வழி நடத்தும் பெற்றோர்


குடும்ப வாழ்க்கையில் பிள்ளைகளுடன் சரியான உறவு இருந்தால் தான் வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒரு திருமண வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு பெண் குழந்தை தன் தாயிடம் வித்தியாசமாக நடந்து கொண்டது. அதைப் பார்த்த அனைவரும் என்ன பிள்ளை இது என்று முகம் சுளித்துக் கொண்டனர். மற்றவர்கள் முன் அவமானப்பட்ட தாய் தன் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு, உடனே தன் வீட்டிற்குச் சென்று விட்டார். இனி இப்படிப்பட்ட இந்த மகளை எந்த இடத்திற்கும் கூட்டிச் செல்லக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டார்.

மகிழ்ச்சியாகத் திருமண வீட்டிற்குச் சென்று விட்டு துக்கத்தோடு பெற்றோர் திரும்புகின்றனர் என்றால் பிள்ளைகளை நாம் எப்படி வழிப்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். பொது இடங்களில் சில பிள்ளைகள் மற்றவர்களுக்கு முன்பாக சண்டித்தனம் பண்ணுவதும், கீழ்ப்படியாமல் செயல்படுவதும், பொதுவான நல்ல பழக்க வழக்கங்களைக் கைக்கொள்ளாமல் இருப்பதும், பிறரோடு அனுசரித்துப் போகாமல் நடந்து கொள்வதும் உண்டு. இப்படிப்பட்ட பிள்ளைகளை நாம் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் முன்பே அவர்களுக்கு அங்கு எப்படி நடக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். எப்படியெல்லாம் சேட்டை பண்ணுவார்களோ அதை நீங்கள் அறிந்திருப்பதால் முன்பே எப்படிச் செயல்படக் கூடாது என்பதைக் கூற வேண்டும்.

சிறு பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது பெற்றோர் மற்றும் பெரியவர்களிடம் எப்படிப்பட்ட வார்த்தைகளைக் கூறிப் பேசுகிறார்கள் என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அசிங்கமான பேர் வைத்து பெற்றோரை அழைப்பது, நீ, வா, போ என்பது, பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசுவது போன்றவற்றைக் கேட்டு விழுந்து விழுந்து சிலர் சிரிப்பர், பின்னர் அதையே பொது இடத்தில் பேசும்போது முகம் சுளிப்பர். சிறுபிள்ளைகளுக்கு எந்தப் பெயரை எங்கு உபயோகிக்க வேண்டும் எனத் தெரியாது. எனவே சரியான முறைப்படி அழைப்பது, நன்றி சொல்வது, சாரி கேட்பது, பிளீஸ் என்று கேட்பது போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.  அப்படிப்பட்ட நல்ல ஒழுக்கங்களைச் சமுதாயத்தில் நமது பிள்ளைகள் கடைப்பிடிக்கும் போது நமக்குப் பெருமையாக இருக்கும். 

ஒரு நாள் என்னுடைய மகள் என் பெற்றோரைப் பார்த்து, எங்க அப்பாவை மரியாதையோடு கூப்பிடுங்கள் என்று கூறினாள். காரணம் என் பெற்றோர் என்னிடம் வா, போ என்று பேசியதைக் கேட்டதும் அவள் அப்படிக் கூறினாள். என் பெற்றோர் அவன் என் மகன் அல்லவா, ஆகவே தான் வா என்று கூப்பிடுகிறோம். ஆனால் நீ சிறிய பிள்ளை எனவே மற்றவர்களை மரியாதையாக கூப்பிட வேண்டும் என்று கற்றுக் கொடுத்தனர்.

சிறுப்பிள்ளைகளுக்கு இந்த சிக்கல்கள் எழுவது இயற்கை. ஆனால் பெற்றோர் தான், எங்கு எப்படிப் பேச வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். "பிள்ளையாண்டானை நடத்த வேண்டிய வழியில் நடத்து, அப்பொழுது முதிர் வயதிலும் விடாதிருப்பான்" என்ற திருமறை வாக்கின்படி பிள்ளைகளைச் சரியான பாதையில் வழி நடத்தப் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கு நல்லவைகளைக் கற்றுக் கொடுங்கள். அதையே அவர்கள் பிரதிபலிப்பார்கள்.  

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோஷமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி