குடும்பத்தில் சமத்துவம்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மணமகன் மணமகளுக்கும் , மணமகள் மணமகனுக்கும் தாலி கட்டியுள்ளனர். மணமகன் சமுதாய வழக்கப்படி திருமணச் செலவை மணமகள் வீட்டாரே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் மணமகனோ அதை விரும்பாமல் திருமணச் செலவில் பாதியை கொடுத்துள்ளார். இவ்வாறு இன்றைய திருமணங்கள் சமத்துவம் வேண்டும் என்று முற்போக்கு சிந்தையுடன் செய்துவருகின்றனர்.
திருமறையும் “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.” (ஆதியாகமம் 1:27) என்று கூறுகிறது. ஆணுக்கு அடிமை வேலைச் செய்ய பெண்ணை படைக்கவில்லை. சமமாக படைத்தார். ஆனால் காலம் காலமாக ஆண்கள் வெளியே வேலைக்குச் செல்வதும், பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்வதுமாக மாறிவிட்டனர். ஆகவே ஆண்கள் குடும்பத்திற்கு வேண்டிய தேவைகளை சந்திக்க வெளியே போய் வேலை செய்வதால் முக்கியமானவனாகவும், வீட்டிலே சமைப்பவர்கள் முக்கியமற்றவர்களாயும் கருத ஆரம்பித்துவிட்டனர். ஆதிமனிதன் வேட்டையாடியபோது பாகுபாடு பார்க்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் பெண்களை குறைத்து மதிப்பிட்டதால் மீண்டும் பெண் சமுதாயம் சமத்துவம் வேண்டும் என்று சொல்லவேண்டிய சூழல் வந்துவிட்டது.
இன்றைக்கு சமத்துவம் என்ற பெயரில் ஆணுக்கு இணையாக பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் போடுவதும், T-Shirt அணிவதும் தான் சமத்துவத்திற்கு வழிவகுக்கும் என்று சிந்திப்பதைவிட ஒவ்வொரு செயலிலும் பெண்களை ஆண்கள் மதிப்பது முக்கியம்.
பெண்கள் வேலைக்கு செல்வதால் பெண்கள் ஆண்களிடம் கை ஏந்தும் சூழல் இல்லை. சுயமாக குடும்பத்தை நடத்த முடியும். முன்பு கணவன் இறந்துவிட்டால் மனைவி வேலைக்கு போய் சம்பாதிக்கும் பழக்கம் இல்லையென்றால் மிகுந்த சிக்கலுக்குள் மாட்டிக்கொள்வர். ஆனால் இன்று குடும்பத்தை நடத்திச்செல்லும் ஆற்றலை பெற்றுவிடுவது மகிழ்ச்சிக்குரியதே.
இருப்பினும் சமத்துவம் பற்றிப்பேசுகிற மேலை நாடுகளில் விவாகரத்துகள் அதிகமாக இருப்பது கவலைக்குறியதே. நம் நாட்டிலும் கணவன் மனைவி சம்பாதிக்கிற குடும்பங்களில் மிகவும் எளிதாக திருமண முறிவு ஏற்படுவது சிந்திக்கப்படவேண்டியது. இதை எவ்வாறு தவிர்க்கவேண்டும் என்பதைக் குறித்து யோசிக்கவேண்டும்.
27 ஆண்டுகளாக திருமண வாழ்வில் ஈடுபட்ட பில்கேட்ஸ், மெலின்டா தம்பதிகள் விவாகரத்து செய்துவிட்டு சமூக சேவைகளில் சேர்ந்து பணியாற்றுவோம் என்று முடிவெடுத்திருப்பது நமக்கு அதிர்ச்சியை கொடுக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினர். அறக்கட்டளை அமைத்து சமூக சேவையில் சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். மூன்று பிள்ளைகள் அவர்களுக்கு உண்டு. பில்கேட்ஸ் அவர்களுக்கு வயது 65 ஆகிறது. மெலின்டா அவர்களுக்கு 56 வயதாகிறது. பலகோடி சொத்துக்கள் இருக்கிறது . இருப்பினும் இறைவன் இணைத்த திருமண வாழ்வை முறித்துக்கொண்டு தம் தம் வழிகளில் வாழ முற்பட்டுள்ளனர்.
“இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ” (ஆமோஸ்3 : 3) என்று திருமறை நம்மிடம் கேட்கிறது. சமத்துவமாய் வாழ்வதை திருமறை எதிர்பார்க்கிறது. அதே நேரத்தில் சமத்துவம் என்ற பெயரில் தம் தம் வழிகளில், தம் தம் விருப்பப்படி வாழ திருமறை போதிக்கவில்லை. விட்டுக்கொடுக்கவும், பிறர் நம்மை அறியாமல் ஆதிக்கம் செலுத்த நினைக்கும்போது பொறுமையுடன் எடுத்த்துக்கூறவும், பிறர் ஆதங்கதத்துடன், எரிச்சலுடன் மேலாதிக்கம் பண்ணும்போது மெதுவாக எடுத்த்துரைக்கவும் வேண்டும். கோபத்திற்கு கோபம், எதிர்வினைக்கு எதிர்வினை என்றல்ல. ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து செல்ல திருமறை நம்மை அழைக்கிறது.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment