குடும்பத்திற்கு நியாயமான வருமானம்
தூத்துக்குடியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டான். அவன் பெயர் ஜோனத்தான் தோர்ன். இங்கிலாந்து சட்ட அமலாக்க அமைப்புகள் மூலம் பல முறை போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏறக்குறைய 21 முறை தண்டனையும் பெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்தவர் யாரிடமும் சிக்காமல் வந்துள்ளார். இலங்கைக்கு தப்ப முயன்றபோது கியூ பிரிவு போலீசாரிடம் மாட்டிக் கொண்டார்.
கிறிஸ்தவ பெயர்களைக்கொண்டவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு செய்தித்தாள்களில் வரும் போது இறைப்பெயருக்கு அவமானத்தை கொண்டுவருவதாக அமைந்துவிடுகிறது. இறைமக்கள் நல்ல வாழ்க்கை வாழும் போது இறைவனின் நாமத்தை மக்கள் புகழுவர். அப்படியானால் கிறிஸ்தவர்கள் தாங்கள் தெரிந்தெடுக்கும் தொழில் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். எப்படியும் சம்பாதித்து ஆடம்பரமான வாழ்வு வாழ்ந்தால் போதும் என்று நினைக்கக்கூடாது. குறைவான வருமானம் வந்தாலும் திருப்தியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
போதைப்பொருள் விற்பது, கள்ளத்தனமாக மது உற்பத்தி செய்வது, திருடுவது, எடைக்கற்ககளை மாற்றுவது, அடுத்தவர்கள் இடத்தை நயவஞ்சகமாக ஏமாற்றி எடுத்துக்கொள்வது, அரசாங்க இடங்களை, கோயில் இடங்களை போலி சான்றிதழ்கள் மூலம் விற்று விடுவது, அடுத்தவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடுவது போன்ற வேலைகளை ஒரு கிறிஸ்தவன் செய்யக்கூடாது. இப்படிப்பட்ட பணிகளை செய்ய முற்படுகிற கணவரை நிச்சயமாக மனைவியர் ஊக்குவிக்கக் கூடாது. அவர்கள் கொண்டு வருகிற தவறான சம்பாத்தியத்தை அனுபவிக்க ஆசைப்படக்கூடாது.
அநியாயமாய் வருகிற அதிக வருமானத்தைக்காட்டிலும், நியாயமாக வருகிற கொஞ்ச வருமானமே உத்தமம் என்று திருமறை நமக்குப் போதிக்கிறது. நான் திருச்சபையில் கொள்ளையடிக்கவில்லை, வெளியே தானே தவறான பிசினஸ் என்று கூறாதேயுங்கள். கடவுள் பார்வையில் கடவுளின் கோயிலுக்குள்ளும், வெளியேயும் நீங்கள் நியாயமாக வாழ வேண்டும். நீங்கள் சம்பாதிக்கிற சம்பாத்தியத்தை ஒரு அரசாங்கமே ஏற்றுக் கொள்ளமுடியவில்லையென்றால், இறைவன் எப்படி ஏற்றுக்கொள்ளுவார்? இறைவன் ஏற்றுக் கொள்ளாத சம்பாத்தியத்தை மனைவியாகிய/கணவனாகிய நீங்கள் ஏற்றுக் கொள்ளப்போகிறீர்களா?
"விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப்பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம்.எங்களோடே பங்காளியாயிரு… என்று அவர்கள் சொல்வார்களாகில்;என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக." (நீதிமொழிகள் 1:13 to 15) என்று திருமறை நம்மை எச்சரிக்கிறது. ஆகவே நீதியான நியாயமான வழியில் மட்டுமே சம்பாத்தியம் அமைய வேண்டும்.
அநியாயமாக சம்பாதித்து வைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அவைகள் அடைத்து வைக்கப்பட்ட ஒரு பறவை திடீரென்று சிறகடித்து பறந்து செல்வது போல் சென்று விடும். அன்று நீங்கள் வேதனையடைவீர்கள். நீங்கள் தவறாக சம்பாதிப்பதில் எடுத்து கடவுளுக்கு கொடுப்பதினால் மனிதர் உங்களை மெச்சிக்கொள்ளலாம். ஆனால் அவைகள் கடவுள் பார்வையில் தீட்டானவைகள் என்பதை மறந்து விடாதேயுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment