தனிமையாய் இருப்பதிலும் இருவர் கூடிவாழ்வது நலம்


காட்பாடி அருகேயுள்ள நடந்த ஒரு பரிதாபமான சம்பவத்தை வாசித்தேன். ஒரு பட்டாசுக்கடை இருந்தது. அதில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு கடையின் உரிமையாளரும், அவரின் இரண்டு பேரக் குழந்தைகளும் இறந்து விட்டனர். இச்சூழலின் தன் இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்த தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலைச் செய்துக் கொண்டார். தனது குழந்தைகளை பறிகொடுத்த தாய் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அவருக்கு ஆறுதல் சொல்ல அருகில் கணவர் இல்லை. காரணம் இரண்டு குழந்தைகள் பிறந்த பின் கணவரிடம் இருந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். சம்பாதிப்பதற்கு தன்னால் முடியும் என்பதால் தனியாக வேலைக்குச் சென்றுள்ளார். ஆனால் எதிர்பாராத இழப்பு வந்த போது அவரை ஆற்றுவதற்கோ, தேற்றுவதற்கோ ஆள் இல்லை.

திருமறையில் பிரசங்கியின் புத்தகத்தில் ஒரு நடைமுறை செய்தி உள்ளது. "ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்... ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கி விடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே" (பிர 4;10,11) இது பலரின் அனுபவம். இளமையின் நன்றாக பெலத்தோடு இருக்கும் போது கணவன் எதற்கு? மனைவி எதற்கு? பிள்ளைகள் எதற்கு? என்னால் கை நிறைய சம்பாதிக்க முடியும், துணைக்கு அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி, நண்பர்கள், உறவினர்கள் உள்ளனர் என்று துணையை தூக்கி எறியலாம்.

ஆனால் இந்த உறவுகளும், நட்புகளும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கே நம் உள்வட்டத்திற்குள் வந்து உதவ முடியும். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. நம் மீதே எல்லாருடைய கவனமும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சும் நமக்கு இன்று உதவுபவர்கள் நாளை உதவிச் செய்ய இயலாமல் சென்றுவிடக் கூடும்.

பணம் இருந்தால் எல்லாரும் ஓடிவருவார்கள், பதவி இருந்தால் எல்லாரும் நம் காலின் கீழே என நினைத்து துணையை உதறலாம். ஆனால் நாம் எதிர்பாராத விதமாக பணம் சம்பாதிக்க முடியாமல் செல்லலாம், நமது பதவிகள் பஞ்சுபோல திடீரென்று பறந்து சென்று விடலாம். அவ்வாறு செல்லும் போது பல உயிர் நண்பர்கள் பாம்பு தோலை உரித்துவிட்டு செல்வது போல நம்மை கழற்றி விட்டு விட்டுச் சென்று விடுவார்கள். நிர்கதியாக நிற்கும் போது தான் நாம் கழற்றி விட்டு வந்த துணையின் முக்கியத்துவம் தெரியும்.

கண்போனபின் சூரிய நமஸ்காரம் செய்து பயன் இல்லை என்ற முதுமொழிக் கேற்ப கணவனின் அல்லது மனைவியின் அருமையை தொலை தூரத்திற்கு வந்த பின் யோசித்து பயன் இல்லை. கைகள், கால்கள் தளர்வுற்று இரத்த ஓட்டம் குன்றிய பின் உதவிச் செய்ய நண்பர்களையும் உறவினர்களையும் தேடினால் பலரை நாம் வாழக்கை ஓட்டத்தில் தொலைத்திருப்போம்.

இதையெல்லாம்  உணர்ந்து தான் சாலமோன் ஞானி இருவர் கூடிவாழ்வதின் மேன்மையை குறிப்பாக உணர்த்துகிறார். குடும்பத்தில் கர்த்தர் தந்த துணையை ஒதுக்கி விட்டு தாயோடும் தகப்பனோடும் மீண்டும் பிள்ளையாய் வாழ நினைத்தால் அதனுடைய பின் விளைவுகள் பெற்றோர் நம்மை விட்டு கடந்துப் போன பின்பு தனிமரமாக காட்சியளிக்கும் இக்கட்டான நிலை வரும்போது தான் தெரியும். அருமையான வாழ்வை விட்டு விட்டு சிறுமையான வாழ்வை நாம் தெரிந்து கொண்டோம் என்பது தெரியும். சில பெற்றோரே பிள்ளைகள் தவறான முடிவுகளை எடுக்க, பிரிந்து வருவதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றனர். தங்கள் பிள்ளைகளுக்கு உதவுவதுமே நன்மைச் செய்வது போல் நினைத்து கூட்டுப் புழுவிற்கு வெளியே வர உதவுவது போல், உதவிச்செய்து நாமே நம் பிள்ளைகள் வாழ்வை சிதைத்து விடுகிறோம். தேவன் இணைத்ததை மனுஷன் எவனும் எவளும் பிரிக்காதிருப்பானாக. 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி