திருமணம் திருச்சபையின் பொறுப்பு
இந்த திருமணத்தைப் பொறுத்தவரையில் திருச்சபையின் பங்கு என்ன? திருமணத்தைப் பொறுத்தவரையில் திருச்சபையின் விளக்கம் இறுதியானதா? அல்லது திருமறையின் விளக்கம் இறுதியானதா? என்ற கேள்விகள் நமக்குள் எழுகின்றன. திருச்சபை ஒருவருக்கு எத்தனை முறைதான் திருமணம் செய்து வைக்கும்? குழந்தைகள் பிறந்த பின்பு ஒருவருக்கு திருச்சபை திருமணம் செய்து வைக்கிறது என்றால் ஆயர்களுடைய பங்களிப்பு என்ன? மக்கள் எப்படி வந்தாலும் திருமணம் செய்து வைக்கிற சடங்கைத்தான் ஆயர்கள் செய்கிறார்களா? திருமறையிலிருந்து அவர்களுக்கு போதிக்கிற சத்தியம் தான் என்ன?
ஒருவன் ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணிக்கொண்டபின்பு, அவளிடத்தில் இலச்சையான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம். (உபாகமம் 24:1) என்ற திருமறை வசனத்தை காட்டி கடவுள்தான் மணவிலக்கை அளித்துள்ளார் என யூதர்கள் வாதிட்டனர். இதன் அடிப்படையில்தான் “கெட்ட நடத்தை” என்பதற்கு விளக்கங்களை எழுதினர் அன்றைய திருமறை அறிஞர்கள். சாமாய் (shammai) குழுவினர் கெட்ட நடத்தை என்பது விபச்சாரம் என்று விளக்கம் கொடுத்தனர். ஆனால் ஹில்லேல் (Hillel) குழுவினரோ சாதாரண காரியங்களைக் கூட கெட்ட நடத்தையாக குறிப்பிட்டனர். குறிப்பாக ஆகாரத்தை ஆயத்தம் செய்யும் போது அது கருகி போனால் கூட மணவிலக்கு செய்யலாம் என்று கூறினர்.
இயேசுவோ மனிதர்களின் இவ்விதமான விளக்கங்களுக்கு முக்கியத்துவத்தை கொடுக்காமல், உயர்ந்த குறிக்கோளுடன் இணைக்கப்பட்ட திருமணத்தைப் பிரித்தால் கடவுளின் நியாயத்தீர்ப்புக்கு ஆளாவான் என்று குறிப்பிடுகின்றார்.
இன்றைய திருச்சபை திருமணத்தை நடத்தி வைப்பதில் காட்டுகிற அக்கறையை, திருமணப்பிரச்சனைகளைச் சரிச்செய்வதில் காட்டுவதில்லை. ஆகவே தான் எத்தனை திருமணங்களை வேண்டுமானாலும் செய்து வைக்கிறோம். சேர்ந்து வாழ்வதும் வாழாமல் போவதும் உங்கள் விருப்பம் என்று ஆயர்கள் விட்டுவிடுவது பரிதாப நிலையைச் சுட்டிக்காட்டுகிறது.
ஆட்டு மேய்ப்பன் தன் ஆடுகளில் ஒன்று முள்ளில் சிக்கி சத்தம் இடும்போது அதன் மீது அக்கறைக்காட்டாமல் இருப்பானோ? அப்படி அக்கறைக்காட்டவில்லை என்றால் அவன் கூலிக்காக வேலை செய்கிற கவலையீனமான பணியாள் அல்லவோ!
மற்றொரு புறத்தில் ஆயரின் வேலை திருமணத்தை நடத்தி வைப்பதுதானேயன்றி, திருமண வாழ்வில் பிரச்சனை வரும்போது ஏன் தன் மூக்கை நுழைக்கிறார். அவரிடம் நாம் உதவிக்கேட்டோமா? ஏன் அநாகரிகமான நம்முடைய வாழ்வில் அவர் தலையிடுகிறார். வந்தோமா, ஜெபித்தோமா, போனோமா என்று இல்லாமல் ஏன் நம்மீது தேவையில்லாத அக்கறை செலுத்துகிறார் என்று பேசுகிற கொழுத்த ஆடுகள் ஒருபுறம்.
இன்னும் ஒரு இடியாப்பச் சிக்கல் என்னவென்றால் போதிக்கிற ஊழியர்கள் குடும்பங்களே பிரிந்தும், மறுமணம் செய்துக்கொண்டும் வாழ்வதால் திருமணத்தைக் குறித்து உறுதியான போதனைகள் கொடுக்க இயலாத சூழல்களுக்குள் சென்றுகொண்டிருக்கிறது.
திருச்சபை மக்கள், போதகர்கள், ஊழியர்கள், உலக மக்கள் திருமணத்தைக் குறித்து தங்களுக்கு ஏற்ப போதனைகளை போதித்துக் கொண்டிருந்தாலும், திருமறையின் சத்தியம் என்பது மாறாத ஒன்றாகவே இருக்கிறது. பிசாசு இயேசுவிடம் சோதிக்க வந்த போது, இயேசுவை இடற செய்வதற்காகவே திருமறை வசனங்களை பயன்படுத்தினான். அது போலவே இன்றைய திருச்சபையும், போதகர்களும் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப போதித்து மன சாந்தி அடைந்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் உள்ளங்களுக்குள்ளே தெரியும், நாம் போதிக்கிறது தவறு. நாம் திருமறையை நமக்கு ஏற்ப புரிந்து கொள்கிறோம் என்பதும் தெரியும். ஆனால் இருதய கடினப்படுத்தி கொண்டு திருமண முறிவுகள் எல்லா இடங்களிலும் நடைபெறுகிறது. இதனுடைய உச்ச நிலைமைத்தான் வெஸ்ட் மினிஸ்டரில் நடைபெற்ற ஆராதனை.
இறைவன் மீண்டும் நம்மை திருமறைக்கு திரும்ப அழைக்கிறார். திருமறையை மீண்டும் இயேசுவின் பார்வையில் படிக்க வேண்டுமே அன்றி யூதர்களின் பார்வையில் சுயநலத்தோடு படிப்பபதைத் தவிர்ப்போம். ஆண்டவரே உம்முடைய வேதத்தின் அதிசயங்களைக் காணும்படி எங்கள் மனக் கண்களைத் திறந்தருளும்
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment