சிறந்த உறவு
உடல் கவர்ச்சியாயிருக்கும்போது தேடி தேடி வந்து ஹீரோவாக, ஹீரோயினாக நடிக்க அழைக்கப்படுவார்கள். உடற்கவர்ச்சி குறையும் போது வாய்ப்பு கிடைக்காதா என்று தேட வேண்டிய சூழலுக்கு உள்ளாவர்கள். அழகுக்காக, பணத்திற்காக தேடிவரும் உறவுகள் குடும்ப வாழ்விலேயும் குறிப்பிட்ட காலங்களுக்குப் பின் பஞ்சாக பறந்து போய் விடும். ஆனால் உலகமே என் காலுக்குள் என்றும் இருக்கும் என நினைத்து சிறந்த உறவுகளை இழந்துவிடக்கூடாது.
சில பெண்கள் அல்லது ஆண்கள் எளிதாக திருமண உறவை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு பெற்றப் பிள்ளைகளையும் எனக்கு வேண்டாம் என்று உதாசீனப்படுத்திவிட்டு செல்வதைப் பார்க்க முடிகிறது. பெற்ற பிள்ளைகளின் அருமை என்பது உடலில் வலு இருக்கும் போது தெரியாது. என்னால் தனித்து வாழ இயலும்! மனைவி எதற்கு? கணவன் எதற்கு? பிள்ளைகள் எதற்கு? பெற்றோர்கள் எதற்கு? நான் தெரிவு செய்துள்ள அந்த குறிப்பிட்ட நபரே எனக்கு எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுவான்/ள் . எனக்காக உயிரையும் விட ஆயத்தமாக இருக்கிறான்/ள் என்று சவால் விடுகிறீர்களா? மனிதர்கள் பொதுவாக சுயநலமுள்ளவர்கள். அவர்கள் காரியம் நடக்கும் வரைக்கும்தான் உறவைப்பேணிக்கொள்ளுவார்கள். காரியம் முடிந்ததும் கழற்றி விடுவார்கள். வெளுத்ததெல்லாம் பாலல்ல. மின்னுவதெல்ல்லாம் பொன்னல்ல. சில பித்தளையும் பொண்ணை விட அழகாக மின்னும். சில பாசி உருண்டைகளும் முத்தைப்போல அழகாக காட்சியளிக்கும். நம்மால் வேறுப்படுத்திப் பார்ப்பது கடினம். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. ஆத்திரத்தில் தூக்கி வீசப்படும் உறவுகள் என்பது கடலுக்குள் வீசப்பட்ட மாணிக்க கற்களை போன்றது. அதனை எளிதாக மீட்டுக்கொண்டு வர இயலாது.
உறவுகளில் பிள்ளைகள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை கொரோனா காலம் தான் உணர்த்திக்கொண்டே வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் ஒரு தாய் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தார். அதனை தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குத் தெரிவித்தான் அந்த தாயின் மகன். ஆனால் வீட்டிற்கு யாரும் வரவில்லை. தாயின் உடலை எடுத்துச்செல்ல தள்ளுவண்டியைக்கூட கொடுத்து உதவ கிராமத்தலைவர்களும், உறவினர்களும் முன் வரவில்லை.
காத்திருந்த மகன் இறுதியாக இரண்டு பாதுகாப்பு கவச உடையை வாங்கிக்கொண்டு வந்தான். ஒன்றைத் தன் தாயாரின் உடலிலும் மற்றொன்றை தானும் அணிந்துக்கொண்டான். தனியாக தன் தாயின் இறந்த சடலத்தை தோளின் மீது போட்டுக்கொண்டு மயான பூமியை நோக்கி நடந்தான். தான் ஒருவனாக தன் தாயை எரியூட்டினான். மனித நேயம் என்பது முழுவதுமாக செத்துவிட்டதே என்று கண்ணீர் மல்கினார் அவர் மகன் வீரசிங்.
பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்போது தூக்கி வீசிவிட்டு செல்லும் சகோதர சகோதரிகளே, உறவுகளில் பிள்ளைகளின் உறவு என்பது மிகவும் முக்கியமானது. அது ஆலமர விழுது போன்றது.
"உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்." (நீதிமொழிகள் 29:17) நமது பிள்ளைகள் தான் எதிர்காலத்தில் நமக்கு உதவிச்செய்ய முடியும். அவர்கள் இப்போது அவசியமற்றவர்களாகத் தோன்றலாம்.
இப்பொழுது அன்பு காட்டுகிறவர்கள், தவறான வழிக்கு நடத்துகிறவர்களைக்குறித்து திருமறை இவ்வாறு கூறுகிறது. "நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும்." (நீதிமொழிகள் 26:23) நிரந்தரமற்ற உறவுகளை நம்பி இறைவன் கொடுத்த நல்ல உறவுகளை அலட்சியப்படுத்துவது நம்மை அபாயத்தில் கொண்டு நிறுத்தும் என்பதை மனதில் கொண்டு செயல்படுவோம்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment