உயிரை வேட்டையாடும் பண ஆசை
மலையாளப்படங்களில் நடித்து வந்த நடிகர் தன் மனைவியிடம் வரதட்சணைக் கேட்டுத் தொந்தரவு செய்துள்ளார். தொல்லைத்தாங்காமல் தன் பெற்றோர் மற்றும் சகோதரனிடம் சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் கேட்ட பணத்தைக்கொடுக்க முடியாமல் திணறியுள்ளனர். இந்நிலையில் தொந்தரவுத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் இன்றும் படித்த, உழைக்கும் குடும்பங்களில் நிகழ்வது நமக்கு வேதனையைக் கொடுக்கிறதாக உள்ளது.
பணக்காரர்கள் இன்னும் பணம் வேண்டும் என்றும், ஏழையாய் இருக்கிறவர்களும் ஏழையாய் இருக்கிறவர்களிடம் எவ்வளவு பறிக்க முடியுமோ அவ்வளவு பறித்துக்கொள்ளுவதும் வரதட்சணையின் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. வரதட்சணைக் கேட்டு தொந்தரவுச் செய்பவர்கள் பிச்சையெடுப்பதற்கு சமம். உழைப்பதற்கு மறுத்து அடுத்தவர் உழைப்பை சுரண்டி சாப்பிட வேண்டும் என்று நினைப்பது தவறு.
தென் மாநிலத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் நன்றாக படித்து முன்னுக்கு வந்தவர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால் பண ஆசையால் பிள்ளைகளை விலைப்பேசுகிறவர்களாக இருக்கின்றனர். பண ஆசை எல்லா தீமைக்கும் வேறாயிருக்கிறது என்று திருமறை எச்சரிக்கை செய்கிறது. ஒருவரின் உயிரையே பறித்து விடுகிறது.
அனைத்து பிள்ளைகளுக்கும் சம உரிமை இருக்கிறது. ஆனால் பெற்றோரை கடனுக்குள் தள்ளி, தான் சுகமாக இருக்கவேண்டும் என்றும் நினைப்பது மனிதாபிமானம் அற்ற செயல் அல்லவா! இருக்கிறவர்கள் கொடுக்கின்றனர். இல்லாதவர்கள் கொடுக்கமுடியாத பட்சத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர்.
ஒருவரின் பணத்தை, சொத்தை, அபகரித்து, சேர்த்துவைத்து, மகிழ்ச்சியோடு அனுபவித்தால்தான் வாழ்க்கையா? "ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?" (மத்தேயு 6:26) என்று இயேசுவானவர் பறவைகள் நம்மைக்காட்டிலும் எப்படி மகிழ்ச்சியாக வாழப்பழகியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறார். பணம் தான் வாழ்க்கை என்று நினையாதிருங்கள். உங்கள் மனைவிக்கு அவர்கள் பெற்றோர் எவ்வளவு shareயை கொடுக்க நினைக்கிறார்களோ அது போதும் என்று நினையுங்கள்.
நீங்கள் என்ன பிச்சைக்காரர்களா? இதுவரையிலும் படுப்பதற்கு மெத்தை இல்லாதவர்களா? அல்லது சாப்பிடுவதற்கு பாத்திரம் இல்லாமல் நடுத்தெருவில் இருந்தவர்களா? பைக், கார் இல்லாமல் இதுவரையிலும் கால்நடையாகவே போய்க்கொண்டிருக்கிறீர்களா? இவையெல்ல்லாம் உங்கள் மனைவிக்கொண்டு வந்தால்தான் உங்களால் வாழ முடியும் என்று நினைக்கிறீர்களா? ஒன்றுமில்லாத பரதேசியைப் போல் உங்கள் மாமனாரிடம் கையேந்தி நிற்காதிருங்கள் சகோதரர்களே!
அதே வேளையில் தற்கொலைதான் வரதட்சணை பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்று எண்ணாதிருங்கள். உங்கள் தற்கொலைப் உங்கள் பெற்றோரின் கவலைகளை குறைக்காது மாறாக மிகவும் வேதனைக்குள்ளாக்கி அவர்களை நித்தமும் கண்ணீர் வடிக்க வைத்து விடும் ஒரு செயல் என்பதை மறந்துப் போகாதிருங்கள். ஐயோ! நம் பிள்ளைக்கு பணத்தைக் கொடுத்து உதவிச் செய்ய முடியாத நிலைக்கு நாம் அவள் சாவிற்கு காரணமாகி விட்டோமே என்று ஒவ்வொரு நாளும் குற்ற உணர்வினால் புழுவாக துடித்து விடுவார்கள்.
உங்கள் குடும்பத்தின் நிலைகளை கர்த்தரிடம் சொல்லுங்கள். அவர்தான் உங்கள் வாழ்க்கை வாழ்வதற்கு தைரியத்தையும், கிருபையையும் அதிகமாகத் தந்து தாங்குவார். "திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே." (சங்கீதம் 10:14) என்று சங்கீதக்காரன் குறிப்பிடுகிறார். "கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்." (சங்கீதம் 10:17) என்றும் அதே சங்கீதத்தில் குறிப்பிடுகிறார்.
வரதட்சனைக் காரணமாக உங்கள் குடும்பத்தில் நீங்கள் எல்லாருக்கும் முன்பாக சிறுமைப்படுத்தபடும் போது, அந்த அவமானத்தை தாங்குவதற்கு கர்த்தரே உங்களுக்கு உதவிச் செய்ய முடியும். ஏனென்றால் பணம் கொடுக்க இயலாத பெற்றோரிடம் சொல்லவும் முடியாமல், வீட்டிலேயும் தொந்தரவு செய்யும் போது, உங்கள் துன்பத்தை முறையிட கர்த்தர் ஒருவரே இருக்கிறார். "சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்." (சங்கீதம் 9:9)
மற்றொருபக்கம் உங்கள் போதகரிடமோ, காவல்துறையிடமோ அல்லது உங்கள் பிரச்சனைகளைப் புரிந்துக்கொள்ளும் மக்களிடமோ மனந்திறந்துப் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண முற்படுங்கள். யாரிடமும் பேசாமல் உங்கள் மனதிலேயே வைத்துக்கொள்ளும்போது தான் தற்கொலை எண்ணம் அதிகமாக வர ஆரம்பிக்கும்.
உங்கள் பிரச்சனைகளை பகிர்ந்துக்கொள்ளும் போது உங்கள் உணர்வுகளை வெளியிட ஒரு வாய்க்காலாக மாறிவிடும். அதே வேளையில் தற்கொலை எண்ணம் மேலிடும் போது தனிமையில் இருப்பதை தவிர்ப்பது நல்லது.
நாம் ஏன் உயிர்வாழ வேண்டும் என்று உங்கள் மனதில் அடிக்கடி வரும்போது நீங்கள் இறைவனிடம் மனம்கசிந்து மன்றாடுங்கள். ஏனென்றால் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போடுகிறவர் இறைவன் மட்டும் தான். உங்கள் கணவர்/கணவனின் வீட்டாரின் உள்ளத்தை சடுதியில் மாற்றுவதற்கு அவரால் மட்டுமே முடியும். சாம்பலை சிங்காரமாக மாற்றுகிறவர். ஏன் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியான வாழ்வாக மாற்ற முடியாது. அவரை அரவணைத்துக் கொள்ளுங்கள். அவர் உங்களை கைவிடவே மாட்டார்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment