தியாகமும் அன்புதான்
என் நண்பர் தியாருவின் எழுத்தில் புத்தரின் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றை வாசித்தேன்.அது புத்தரின் வாழ்வில் நடந்த கடைசி நிகழ்ச்சி. புத்தர் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தபோது ஏழை மனிதன் அவரை தன் வீட்டில் உணவு அருந்துமாறு கூப்பிட்டான். உணவாக நாய்குடைகளை சமைத்து பரிமாறினான். இவைகளில் சில வகைகள் விஷமாக மாறிவிடக்கூடியவைகள். இவைகளை அறியாமல் அந்த ஏழை விஷத்தன்மையுள்ள நாய்குடைகளை நன்றாக சமைத்து அன்போடு பரிமாறினான். அவர் அதை எடுத்து உண்ட போது கசப்பு தெரிந்தது. ஆனால் அந்த ஏழை அவர் அருகில் நின்றுக் கொண்டு விசிறி ஒன்றினால் வீசிக்கொண்டு மகிழ்ச்சியோடு அவர் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டு இருந்தான். அவர் சாப்பிட்டு முடித்ததும் மன நிறைவோடு புத்தரை அனுப்பி வைத்தான்.
தன்னுடைய இருப்பிடத்திற்கு சென்ற புத்தர் சற்று நேரத்திற்குள்ளாக தன்னுடைய சுய நினைவுகளை இழக்க ஆரம்பித்தார். வைத்தியர்கள் விரைந்து வந்து அவரை பார்த்த போது அவர் பிழைப்பது கடினம் என்றனர். உண்ட உணவில் தான் விஷம் இருந்திருக்க வேண்டும் என்று கருதினர். ஏழைக் கேள்விப்பட்டு ஓடி வந்தான், கதறினான். புத்தரோ கண்களை மெதுவாக பார்த்த போது ஏழை அருகில் நின்று ஏன் இதை என்னிடம் சொல்லவில்லை என்று மன்றாடினான்.அப்பொழுது அவனைப் பார்த்து "உன் கண்ணில் பெருகும் மகிழ்ச்சியை கண்டேன், நாய்க்குடையின் கசப்பையும் உணர்ந்தேன், என் இரத்தத்தில் கலக்கும் விஷத்தையும் உணர்ந்தேன், என்னை அணுகிவரும் மரணத்தையும் உணர்ந்தேன். மரணம் இன்று இல்லாவிட்டாலும் நாளை வரும்.இதற்காக உன் மகிழ்ச்சியை நான் கெடுக்கக் கூடாது. கசப்பு என்று நான் கூறியிருந்தால் உன் மகிழ்ச்சி கசப்பாக மாறியிருக்கும்" என்று கூறினார் கண்ணை மூடினார்.
குடும்ப வாழ்வில் தியாகம் என்பது குறைந்து வரும் சூழலில் அதன் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எபேசியர் 5:25ல் "புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்பு கூறுங்கள் : அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்பு கூர்ந்து..." என்று பவுல் அடிகளார் எப்படி அன்பு கூற வேண்டும் என்பதற்கு உதாரணமாக இயேசுவின் அன்பை மாதிரியாக எடுத்துக் காட்டுகிறார். இயேசு எப்படி சபையின் மீதும் மக்கள் மீதும் அன்பு கூர்ந்தார் என்றால் தன்னுடைய உயிரையும், உதிரத்தையும் கொடுத்து அன்பின் உச்சத்தை, தியாகத்தின் வழியாகக் காட்டினார்.
திருமணமான புதிதிலே கணவனுக்கோ/மனைவிக்கோ ஒரு பிரச்சனை அல்லது குறைபாடு அல்லது சுகவீனம் என்றால் உடனடியாக மற்றவர்கள் கூறுவது நான் எதற்காக என் வாழ்நாள் முழுவதும் துணைக்காக வாழ்வை தியாகம் செய்ய வேண்டும். நான் என்ன தியாகியா? என் சந்தோஷத்தை அவளுக்காக/அவனுக்காக நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
நம்முடைய வீட்டில் வாழ்கிற பூனை, புறா, கோழி, ஆடு மாடுகள், நாய் எல்லாம் சுகவீனமாகும் போது கூட அவைகளுக்கு மருத்துவம் பார்த்து காப்பாற்ற விரும்புகிறோம். ஆனால் இறைவன் கொடுத்த துணைக்காக நம்மை கொஞ்சம் தியாகம் செய்ய முன்வரவேண்டியது அவசியம் அல்லவா!
வாழ்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் மரணம் நம்மை பிரிக்குமளவும் என்று கர்த்தருடைய சமூகத்தில் எடுத்துக் கொண்டு தீர்மானம் என்ன ஆனது! கடவுளுடைய சமுகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் நிரந்தரமானதா? உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படுகிறதா? முழுமனதுடன் தான் அறிக்கையிடுகிறோமா? அல்லது கடமைக்காகவா! கடவுளுக்கு முன்பு உங்கள் தீர்மானங்களை யோசித்துப்பார்த்து மனந்திரும்ப அழைக்கிறார்.
Comments
Post a Comment