பாச மழைக்கு poison மழை
குளிக்கும் அறைக்குள் இருந்து முக்கல் முனகல் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது. ஒரு நாள் இரண்டு நாளல்ல சில நாட்களாகவே கேட்டது. அந்த குளியல் அறை வீட்டோடு சேர்ந்திராமல் தனித்து இருந்தது. ஆகவே தெரு வழியாகச் செல்லும் அந்த கிராம மக்கள் காதுகளில் முனகல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.
கிராமமாக இருந்ததால் துணிந்து மக்கள், குளியல் அறையை தட்டினர். திறந்து பார்த்தால் மக்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. 95வயது மதிக்கத்தக்க அந்த தாயை மகன் குளிக்கும் அறைக்குள்ளே அடைத்து வைத்துள்ளார். வீட்டில் இருந்தால் வீடு நாற்றம் அடிக்கும் என்று குளியல் அறையையே அந்த தாய்க்கு வீடாக மாற்றிவிட்டார் அந்த கல்நெஞ்சர். தாய்க்கு வந்த பென்சன் பணத்தையும் எடுத்துப் பயன்படுத்தி விட்டு, தாயை வீட்டில் வைக்க மனம் அற்றுப்போனான்.
கிராமமக்கள் முதியோர் இல்ல நிர்வாகிகளுக்கு தகவலைத் தெரிவிக்க இறுதியாக அந்த தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். இன்று ஒரு ஆண் குழந்தைப் பிறந்து விட்டால் வீடெல்லாம் கூடி ஸ்வீட் வழங்கி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். முதலாவது பிறந்த நாளுக்கு உறவுகளைக் கூட்டி பிரியாணிப் போட்டு கலக்கி விடுகின்றனர். மகன் படித்து பெரியாளாக வரும் போது தன் மகனின் பெருமைகளையும், திறமைகளையும், பேசிப்பேசியே மகிழ்வர். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு வந்து விட்டால் உணவு கூட வேண்டாம் மகிழ்ச்சியிலே வாழ்ந்து விடுவர். இவ்வாறு அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் பெற்றோர் ஊட்டி வளர்க்கின்றனர். ஆனால் பிள்ளைகளோ பெற்றோரின் அன்பை முற்றிலும் மறந்து வானத்திலிருந்தே நேரே குதித்து வந்தவர்கள் போல் நடந்துக் கொள்ளுகின்றனர்.
Dr.V.S. நடராசன் அவர்கள் ஒரு புள்ளி விபரத்தை குறிப்பிடும்போது நமது நாட்டில் 32% முதியவர்கள், இளைய சமுதாயத்தினரால் அவமதிக்கப்பட்டு வருகின்றனர் என்கிறார். அப்படியென்றால் மூன்றில் ஒரு முதியவர்களை இளைஞர்கள் வெறுக்கின்றனர் என்று அர்த்தம். 56% முதியோர் தங்கள் மகன்களால் அவமதிக்கப்படுகின்றனர். அதாவது இரண்டில் ஒரு முதியவர் பாதிக்கப்படுகிறார். ஆண்கள் தான் இப்படி இருக்கிறார்கள் என்று மட்டும் நினைத்துக் கொள்ளாதிருங்கள். "Help Age India" நடத்திய ஆய்வின் படி 23% முதியவர்கள் தங்கள் மருமகளால் துன்புறுத்தப்படுகின்றனர் என்று கூறுகிறது.இதுமட்டுமல்ல சொந்த மகள்களும் பெற்றோரை அவமரியாதையாக நடத்துகின்றனர் என்றும் கூறுகிறது.
நம் பெற்றோர்களுக்கு நாம் எப்பொழுதும் பிள்ளைகள் தான். நாம் முன்பு ஆறு வயதுப் பிள்ளை, இப்பொழுது 60 வயதுப் பிள்ளை. எப்பொழுதும் நாம் அவர்களுக்கு கீழ்படிந்து வாழ வேண்டும் என்பது தான் அவர்கள் எதிர்பார்ப்பு. ஒரு வேளை அவர்களுக்கு இன்றைய சூழல் புரியாமல் இருக்கலாம். அவர்கள் கண்டிப்பு எல்லாம் நம் மீது உள்ள அக்கறையால் தான். அவர்கள் உயிரே நம் மீது தான். ஆகவே தான் ஏன் இவ்வளவு லேட்டா வாரா? ஏன் சாப்பிடாமல் இன்னும் இருக்கிறா? என் மகனுக்கு நீ சரியா சாப்பாடு கொடுக்கலியா, அவன் மெலிஞ்சுப் போய் இருக்கிறான்! இப்படி பல்வேறு விதமாக பேசினாலும் பிள்ளைகள் மீது உள்ள அன்பை எப்படியோ ஒரு விதத்தில் காட்டிக்கொண்டே தான் இருப்பார்கள். எந்த பெற்றோரும் தன் பிள்ளைகள் மோசமாக வேண்டும் என்று நினைப்பதில்லை. ஆனால் பிள்ளைகள் தான் தன் பெற்றோர் எப்பொழுது மரிப்பார்கள், நமக்கு தொல்லை இல்லாமல் போகும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
சிறு பிள்ளையாக இருக்கும் போது எத்தனையோ நாட்கள் நம்மை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். தங்கள் வேலைகளைப் போட்டுவிட்டு நம்மோடு இருந்திருப்பார்கள். ஆனால் பெற்றோர்களை மருத்துவமனையில் சேர்த்துவிட்டால் பிள்ளைகள் வருத்தப்படுகின்றனர். நாம் எப்படி நம் வேலையைப் போட்டுவிட்டு போய் பார்ப்பது! சீக்கிரம் போய் சேர்ந்தால் நல்லா இருக்குமே என்று பேசுகிற பிள்ளைகள் பெருகிவிட்டனர்.
மோசே காலத்திலேயே கர்த்தர் 10 கற்பனைகளைக் கொடுக்கும் போது ஒரு கற்பனை "உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக" (யாத் 20:12) என்று கொடுத்துள்ளார். ஒரு வேளை உலக வரலாற்றை உற்று நோக்கும் போது கூட வயதானவர்கள் வேஸ்ட் ஆனவர்கள் என்ற சிந்தனையுடைய தலைவர்கள் அவ்வப்போது எழும்பியுள்ளனர். எனவே தான் இறைவன் மனுஷனுக்கு கற்பனையாகவே கொடுத்துள்ளார். குறிப்பாக பெற்றோரைக் கனம் பண்ணுவதினால் பிள்ளைகளுக்கு ஆசிர்வாதமும் உண்டு என்பதைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அதே வேளையில் நீதிமொழிகள் புத்தகத்தில் ஒரு வயதான தாயை எப்படி நடத்தவேண்டும் என்று ஆலோசனையைத் தருகிறது. "உன் தாய் வயது சென்றவளாகும் போது அவளை அசட்டைப் பண்ணாதே" என்று கூறுகிறது. பெற்றோருக்கு உணவு கொடுக்க மறுப்பதும், உறைவிடம் கொடுக்க மறுப்பதும், சுத்தம் செய்யாமல் கொடுமைச் செய்வதும், வீடு நாறுகிறது என்று வெளியே பாத்ரூமில் அடைத்துப் போடுகிற செயலும், அடிப்பதும், அவமரியாதையுடன் நடத்துவதும் இன்று நீங்கள் மகிழ்ச்சியோடு செய்யலாம். ஆனால் அதே மரியாதை உங்களுக்கும் கிடைக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.
திருமணமானவுடன் நம் வாழ்க்கை செட்டில் ஆகி விட்டது. பணம் இருக்கிறது. இனி பெற்றொரை வைத்து என்ன பிரயோஜனம்! என்று உதாசினப்படுத்தாதிருங்கள். உங்கள் வாழ்க்கை வளமாக அமைவதற்கு அவர்கள் உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை மறந்து விடாதிருங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment