அவளின்றி நீ இல்லை


உலகிலே மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் மனுஷி எப்படி படைக்கப்பட்டாள் என்பதற்கான புனைவு கதைகள் பல உண்டு. அவற்றில் ஒன்று ருசிகரமானது. இறைவன் மனிதனை வலுவானவனாக உருவாக்கி மகிழ்ந்தார். பின்னர் நீண்ட நேரம் யோசித்து பெண்ணை உருவாக்க நினைத்தார்.  

வானத்து நிலாவின் வட்ட முகத்தையும், திராட்சைக் கொடியின் வளைவைப் போன்ற இடுப்பையும், நிலத்தில் வளரும் புல்லின் நடுக்கத்தையும், நீர் தாமரைத் தண்டின் மென்மையையும்,மலர்கள் இதழ்களை விரித்து  மலர்கிற அழகையும், செங்கதிரோன் வழங்கும் ஆழ்ந்த அமைதியையும் ,மேகங்களில் இருந்து சிந்தும் கண்ணீரையும்,காற்றின் நிலையற்ற போக்கையும், முயலிடம் காணப்படும் அச்சத்தையும், மயிலிடம் காணப்படும் வசீகரத்தையும்,பறவைகளின் நெஞ்சில் காணப்படும் மென்மையையும், வைரத்தின் கடினத்தன்மையையும், தேனின் இனிய சுவையையும், காட்டு புலியிடம் காணப்படும் கொடூரத்தன்மையையும், நெருப்பில் இருந்து வெளிப்படும் எரிக்கிற சக்தியையும், உறைப்பனியின் குளிர்ச்சியையும், ஐரோப்பாக் கண்டத்தில் காணப்படுகிற பறவை ஒன்றின் வாயாடித்தனத்தையும், வானம்பாடி பறவையின் கீதத்தையும், நண்டின் பொய்யான போக்கையும், தாய் சிங்கத்திடம் வெளிப்படும்  நம்பிக்கையும் எடுத்து நன்றாக குழைத்து ஒரு பெண்ணை உருவாக்கி ஆணிடம் கொண்டுவந்தார். 

அவளின் அழகில் மயங்கி பேச்சில் லயித்து போய் அந்த ஆதி மனிதன் அந்தப் பெண்ணோடு அகமகிழ்ந்தான். இதுவல்லவா வாழ்க்கை என்று கொண்டாடி மகிழ்ந்தான். வாரங்கள், மாதமாக, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தவன் தலைகீழாய் புரண்டு வெறுப்பின் உச்சிக்கு    போய் விட்டான். பெண்ணை கொடுத்த இறைவனிடமே வந்து புலம்பி நின்றான். இறைவா நீங்கள் கொடுத்த அந்தப் பெண்மணி என் வாழ்வை நரகமாக்கிக் விட்டாள். எப்பொழுதும் பேசிப்பேசியே என் கழுத்தை அறுக்கிறாள். எங்கு போய் வந்தாலும் கேள்வியாய் கேட்டு என்னை சித்திரவதை செய்கிறாள். நான் எப்பொழுதும் அவளை கவனித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள். என்னால் தனித்து சிந்திக்கவோ, என் விருப்பப்படி செயல்படவோ என்னால் இயலவில்லை. என் நேரம் எல்லாம் வீணாய்  போகிறது கொஞ்சம் நான் கோபித்தாலும் அழுது புலம்புகிறாள்.எனவே அவளோடு வாழ்ந்தது போதும் தயவுசெய்து அவளை நீரே திரும்பவும் அழைத்துச் சென்றுவிடும் என்று வருந்திக் கேட்டுக்கொண்டான். 

இறைவன் அவனின் முறையீட்டை கேட்டு திரும்ப அழைத்துச் சென்றுவிட்டார். சில வாரங்கள் மகிழ்ச்சியாய் வாழ்ந்தான். பின்னர் தனிமை வாட்டியது. அவளோடு செலவிட்ட நேரங்கள், அவளின் சிரிப்பு, அன்பான உபசரிப்பு, இனிமையான உரையாடல், தன் மீது செலுத்திய அன்பு எல்லாம் நினைவின் மேல் நினைவாக வந்தது. எவ்வளவு அழகாக அருகில் இருந்தாள், அவளைத் தொடுவதற்கு எவ்வளவு மென்மையாக இருந்தாள். இப்பொழுது அவைகளெல்லாம் இல்லாத வெறுமை வீட்டில் இருப்பதை உணர்ந்தான். எப்பொழுதும் மயான அமைதியாய் வீடு விளங்கியது இதனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இறைவனை நோக்கி மீண்டுமாக நடையைக்  கட்டினான். 

இறைவனிடம் கண்ணைக் கசக்கிக் கொண்டு ஆண்டவரே, என்னால் வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியவில்லை.அவள் என்னோடு இருக்கும்போது அவள் எனக்கு கொடுத்தது மகிழ்ச்சியை விட துன்பம் தான் அதிகம் என்று உணர்ந்தேன். ஆனால் அவள் இல்லாமல் இன்பமாய் வாழ்வது என்பது வெறும் மாயையாகத் தோன்றுகிறதே, நான் மீண்டும் அந்த பெண்ணை அழைத்துச் செல்லலாமா என்றான். 

ஆண்டவர் புன்முறுவலோடு "அவள் இல்லாமல் உன்னால் வாழ முடியாது" என்று கூறி மறைந்து போனார். இன்றும் பலரின் வாழ்க்கையில் நடப்பது என்ன? திருமணம் செய்து கொள்ள விரும்புகிறவர்கள் எப்பொழுது திருமணம் நடைபெறும் என்றும், திருமணம் செய்து கொண்டவர்கள் எப்பொழுது இந்த திருமண பந்தத்தில்  இருந்து பிரியலாம் என்று என்று திட்டம் தீட்டுகின்றனர். 

“புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.” (ஆதியாகமம் 2-24) என்று திருமறை கூறுகிறது. இசைந்து வாழ்தல் என்பது இன்றைய சமூகத்தில் குறைந்து போய்க்கொண்டிருக்கிறது.என் விருப்பத்திற்கு ஏற்ப நீ இசைந்து  நடந்து கொள் என்று கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும், இன்று கேட்கின்றனர்.  

இசைந்து வாழ்தல் என்பது இரண்டு மாடுகள் ஒரு வண்டியில் இணைக்கப்பட்டு நுகங்கால் மாட்டப்படுகிறது. இரண்டு மாடுகளும் ஒன்றாய் இழுத்தால் தான் வண்டி போகும். ஒரு மாடு வேகமாகவும் மற்றொன்று மெதுவாகவும் இழுத்தால் வண்டி சரியாக செல்ல இயலாது.சில மாடுகள் புதிதாக இணைக்கப்படும் போது தான் போன போக்கில் போகும். ஆனால் நாட்கள் ஆக ஆக பழக ஆரம்பித்து விடும்.நாம் போன போக்கில் போனால் அடி விழும் என்று சரியாக செல்ல பழகிக் கொள்ளும். இதைப் போன்றுதான் கணவன்,மனைவி புதிதாக சேர்ந்து வாழும்போது ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது இயல்பு.ஒருவரை ஒருவர் புதிதாக திருமணம் செய்து கொண்டபோது வசைச் சொற்களால் தாக்குவதும் இயல்பு. இச்சூழலில் உடனடியாக பிரிந்துவிட்டால் வாழ்க்கை வீணாய் போய்விடும். 

சற்று பொறுத்து வாழ்வதற்கு பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். இசைந்து போக பொறுமையுடன் வாழ ஆலோசனை சொல்ல வேண்டும். மாறாக பிரச்சனை செய்வது போன்று நடந்து கொண்டால் எனக்குச் சொல் நான் வந்து உன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுகிறேன் என்று தவறாக வழி நடத்த கூடாது. இன்று பெற்றோராலேயே      அநேக பிள்ளைகள் திருமண வாழ்க்கை வீணாய் போய் விடுகிறது. உங்கள் பாசம் பிள்ளைகள் இணைந்து வாழ தடையாக அமையக்கூடாது.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி