போதும் என்ற மனமே


துருக்கி நாட்டை சார்ந்த நஸீம் ஹிக்மத் என்ற ஓவியர் ஒருவர் தன்னுடைய ஓவியத்தில் மகிழ்ச்சியான குடும்பம் எப்படியும் இருக்கலாம் என்பதை வரைந்துள்ளார். அந்த ஓவியம் எப்படி வரையப்பட்டிருக்கிறது என்றால் ஒரு குடும்ப அங்கத்தினர்கள் மகிழ்ச்சியான முகத்துடன் தூங்கிக்கொண்டிருக்கின்றனர். அந்த அறையானது மழையில் ஒழுகிக்கொண்டு இருக்கிறது. அந்த மழை விழாமல் இருக்க ஒரு குடை. ஒரே படுக்கையில் முழு குடும்பமும் படுத்து இருக்கிறது. அவர்களோடு அவர்கள் வீட்டு நாயும் படுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் முகத்திலோ மகிழ்ச்சி காணப்படுகிறது. மகிழ்ச்சி என்பது துன்பங்கள் இல்லாமல் இருப்பது அல்ல. அதை ஏற்றுக்கொள்வது தான் வாழ்க்கை என்பதை சொல்லுகிறது.

"சதுர முட்டையும், சங்கடமில்லாத வாழ்க்கையும் இல்லை" என்பது முதுமொழி. இன்றைய தலைமுறை சங்கடமில்லாத வாழ்க்கையை எதிர்பார்க்கிறது. சிறிய பிரச்சனை, பொருளாதார குறைவு ஏற்பட்டாலும் பிள்ளைகள் தத்தளிப்பதைக்காட்டிலும் பெற்றோர் தான் அதிகமாக தத்தளிக்கின்றனர். ஐயோ பிள்ளை என்னச்செய்வாள்/ன் என்று போன் மேல் போன் போட்டு இப்படியெல்லாம் நீ அந்த வீட்டில் வாழ முடியாது. பேசாமல் நம்ம வீட்டுக்கு வந்திரு, நாங்க உன்னைப் பார்த்துக்கொள்ளுவோம் என்று அழைத்து வந்து விடுகின்றனர் .

சிறுபிள்ளைகள் கீழே விழுந்து விடக்கூடாது என்று கையிலேயும், தொட்டிலிலேயும் போட்டு ஆட்டிக்கொண்டு இருந்தால் என்று தான் நடந்து பழக முடியும். நடக்கும் போது பிள்ளைகள் கீழே விழும், எழுந்திருக்கும். அப்படித்தான் பழக முடியும். அதேப் போன்று தான் புதிதாக திருமணம் செய்துக்கொள்ளுகிறவர்களும் இருக்கிறார்கள். இருக்கிற வருமானத்தில் கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்தி பழக்கட்டுமே!

இதுவரையிலும் பிள்ளைகளுக்கு பணத்தின் மதிப்பு தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இருக்கிற வருமானத்தில் குடும்பத்தை நடத்துவதற்கு அவர்கள் பழக வேண்டும் அல்லவா! எத்தனை நாள் தான் நாம் பிள்ளைகளோடு இருக்க முடியும். அவர்களும் தனித்து வாழ பழக வேண்டும் அல்லவா.

போதும் என்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் என திருமறை கூறுகிறது. இருக்கிற வருவாயில், மகிழ்ச்சியோடு குடும்பத்தை நடத்துவதற்கு பழக வேண்டும். வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும். எந்த நிலைமையிலும் மன ரம்மியமாய் இருக்கக்கற்றுக்கொண்டேன் என்று பவுலடிகளார் கூறுகிறார். அவர் ஒரு செல்வ சீமான். ஆனால் எல்லாவற்றையும் இயேசு கிறிஸ்துவுக்காக விட்டு வந்தவர். ஆனால் அதன் பின்பு பசியாயிருக்கிற சூழல்கள் வந்தது. ஆனால் அவைகளையும் ஏற்றுக்கொள்ளுகிற மனப்பக்குவத்தைப் பெற்றுக்கொண்டார் . 

C.T.ஸ்டட் போன்ற மிஷனரிகள் மிகவும் பணம் படைத்த செல்வ சீமான்கள் தான். ஆனால் அவைகளை பலருக்கு பகிர்ந்துக் கொடுத்துவிட்டு வந்தவர்கள். ராக்லண்ட் ஐயர் போன்றோர் மிகப்பெரிய பிரபுக்கள் வரிசையில் வந்தவர்கள். ஆனால் தொப்பியில் கூழ் வாங்கிக் குடித்து வாழ்வை முறுமுறுக்காமல் நடத்தியவர்கள்.

பணம், அந்தஸ்து, அதிகாரம் போன்றவை இருந்தால் தான் வாழ்க்கை. பக்கத்து வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களும் நம் வீட்டில் இருந்தால் தான் மதிப்பு . அவ்வாறு இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை என்று நினைக்காதிருங்கள். அனைத்து ஐசுவரியத்தினால் நிறைந்திருந்த "ஐசுவரியவான்" இறைவனின் சமூகத்திற்குப் போய் சேரமுடியவில்லை. ஏழ்மையிலும் இறைவனை நிந்திக்காத லாசரு ஆபிரகாம் மடியில் தேற்றப்பட்டார் . 

வெறுங்கையாய் சென்ற யாக்கோபை உயர்த்தின ஆண்டவர், அடிமையாய் இருந்த யோசேப்பை அதிபதியாக மாற்றியவர், கைதியாய் இருந்த தானியேலை ஆளுநராக மாற்றியவர் நமது துன்பங்களை, கஷ்டங்களை மாற்றுவதற்கு வல்லவர். அவ்வாறு மாற்றாவிட்டாலும் இருப்பதில் மகிழ்வோடு வாழ்வோம். இறைவனின் சமூகத்தில் ஒரு நாள் தேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் வாழ்வோம்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி