு வீட்டைக் கட்டிக்காப்பதில் முக்கிய பங்கெடுக்கிறாள். பிரச்சனையோடுள்ள கணவனையும் சரிசெய்யும் அளவிற்குக் கடவுள் ஞானத்தைக் கொடுத்திருக்கிறார். அதே வேளையில் சந்தோஷமாய் வாழும் கணவனையும் கடனில் தள்ளி சந்தோஷத்தை இழக்க வைக்கவும், ஒரு பெண்ணால் முடியும். பிரிந்து கிடக்கிற சகோதரர்களைச் சேர்த்து வைக்கவும் மனைவியால் முடியும். சேர்ந்து வாழ்கிற குடும்பத்தைப் பிரித்து நடுத்தெருவிற்கு கொண்டு வரவும் முடியும்.
சும்மா இருந்த ஆபிரகாமை தன் வேலைக்காரியாகிய ஆகாரிடம் சேரும்படி சாராள் சொல்லுகிறாள். இதினிமித்தம் இஸ்மவேல் வெளிப்பட்ட போது சாராள் ஆபிராகாமிடம் அவளை விரட்டி விடும்படி சண்டையிடுகிறாள். சாராள், தன்னுடைய செயலினால் ஒரு மோசமான சந்ததி வெளிப்படக் காரணமாக இருந்தாள். இச்செயல் நிமித்தமாக ஆபிரகாம் குடும்பத்தில் குழப்பம், சண்டை, இறுதியாக ஆகார் சாராளை விட்டு ஓடிப்போகிறாள். வீண் குழப்பங்கள் உருவாகுவதற்குக் காரணமாகச் சாராள் நடந்து கொண்டாள்.
இன்றும் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று பிறரைப் பார்த்து நச்சரித்ததின் நிமித்தமாக லஞ்சம் வாங்கித் தன் மனைவியைத் திருப்திப்படுத்தும் ஆண்கள் இருக்கின்றனர். தன் மனைவி கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்தால் தான் வீடு நிம்மதியாக இருக்கும் என்று வட்டிக்கு வாங்கி ஆடம்பர பொருட்களால் வீட்டை அலங்கரிப்பவர்களும் உண்டு. நாட்கள் செல்ல, செல்லக் கடன்காரன் வீட்டில் வந்து சத்தமிட்டுச் சண்டையிடும் போது குடும்பமாகத் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதும் பரிதாபமாக இருக்கிறது.
அன்பிற்குரிய பெண்மணிகளே நீங்கள் வீட்டை கட்டுகிறீர்களா அல்லது உங்கள் கைகளால் வீட்டை உடைத்துக் கொண்டிருக்கிறீர்களா?
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment