எப்பொழுது கண்டிப்பது?
பெற்றோர் கண்டித்தால் பெற்றோரையே போட்டுத் தள்ளி விட வேண்டும் என்ற அளவிற்கு கொண்டுச்சென்று விடுகிறது. சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் இது போன்று ஒரு செயல் கிறிஸ்தவக் குடும்பத்திற்குள்ளே நடந்தேறியது. 60 வயது மதிக்கத்தக்க தகப்பனார் தனது மகனாலே அடித்துக்கொல்லப்பட்டார். காரணம் தனது வாலிப மகன் காலையிலேயே குடித்துவிட்டு வீட்டில் கலகம் பண்ணியுள்ளான். இதனை தகப்பனார் கண்டித்துள்ளார். இப்படியெல்லாம் குடித்துவிட்டு தொந்தரவுச் செய்கிறியே இது நல்லா இருக்குதா? என்று கண்டித்துள்ளார். இந்த வாக்குவாதமானது முற்றியது. குடித்துவிட்டு வந்த அந்த இளைஞன் அங்கு கிடந்த கம்பால் பெற்ற தகப்பனையே தாக்கியுள்ளார். நிலைதடுமாறிய அந்த தந்தை வீட்டிற்குள்ளேயே விழுந்தார். விழுந்த போது தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே மரித்துப் போய் விட்டார்.
இந்த சம்பவத்தை வாசிக்கும் போதே நமக்கு புரிகிறது மது அருந்தி விட்டால் செய்கிறது என்னவென்றே தெரியாமல் தவறுகளை துணிகரமாகச் செய்து விடுகின்றனர். இதற்கு காரணம் என்ன? இவ்வாறு இளைஞர்கள் மதுவுக்கு அடிமைப்படுவதற்கான சூழல்கள் எவ்வாறு உருவாகின்றது? இளைஞர்களை மதுப் பழக்கத்திலிருந்து காப்பதிலே திருச்சபையின் பங்கு என்ன? ஆலயத்திற்கு செல்லும் பழக்கமுள்ள இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படாததின் காரணம் என்ன?
முன்பெல்லாம் மேலை நாடுகளில் தான் இளைஞர்கள் அதிகமாக குடிக்கின்றனர் என்று பேசிக்கொள்வோம். இப்பொழுது நமது நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவியர்களும் மதுவுக்கு அடிமையாக மாறுவது நமக்கு அதிர்ச்சியைக் கொடுத்து வருகின்றது.
இந்தியாவில் உள்ள இளைஞர்களைப் பொறுத்த வரையில் இளைஞர்கள் வாழ்வின் மதிப்புகளையும், வாழ்வின் அர்த்தங்களையும் தேடுகிறவர்களாக இருக்கின்றனர். ஏன் வாழ்கிறோம்? நாம் வாழ்வதின் அர்த்தம் என்ன? நாம் குடிப்பதன் மூலமாக புதிய அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளுகிறோமா? நமது உணர்வுகளிலே மாற்றங்கள் எப்படி நடக்கின்றன என்பதைத் தெரிந்துக் கொள்ளலாமே என பல்வேறு காரணங்களாலேயே குடித்து பழகுகின்றனர். துவக்கத்தில் மதுவினால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றத்தைப் புரிந்துக் கொள்ளுவதில்லை. ஆனால் எப்பொழுதாவது ஒரு வாய்ப்புக் கிடைக்குமா? என்று வாய்ப்புக்காகவே பலர் காத்திருக்கின்றனர். மது அருந்தும் போது கிக் (kick) பெறுவதற்காக மதுவின் அளவை மெதுவாக அதிகரிக்க விரும்புகின்றனர்.
நாளடைவில் சிறு பிரச்சனைகள் வந்தாலும் அதனைக் காரணம் காட்டி மதுக்கடைகளுக்குச் செல்லுகின்றனர். இறுதியில் விடமுடியாத அளவிற்கு மாட்டிக்கொள்ளுகின்றனர். இப்பொழுது மது இல்லாவிட்டால் உடலளவிலும், மன அளவிலும் சோர்ந்துப் போய்விட்டதாகக் கருதுகின்றனர். எனவே எங்கேப் போனாலும் மதுகடைகள் எங்கே இருக்கிறது தேடி அலைய ஆரம்பித்து விடுகின்றனர்.
இன்றைய சூழலில் அரசாங்கமே மதுகடைகளைத் தாராளமாக திறந்து விடுவதால் யாரும் தேடி அலையாமல் நினைத்தவுடன் குடித்து விடுகின்றனர். கிறிஸ்தவர்கள் மதுக்குடித்தால் ஆலயத்தின் பக்கமே பார்க்க முடியாதது அந்த காலம். ஆனால் இன்று ஆலய ஆராதனை முடிந்ததும் பார்ட்டி என்றும், பண்டிகைக் காலங்களில் குடித்து வெறித்தும், வாந்தி பண்ணியுமே கொண்டாடுகின்றனர். கடவுள் அருவருக்கும் அளவிற்கு மக்கள் குடித்தும், கும்மாளம் போடுவதுமாய் மாறிவிட்டது.
இளைஞர்களுக்கு மாதிரியாய் விளங்க வேண்டிய முதியோர்கள் தெருக்களில் தள்ளாடிக் கொண்டு அலைவதால் புத்திச் சொல்வதற்கு ஆட்கள் இல்லை. போதகர்கள் நாம் என்னச் செய்ய முடியும்? நமக்கு எதுக்கு இந்த வம்பு? யாரும் எக்கேடு கெட்டுப்போட்டும்! போனமா பிரசங்கத்தை பண்ணினோமோ, வந்தோமா என்ற சூழலுக்குள் போய்விட்டனர். எனவே கிறிஸ்தவ சமுதாயத்தில் சாரமற்ற நிலை உருவாகிவிட்டது. அதற்கு எடுத்துக்காட்டாகத் தான் நான் மேலே குறிப்பிட்ட சம்பவம்.
இன்றைய சூழலில் மீண்டும் இளைஞர்கள் மத்தியில் மது, போதைப் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட வேண்டியது அவசியம். இதை சிறு வயது முதற்கொண்டே அவர்கள் உள்ளத்தில் பதியவைக்க வேண்டும். இதனையும் தாண்டி ஒரு இளைஞன் மதுவிற்கு அடிமையானால் மது அடிமைகளின் விடுதலைக்காக இயங்கும் நிறுவனங்களில், மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும். ஏனென்றால் மதுவுக்கு அடிமையானவர்கள் இப்பொழுது ஒரு "நோயாளி". அவர்கள் குணமடைய மருத்துவமனைகளில் சேர்த்தே ஆகவேண்டும்.
அதேவேளை கிறிஸ்தவ இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாய் இருக்கிற இளைஞர்கள் மீது அக்கறைச் செலுத்தி, அவர்களை வெளியேக் கொண்டு வர முற்படவேண்டும். இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு நெட் ஒர்க்கை உருவாக்கி மது அடிமைகளை வெளியேக் கொண்டு வர ஊக்கம் அளிக்க வேண்டும்.
மதுவுக்கு அடிமையானவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாகி விடுவார்கள் என்று தப்புக் கணக்குப் போடக் கூடாது. திருமணம் என்பது மது அடிமைகளை வெளிக்கொண்டு வருகிற இயந்திரம் அல்ல. மது அடிமைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் வருகிற பெண்ணுக்கு அடியும், அவமானமும் ஏற்படும். கொண்டு வந்த நகை, பணம் எல்லாம் சில மாதங்களுக்குள் மாயமாகி விடும். எனவே மது அடிமைகளை சரிச் செய்யாமல் திருமணம் செய்து வைத்து பெண்களைக் கஷ்டப்படுத்தி விடாதிருங்கள். மது குடும்பத்திற்கும், நாட்டிற்கும், திருச்சபைக்கும் கேடு.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment