வாழ்வை வெறுமையாக்கும் வியாதிகள்


வயது முதிர்ந்த போதிலும் வாழ்க்கைத்துணை அமையாமல் காத்திருந்தார் மணிகண்டன். புதிதாக வேலைக்குச் சென்ற இடத்தில் ஒரு பெண்ணை சந்தித்தான். குடும்பத்தினர்தான் தன் மேல் அக்கறை இல்லை என்று எண்ணி, தான் வேலை பார்த்த இடத்தில் சந்தித்த பெண்ணையே திருமணம் பண்ணி கொண்டான். நெடுநாள் காத்திருந்து இளைத்துப் போனவனுக்கு இனிய நீரோடையைப்  போல் வந்து அமைந்தாள்  பூரணி. 

நாட்கள் புரண்டு ஓடியது மணிகண்டனுக்கு தலைவலி புதிதாய் முளைத்தது. மருத்துவமனைகளின் வாசற்படி எல்லாம் ஏறி இறங்கினாலும் தலைவலி மட்டும் இறங்கவே இல்லை. கூலி வேலைப் பார்த்து வயிற்றுப் பிழைப்பை நடத்தியவனுக்கு வேலைக்கு போக முடியவில்லை. வைத்தியர்களுக்கு பணத்தை இறைத்தே களைத்துப் போனான். வாழ்க்கையின் மீது வெறுப்பு ஏற்பட்டது. காத்திருந்து கைப்பிடித்த மனைவியிடம் தன் வெறுப்பைக் கக்கினான். நீங்க இல்லாமல் என்னால் தனியாக வாழ முடியாது என்று கூறவே இருவரும் விஷத்தை அருந்தி வாழ்வை முடித்துக் கொண்டனர். 

இன்னும் பலர் வியாதிகள் வரும் போது அதை எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். சில வியாதிகள் குணமாகிவிடும் என்ற நம்பிக்கை உண்டு, சில வியாதிகள் குணம் ஆகுவதற்கு  வழியில்லை என்றும் தெரிகிறது. இந்தக் கொடிய நோய் வந்துவிட்டதே இனி எப்படியும் சீக்கிரத்தில்  இறந்து விடுவோம் என்ற அச்ச உணர்வு பலரைத் துன்பத்திற்குள்ளாக அழைத்துச் செல்லுகிறது. 

வியாதியை எதிர்த்துப் போராடுவதற்கு பணமும் இல்லை, உதவிச்  செய்ய ஆட்களும் இல்லை, வேதனைகளைத்  தாங்க உடலில் பலமும் இல்லை என்ற சூழல்கள் வரும்போது உள்ளத்தில் வெறுப்புணர்வும், பயமும் உள்ளத்தைக் கவ்வுகிறது. வாழ்வில் வாழ்ந்து என்ன பயன் என்று வெறுமை உள்ளத்தை உலுக்குகிறது. இதனின்று வெளியே வர இயலாது என்று எண்ணும்போது தற்கொலை உணர்வுகள் மேலோங்குகிறது.  

தனக்கு வந்துள்ள கொடிய நோயைப் போன்று உலகில் பலருக்கும் வந்துள்ளது. அவர்கள் எல்லாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. மருத்துவம் பார்க்கிறார்கள். நாமும் வாழ்ந்து தான் நோயை வென்று தான் பார்ப்போமே என்ற உணர்வு மேலோங்க வேண்டும். அதற்குத் துணையாய் குடும்பத்தில் உள்ளவர்கள் அமையவேண்டும். 

நீ எப்படியும் சீக்கிரத்தில் இறந்துவிடுவாய், உன்னைப் போலத்தான் எனக்கு தெரிந்த நபருக்கு பாதிப்பு வந்து சில மாதங்களுக்குள் மரித்து விட்டார் என்ற எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும். 

திருமறையில் (1 இராஜாக்கள்  19:4)ல் எலியா கடவுளைப் பார்த்து கூறுகிறான் “கர்த்தாவே என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்”. .நான் சாக வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறான். தானாக சாகாமல் கடவுளாகவே தன் உயிரை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று மன்றாடுகிறான். ஏனென்றால் இன்னும் சில மணி நேரத்திலோ, நாளில் தானோ தான் அரசி யேசபேலால் சாகப்போகிறேன். அவள் கையால் சாவதைக்  காட்டிலும் இறைவனே என் உயிரை எடுத்து விட்டால் நலமாயிருக்கும் என்று மன்றாடுகிறான். 

சாகிறது தான் பிரச்சனைக்கு முடிவு என்ற நிலைக்கு வந்து விடுகிறான். ஆனால் இறைவன் ஒரு தூதனை அனுப்பி, சாவதற்காக கோரிக்கை வைத்து விட்டு அயர்ந்து தூங்கின  எலியாவிற்கு அடையும் தண்ணீரையும் கொடுக்கிறான். அவனை தட்டி எழுப்பி சாப்பிட கூறுகிறான். எலியா எழுந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் தூங்குகிறான்.  

மீண்டுமாக எலியாவிற்கு சாப்பாட்டை தூதன் கொடுத்து தட்டி எழுப்புகிறான். தூதனுடைய பணியானது தற்கொலையை நோக்கி கொண்டு இருக்கிறவர்களை எப்படி அணுக வேண்டும் என்பதைத் கற்று தருகிறது.  

தற்கொலைக்கு முயன்றவரைப் பார்த்து ஆறுதலாக தட்டிக்கொடுத்து பேசுவது மிகவும் முக்கியம். .தற்கொலை செய்கிறவர்கள் உடனே தங்கள் எண்ணங்களில் இருந்து விடுபடுவார்கள் என்று நினைப்பது தவறு. தொடர்ந்து தட்டிக்கொடுத்து உணவையும் கொடுத்து, உன் வாழ்க்கையில் நீ செய்ய வேண்டிய கடமைகள் அநேகம் இருக்கிறது. உன்னால் இன்னும் பெரிய காரியங்களைச்  செய்ய முடியும். எனவே வாழ்க்கை ஓட்டத்தை முடிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம் என்பதை இறை தூதர் எவ்வளவு அழகாக செய்கிறார். 

மற்றொரு புறத்தில், நான் மட்டும்தான் இந்தப் பிரச்சனையில் இருக்கிறேன் என்று எலியா கூறும்போது (1 இராஜாக்கள்  19:14) கடவுள் கூறுகிறார் நீ மட்டுமல்ல, 7000 பேர் இதே பிரச்சினையில் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்.  இன்றும் வியாதி பிரச்சனை என்பது எனக்கு மட்டும்தான் என்று திகைக்கும் போது, இல்லை உலகிலே நம்மைப் போலவும், நம்மை விட அதிகமான துன்பங்களை அனுபவித்துக் கொண்டும் பலர் கடவுள் கொடுத்த வாழ்வினை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி, இறைவன் நமக்குப் பலன் தர பிரச்சனைகளைத் எதிர் கொள்ள, உதவிடும் படியாக மன்றாட வேண்டும். ஏனெனில் சோதனையான சூழலில் அதை தாண்டிச் செல்ல இறைவனே நமக்கு பெலனைத்தர  முடியும். எலியாவிற்கு உதவின ஆண்டவர் உங்கள் வாழ்வையும் வழிநடத்த வல்லவராக இருக்கிறார்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்