ஈகோ என்ற செருப்பு
மேற்கண்ட அறிவுரை கூறுவதற்கு ஒரு காரணம் இருந்தது. கணவர் அவர் மனைவியிடம் உள்ள கருத்து வேறுபாடு நிமித்தமாக விவாகரத்து கோரி வெற்றி பெற்றார். உடனே மனைவி குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து கணவரின் அரசு வேலையை பறித்து ஆனந்தமடைந்தார். இவ்வாறு மற்றவர்களை துன்புறுத்துவதும், தங்கள் வாழ்க்கையில் ஈகோவுடன் போட்டிப்போட்டு தனியாக வாழ்ந்து காட்டுவதில் முன்னெடுப்பது, குடும்பங்களை எவ்வளவு சிதைத்து விடுகிறது என்பதை உணர்ந்தார். ஆகவே தான் ஈகோ,சகிப்புத்தன்மையின்மை போன்றவற்றை செருப்புக்கு ஒப்பிட்டார். ஆனால் பலர் இன்று இந்த செருப்புகளை தலையில் வைத்து சுமக்கின்றனர்.
நாம் செய்வது தான் சரி என்றும், நாம் சொல்கிறபடி தான் குடும்பம் நடைபெற வேண்டும் என்ற ஈகோ மனப்பான்மையுடன் பலர் வாழ முற்படுகின்றனர். கணவர் அல்லது மனைவி என்ன நினைக்கிறார்கள் என்றால் நம் ஆசைகளை, எதிர்பார்ப்புகளை நிராகரிக்கிறார்கள் என்ற ஆதங்கத்தினால் பிறர்மீது வெறுப்புகளை வளர்ந்து வாழ்வை நிர்மூலமாக்குகின்றனர்.
சிலவேளை பிறர் செய்கிற சிறிய தவறுகளையும் சகித்துக்கொள்ள மனம் வராமல், அதனை மனதில் ஏற்றி ஏற்றி வெறுப்பை மலைப்போல் பெரிதாக்குகின்றனர். பனித்துளிகள் சிறிது சிறிதாக சேர்ந்து (snow ball effect) பெரிய உருண்டைகளாக மாறி விடுகிறது. இதைப்போல் வெறுப்புகள் சேரச்சேர பெரிய மனப்பாதிப்பை உருவாக்கி விடுகிறது. இதன் விளைவாக பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி எதையும் நினைக்காமல் விவாகரத்து பெறுவதற்காக நீதிமன்ற வாசலுக்கு நடையாக நடக்க ஆரம்பிக்கின்றனர்.
பிள்ளைகள் சிறுவர், சிறுமியாக இருக்கும் போது அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு வெளியே தெரியாமல் இருக்கலாம். ஆனால் பெரியவர்களாக மாறும்போது, பள்ளி, கல்லூரிக்கு போகும் போது மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகின்றனர். பிற மாணவ, மாணவியருடன் ஒப்பிட்டுப் பார்க்க துவங்குகின்றனர். தனக்கு அவனை/ளப் போன்று தகப்பன்/தாய் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்ற உணர்வு மேலோங்குகிறது. ஒரு ஏக்க உணர்வு தங்களையும் அறியாமல் அவர்கள் மனதில் வெளிப்பட ஆரம்பிக்கிறது.
ஒரு தகப்பனின் இடத்தை ஒரு தாயால் நிரப்ப முடியாது. அதேப்போல் ஒரு தாயின் இடத்தை ஒரு தகப்பனால் நிரப்ப முடியாது. ஒரு தாத்தா எவ்வளவுதான் முயன்று தகப்பன் இல்லாத குறையை நிவிர்த்தி செய்யலாம் என்று நினைத்தாலும் அவர் தகப்பனுக்கு ஈடாக மாட்டார். அதேப்போல் ஒரு பாட்டி எவ்வளவு முயன்றாலும் ஒரு தாய்க்கு சமமாக முடியாது. தகப்பனைப் போல் கண்டிக்க தாத்தாவால் முடியாது. தாயைப் போல் அன்பு செலுத்த பாட்டியால் முடியாது. ஒருவர் கால் உடைந்து விட்டால் ஊன்றுகோல் வைத்து நடக்கலாம். அதற்காக ஊன்றுகோல் தான் சிறப்பானது என்று கூற முடியுமா? பெற்றோரின் ஈகோவால், சகிப்பின்மையால் மிகவும் பாதிக்கப்படுவது பிள்ளைகள்தான்.
எனவே குடும்ப வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றால் “ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ண வேண்டும்” (பிலிப்பியர் 2:3) அதே வேளையில் “தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.” (எபேசியர் 5:21) என்றும் திருமறை கட்டளையிடுகிறது.
நாம் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்பதல்ல, கணவன்/மனைவி சொல்லுகிறபடியும் சில காரியங்கள் நடக்கட்டும் என்று விட்டுவிட்டால் பிரச்சனைகள் முடிந்து விடும்.
“தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே” (எபேசியர் 5:28,29) என்று பவுல் குறிப்பிடுகிறார். இன்று பலர் தங்கள் சொந்த மாம்சத்தை பகைக்க ஆரம்பிக்கின்றனர். ஆகவேதான் குடும்பங்களில் வேதனைகள் பெருகுகிறது. கர்த்தரின் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு கீழ்ப்படியுங்கள். அப்பொழுது தெய்வீக சமாதானம் உங்கள் குடும்பங்களை நிரப்ப முடியும்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment