திருமணம்: இயேசுவின் கூற்று


நன்கு படித்த இரு குடும்பங்களிடையே திருமணம் பற்றிப் பேசப்பட்டது. இரு குடும்பத்தினரும் நல்ல வரன் கிடைத்த மகிழ்ச்சி, இறைவனுக்காக வாழ்கிற இரு குடும்பங்கள் ஒன்றுபடுவதைக்குறித்து உறவினர்கள் மகிழ்ந்தனர். கடவுள் தான் இந்த காரியத்தை வாய்க்கச் செய்தார் என்று மனதார வாழ்த்தினர். திருமணம் முடிந்த பின்பு சில வாரங்களுக்குள்ளே கணவன் மனைவி இருவரும் வேலைக்குச்  செல்ல ஆரம்பித்தனர். பெற்றோர்களிடம் இருந்து பிரிந்து தூர இடத்தில் போய் பணிச்செய்யவேண்டிய சூழல். மகிழ்ச்சியோடு பெற்றோர் ஜெபித்து வழி அனுப்பி வைத்தனர்.  

சில மாதங்களுக்குள்ளாகவே கணவன் மனைவியிடையே பிரச்சனைத் தலை தூக்கியது. அந்த பெண் இவனோடு வாழ்வது இயலாது என்று பண்ட பாத்திரங்களையும், துணிகளையும் எடுத்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். பெற்றோர்கள் பேசியும் சரியாகவில்லை, ஊழியர்கள் பேசியும் சமாதானம் பண்ணமுடியவில்லை. இறுதியில் பிரிந்தனர். அந்த சூடோடே அந்த பெண்ணுக்கும், பையனுக்கும் வெவேறு இடங்களில் அடுத்த வரன் பார்த்து மறுமணம் செய்து வைத்தனர். இந்த கழுதை இல்லன்னா இன்னொரு கழுதை என்று தூக்கி எறிந்து விட்டு இரண்டு பெற்றோரும் பிள்ளைகளுக்கு மறுமணம் பார்த்து வைத்துவிட்டு உற்சாகமாக ஊழியத்தை துவங்கினர். 

மணமுறிவைக்குறித்து வருத்தப்பட்டாலும், மறுமணம் செய்து வைப்பது குறித்து இயேசு கிறிஸ்துவின் கருத்து என்ன என்பதை சரியாக புரிந்துக்  கொள்ளாமல்  தங்கள் விருப்பத்திற்கிணங்க திருமறையை வியாக்கியானம் செய்கின்றனர். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் ஷம்மாயி, ஹில்லேல் என்ற மறை நூல், அறிஞர்களிடையேயும் கருத்து வேறுபாடுகள் இருந்தது. இச்சூழலில் இயேசு கிறிஸ்துவிடம் "கணவன் தன் மனைவியை விலக்கி விடலாமா?" என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.   

இயேசு கிறிஸ்துவும் எப்போழுதும் போல் எதிர் கேள்வியை அவர்களிடம் கேட்கிறார். மோசே என்னச் சொல்லுகிறார்? என கூறுங்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவிடம் முறிவுச் சீட்டு எழுதி அவளை விலக்கி விடலாம்  என்று மோசே கூறுகிறார் என்றனர். 

இயேசுவானவர் உடனே ஒரு பதிலடிக்கொடுக்கிறார். "உங்களுடைய முரட்டுத்தனத்தின் பொருட்டே இக்கட்டளையை எழுதி வைத்தார்." என்று கூறுகிறார். ஆனால் இதைக்காட்டி எல்லாருக்கும் இது பொருந்தும் என்று நினைக்காதிருங்கள். ஏனென்றால் திருமணத்தின் நோக்கத்தைக்குறித்து  கடவுளுடைய திட்டம் என்னவென்றால் "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்." (ஆதியாகமம் 1:27, 2:24) என்ன சூழல்கள் வந்தாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பொறுத்து இசைந்து வாழ்வதுதான். தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் (மல்கியா 2:14 to 16). எனவே கர்த்தர் விருப்பம் இணைந்து வாழ்வது தான். பெற்றோர்பால் கொண்ட இணைப்பு மற்றும் உறவை விட நெருங்கிய இணைப்பாக, கணவன் மனைவியின் இணைப்பு இருக்க வேண்டும் என்பது தான் கடவுளின் அநாதியான திட்டமாக இருக்கிறது. 

திருமணம் பற்றி மோசே கூறிய கருத்தைக்காட்டிலும் இயேசு கிறிஸ்துவின் கருத்து அல்லது விருப்பம் என்பது இறைவனின் ஆதி திட்டமே. மோசே கூறிய திருமண முறிவு அளிக்கும் சட்டத்தை இயேசு கிறிஸ்து ரத்துச்  செய்துவிட்டு புதுச்சட்டத்தை கொடுக்கிறார். அது இறைவனின் முந்தின திருவுள விருப்பமே.   

இயேசு கிறிஸ்துவானவர் திருமண ஒப்பந்தத்தை முந்திய, புனித, நிலையான, முறியாத, இலட்சிய நிலைக்கு உயர்த்துகிறார். இயேசு கிறிஸ்துவானவர் நியாயப்பிரமாணத்தை அழிக்க  அல்ல, நிறைவேற்றவே வந்தார். (மத்தேயு 5:17) விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது.  பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது. (1 கொரிந்தியர் 7:10,11) என்று பவுலடிகள் தன்னுடைய கருத்தை முன் வைக்காமல் கர்த்தரின் கருத்தையே இறுதியானது என்கிறார்.

புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம்பண்ணினாலும் விபசாரியல்ல. (ரோமர் 7:3) என்று மறுமணம் பற்றி கூறும் போது குறிப்பிடுகிறார்.

யூதர்கள் திருமணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமைக் கொடுக்காத காலத்தில் இயேசு கிறிஸ்துவானவர் ஆணுக்கு இணையாக பெண்ணுக்கு சம உரிமையையும், கடமைகளையும் உண்டு என்கிறார். "தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாய் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான். மனைவியும் தன் புருஷனைத் தள்ளிவிட்டு, வேறொருவனை விவாகம்பண்ணினால், விபசாரஞ்செய்கிறவளாயிருப்பாள் என்றார்." (மாற்கு 10:11,12) என்று தெளிவு பட இயேசு கிறிஸ்து கூறுகின்றார். இந்த கருத்தின் அடிப்படையிலேதான் திருமுழுக்கு யோவான் ஏரோதியாள்-ஏரோதின் தவறை உணர்த்தினான். அதற்காக தன் வாழ்வையே இழக்க நேர்ந்தது.  திருமறை கூற்று என்றும் சத்தியமே, மாறாத பிரமாணமே. 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி