திடீர் பாசம்
தெலுங்கானா மாநிலத்தில் திடீரென்று மாமியார் ஓடிவந்து மருமகளை கட்டிப் பிடித்தார். இந்த பாசப் போராட்டத்திலிருந்து மருமகள் விடுவித்துக்கொண்டு போலீசில் போய் தன் மாமியார் மேல் புகார் கொடுத்துள்ளார். இது என்ன இவ்வளவு மோசமான மருமகளா என்று நினைக்கிறீர்களா?
தெலுங்கானா மாநிலத்தில் ஒரு வாலிபருக்கும், ஒரு இளம் பெண்ணுக்கும் திருமணமானது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கணவர் வேலை நிமித்தமாக ஒரிசா மாநிலத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இச்சூழலில் மாமியார்-மருமகள் பனிப்போர் அடிக்கடி நடந்துக்கொண்டே இருந்தது. இந்த சூழலில் மாமியாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தனிமையில் இருந்த மாமியாருக்கு மருமகள் மேல் பாசம் பொங்கியது. தான் பெற்ற இன்பத்தை மருமகளுக்கும் கொடுக்க வேண்டும் என்ற அவா பெருகியது.
எழுந்து புறப்பட்டார் மருமகளைத்தேடி, மருமகளைப் பார்த்தவுடன் கட்டிப்பிடித்துக்கொண்டார். அருகில் இருந்த குழந்தையையும் அணைத்து முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார். தற்போது மருமகளுக்கும் கொரோனா உறுதியானது.
மருமகளை பழிவாங்கும் மாமியார், மாமியாரை பழிவாங்க நினைக்கும் மருமகள் என்று எங்கு பார்த்தாலும் இந்த மோதல்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக திருமணம் முடிந்தவுடன் மருமகளை மாமியார் ஆட்டிப் படைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். தன் மகனோடு இணைந்து புதிதாக வந்திருக்கிற மருமகளை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.
நாளாக நாளாக கட்சி கூட்டணி மாறுகிறது. தாயாருக்கு வயதாகி விடுகிறது. மருமகளுக்கும் மகனுக்கும் இடையே உறவுகள், புரிந்து கொள்ளுதல்கள் வலுப்படுகிறது. இப்பொழுது மருமகள், மாமியார் மீது அதிகாரம் செய்யத்தொடங்கி விடுகின்றனர். இது அநேக வீடுகளில் நடக்கும் நாடகம்.
இவ்வாறு நடைபெறுவதை எப்படி தவிர்க்க வேண்டும் என்பதை முதலாவது உணர வேண்டியது மாமியார்களே! உங்களுக்கு பெலன் இருக்கும் போது அன்பு செய்வதற்கு பதிலாக அதிகாரம் செய்து பழகாதிருங்கள். எதை விதைக்கிறீர்களோ அதைத்தான் அறுப்பீர்கள். அன்பை உங்கள் மருமகள் உள்ளத்தில் வந்த உடன் விதைத்தால், உங்கள் வயதான காலத்தில் அன்பான உபசரிப்புகளை உங்கள் மருமகளிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.
உங்கள் மகனிடம் உங்கள் மருமககளைப் பற்றி குறைவாகப் பேசுவதை தவிருங்கள். ஏனென்றால் உங்கள் மகன் குறிப்பிட்ட நாள்களுக்குப் பின் மனைவியினால் ஈர்க்கப்பட்டு அவள் பக்கம் சாய்ந்து விடுவான். அதன் பின்பு உங்கள் வாழ்க்கைத்தான் நிர்பந்தமான நிலைக்குள் போய்விடும்.
கொஞ்சகாலம் வாழப்போகிற இவ்வுலகத்திலே அன்பு செலுத்தி வாழப்பழகுங்கள். மருமகளை ஓரம் கட்டி வைக்க உங்கள் மகனை பயன்படுத்தாதிருங்கள்.
வயதாகும் போது பெண்கள் எப்படி இருந்தால் நல்லது என்பதற்கு தீமோத்தேயு புத்தகத்தில் பவுல் குறிப்பிடுகிறதை பாருங்கள். பெண்கள் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவி, உபத்திரவப்படுகிற மக்களுக்கு உதவி செய்து, சகல விதமான நல்ல கிரியைகளையும் கவனமாக செய்து, நற்சாட்சி பெற்றவர்களுமாக வாழ முற்பட வேண்டும்.(1 தீமோத்தேயு 6:10)
புதிதாக வந்துள்ள மருமகள் உங்களுடைய தாராள குணத்தையும், பிறருக்கு உதவிடும் மனதையும், நல்லவள் என்று பெயர் பெறும்படியாக நீங்கள் நடந்து கொள்வதையும் அவர்கள் கேட்கட்டும். நீங்கள் ஒரு முன் மாதிரியான வாழ்க்கையை வாழுங்கள். அத்துடன் குடும்பத்தின் காரியங்களுக்காக ஜெபிக்கிறவர்களாக மாறுங்கள். திருச்சபைக்காக, நாட்டிற்காக என்று பல்வேறு காரியங்களுக்காக முழங்கால் படியிட்டு உங்கள் நேரத்தை கடவுளுடன் செலவிடுங்கள். இதைக்கண்டு உங்கள் மருமகள், பேரப்பிள்ளைகள் முழங்கால்களும் கடவுளுக்கு முன்பாக முடங்கும். உங்கள் ஜெபம் உங்கள் மருமகளுக்கும் உங்களுக்கும் இடையே நல்ல உறவை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக அமையட்டும். இன்று ஜெபிக்கிற பலர் தங்கள் மருமகளுடன் சரியான உறவை வலுப்படுத்துவதில்லை. ஏனென்றால் அவர்கள் ஜெப வாழ்வுக்கும், வீட்டில் நடந்து கொள்கிற வாழ்வுக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளது என்பதே அர்த்தம். யோசித்துப்பாருங்கள் ஜெபிக்கிற உங்களுக்கு விட்டுக்கொடுக்கிற மனப்பான்மை இல்லை, இசைந்து போகிற மனம் இல்லை, குறை சொல்லும் மனப்பான்மை அகலவில்லை, விரோதியாக மருமகளை பார்க்கும் பார்வை குறையவில்லை, சண்டைகளை தூண்டிவிடுகிற குணம் இன்னும் மாறவில்லை, வீடு வீடாய் போய் குடும்பக்காரியத்தைப் பற்றி பேசி அசிங்கப்படுத்துகிற நாவு இன்னும் குணப்படவில்லை. அவைகளிலே மன மாற்றம் ஏற்பட வேண்டும். அப்படி ஏற்பட்டால் தான் பனிப்போருக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். உண்மையான அன்பு வெளிப்பட முடியும்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Very useful message
ReplyDelete